இளமை போட்டோ, பகீர் மோசடி, மேட்ரிமோனி 'மன்மதன்' கைது

மேட்ரிமோனி செயலியில் இளமையான புகைப்படங்களைப் பதிவிட்டு, மன்மதன் போல் காதல் வலைவீசிப் பல பெண்களிடம் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய நபர், தாம்பரம் அருகே கைது செய்யப்பட்டார்.
இளமை போட்டோ, பகீர் மோசடி, மேட்ரிமோனி 'மன்மதன்' கைது
Published on: 

விசாரணையில் அவருக்கு ஏற்கனவே மனைவி, மகள் இருப்பது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதல் வலையில் பெண்களை வீழ்த்தியதன் பின்னணி குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இளமை திரும்புதே...

இளமைக்கால புகைப்படத்தை முகமூடியாக்கி, காதல் எனும் மாயவலை விரித்துப் பல பெண்களின் வாழ்க்கையையும் செல்வத்தையும் சுருட்டிய போலி மன்மதன் ராஜீவ் தான் இவர்.

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ், 'தமிழ் மேட்ரிமோனி' செயலி மூலம் பெண் தேடுவதாகக் கூறி, இளம் பெண் ஒருவரிடம் அறிமுகமாகியுள்ளார். தாம் திருமணமாகி விவாகரத்தானவர் என்றும், தனியார் நிறுவனத்தில் மனிதவள அலுவலராக பணியாற்றி வருவதாகவும் கூறிய ராஜீவ், தமது இளமைக்கால புகைப்படங்களை அனுப்பி வைத்து அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார்.

நகை, பணம் மோசடி

திரையில் ஜொலிக்கும் கதாநாயகன் போல புகைப்படங்களில் இருப்பதை உண்மை என அந்த அப்பாவி பெண் நம்பி பேசியுள்ளார். நாளடைவில் இருவரும் நேரில் சந்தித்துப் பழகிய நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி, அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்பெண்ணின் காதல் மயக்கத்தை பயன்படுத்திக் கொண்ட ராஜீவ், அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

பல பெண்களிடம் மோசடி

ஒரு கட்டத்தில், ராஜீவால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில், ராஜீவைக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலி மன்மதனான ராஜீவுக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகளும் இருப்பது தெரியவந்தது. உண்மையான குடும்ப விவரங்களை மறைத்து, மேட்ரிமோனி செயலி மூலம் பல மாவட்டங்களை சேர்ந்த பெண்களை அவர் ஏமாற்றியதும், வாட்ஸ்-அப்பில் பெண்களிடம் ஆபாசமாக பேசிப் பணம், நகைகளை பறித்துள்ளதும் அம்பலமானது.

போலீசார் அறிவுறுத்தல்

தனியார் நிறுவனத்தில் எச்.ஆர். ஆக ராஜீவ் பணியாற்றியபோது, வேலை வாங்கித் தருவதாகக்கூறி 7 பேரிடம் 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததால், பணியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான ராஜீவின் செல்போனை ஆய்வு செய்ததில், இன்னும் பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ள நிலைய மேட்ரிமோனி செயலி மூலம் ராஜீவால் ஏமாற்றப்பட்டு பணம் அல்லது நகைகளை இழந்த பெண்கள் யாரேனும் இருந்தால், தயங்காமல் சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வீடியோவைக் காண

இளமை போட்டோ, பகீர் மோசடி, மேட்ரிமோனி 'மன்மதன்' கைது
மனைவி இருக்க, காதல் நாடகம் நடத்திய 'மன்மதன்' கைது