

எடப்பாடி பழனிசாமி அறிக்கை
இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டில், தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுக்கின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது.
3 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டவர்கள், 6 மாத காலம் நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய துயரமாக மாறி நிற்கிறார்கள். இந்த அரசு அமைந்த முதல் நாள் தொட்டு தமிழக மாநில உரிமைகளை அடகு வைக்கத் தொடங்கிவிட்டது.
’ஜனநாயகனும் காவிரி உரிமையும்’
முதல்வர் விஜய் நடித்து வெளிவந்த ‘ஜனநாயகன்,’ கர்நாடகாவில் வெளியிடப்படும் நாள் வரை, காவிரியில் நமக்கு உள்ள உரிமை குறித்தோ, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்கிற நிலைப்பாடு குறித்தோ முதல்வர் விஜய் எதுவுமே வாய் திறந்து பேசவில்லை. இதனால், ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட்டு, குறுவை சாகுபடி முழுமையாக இல்லை எனும் கொடூர நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், கடைமடை வரை நீர் சென்றடையவில்லை. சம்பா சாகுபடி செய்கிற விவசாயிகளும் இன்றைக்குச் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்து உள்ளனர். ஆனால், இதுகுறித்தெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் அரசு வேடிக்கை பார்க்கிறது.
‘மேகதாதுவிலே அணை கட்டுவோம், யார் சொல்லியும் கேட்க மாட்டோம்’ என்று கர்நாடகா முதல்வர், ஆணவப் போக்கோடு தொடர்ந்து பேசி வரும் காட்சிகளைப் பார்க்கிறோம். தமிழக முதல்வர், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்பதற்கு உருப்படியான எந்த வேலையும் செய்யாமல், தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
காங்கிரஸ் தலைவர்களுடன் மேகதாது பிரச்சினை குறித்துப் பேசுவதற்கோ, கர்நாடகாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வரிடம் இதுகுறித்துப் பேசிப் புரிய வைப்பதற்கோ எள்ளளவும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.
‘தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்குங்கள்’ என்று எவ்வளவோ முறை அதிமுக சார்பில் வலியுறுத்தியும் கேட்கவில்லை.
தமிழகத்தில் ரூ.1,000 கோடி போதைப்பொருள்
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளது. 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் தவெக நிர்வாகியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் இந்த ஆண்டிலேயே அதிக அளவிலான போதைப்பொருள் பறிமுதல் என்று கூறி, போதைப்பொருளைப் பறிமுதல் செய்கின்றனர். இந்தக் கைது நடவடிக்கை அனைத்தையும் மத்திய அரசின் கீழ் இயங்குகின்ற வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொள்கிறது.
தமிழக காவல்துறையோ, உளவுத்துறையோ இதனைக் கண்டறியவுமில்லை, இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கு காணினும் கூலிப்படைகள்
எங்கு பார்த்தாலும் கூலிப்படைகளின் கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு, கொ*கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பல்கிப் பெருகிக்கொண்டே இருக்கின்றன. கொ* நடப்பதெல்லாம் சகஜம்தான் என்கிற தொனியில் தவெக அமைச்சர்கள் சாதாரணமாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
குற்றவாளிகளைப் பிடித்துச் சிறையில் அடைத்தால், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்து, சிறை நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அரசுக்குப் பாடம் எடுக்கின்ற காட்சிகள் வெளியாகின்றன. காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிற கைதிகளும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற கைதிகளும் தப்பித்து வெளியேறுவது தொடர்கதையாகி உள்ளது.
பொம்மை முதலமைச்சர்
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகள் சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்துகின்றன. செஞ்சி அருகே காணாமல் போன குழந்தை, இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்கப்படாத சூழல் இருக்கிறது.
‘எங்கும் போதை, எதிலும் போதை’ என்கிற அளவுக்கு மாநிலமே தள்ளாடுகிற நிலை ஏற்பட்டுள்ளபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதுகுறித்த புரிதல்கூட இல்லாமல் பொம்மை போல் அமர்ந்திருக்கிறார் முதல்வர் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விஷயம்.
கள்ளக்குறிச்சி விவகாரம்
சட்டம் - ஒழுங்கு ஒரு பக்கம் சமூக விரோதிகளால் சீரழிக்கப்படுகிறது என்றால், இன்னொரு பக்கம் வேலியே பயிரை மேய்வது போல, தவெகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சட்டம்,ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ, ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து நீதிமன்றம் வரை சென்ற பிறகே, தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
துணை சபாநாயகர் மீது புகார்
துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவான துணை சபாநாயகரிடம், கோரிக்கை மனு கொடுக்கப் போனவர் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், பின்னர் காவல்துறையை வைத்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் கொ* செய்வேன் என்று மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், குற்றச்சாட்டாகவே இன்னும் தொடர்கிறது.
பெண் காவலரிடம் இரவில் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்ட தவெக அமைச்சர் காந்திராஜ் இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, ஆய்வு செய்கிறேன் என்றுகூறி, பணியில் இருந்த பெண் காவலரை விசாரிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது மட்டுமல்லாமல், அவரிடம் கேள்வி கேட்டு, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அமைச்சர் பரவ விடுகிறார் என்று சொன்னால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது யார்?
பெண் அதிகாரி அதிர்ச்சி புகார்
தவெகவைச் சேர்ந்த ஈரோடு மாவட்ட அமைச்சர், ‘இரவு நேரத்தில் கோப்புகளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்’ என்று பெண் ஐபிஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளார்.
தவெகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ கூட்டுப் பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர் என்று மீண்டும் மீண்டும் கூறியும், புகார் பதிவு செய்யப்படாமல், விசாரணை நடத்தப்படாமல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் கிடைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது இந்தப் பொய்க்கால் குதிரை அரசு.
அரிசி கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதோடு, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் பலமடங்கு உயர்ந்துள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
மின் கட்டணம் 3 மடங்கு, 4 மடங்கு உயர்ந்துள்ளது என்ற குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து வந்த பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மின்கட்டணச் சுமையைத் தமிழக மக்களின் தலையில் ஏற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு.
ஆங்காங்கே தொடர் மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக, பல்வேறு வகையில் மக்கள் அவதிப்படும் துர்ப்பாக்கிய நிலை நிலவுகிறது.
தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?
‘ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும்’ எனும் எந்த வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலில், விலைவாசி உயர்வும், மின்கட்டண உயர்வும் சாதாரண மக்களை வாட்டி வதைக்கிறது.
இதுகுறித்தெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக அரசை வலியுறுத்தினால், பொறுப்புள்ள முறையில் முதல்வர் உள்ளிட்ட எந்த அமைச்சரும் ஒருநாளும் பதில் சொல்வதும் இல்லை, நடவடிக்கை எடுப்பதுமில்லை.
டிசம்பர் 2ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
மக்கள் விரோத தவெக ரீல்ஸ் மாடல் ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையிலும், மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியை மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்துகின்ற வகையிலும், அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில், டிசம்பர் 2ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
வீடியோவில் காணலாம்