

அதிலும், பிளக்ஸ் பேனரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோரின் புகைப்படங்களை வைத்து, அன்னதானம் என்ற பெயரில் அரசகுமார் இப்படி ஒரு நடனத்தை ஏற்பாடு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த காட்சியை பார்க்கும் அன்பில் மகேஷின் ஆஸ்தான நண்பர்கள் ”ரண களத்திலும் கிளுகிளுப்பு தேவையா?” என வறுத்தெடுக்கும் மனநிலைக்குதான் தள்ளப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகள் சங்கம்
சென்னை சாலிகிராமத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி.அரசகுமார் தனது அரசியல் பலம் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகளை பெற்றுத் தருவதாககூறி ரூ.400 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
நிபந்தனை ஜாமீனில்...
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு மோசடி உண்மைதான் என்பதற்கான சில ஆவணங்கள் சிக்க பி.டி.அரசகுமாரை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி அரசகுமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, சிறையில் அடைத்து 92 நாட்கள் கடந்த நிலையிலும் அரசகுமாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதை ஏற்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அன்பில் மகேஷ் கைதான நிலையில்...
இந்த மோசடி வழக்கில் ஏ-ஒன் குற்றவாளியான அரசகுமார் கடந்த சில நாட்களாக வெளியில் இருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டும் நடந்து வருகிறது. இதனால், அன்பில் மகேஷின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வருத்தத்தில் உள்ளனர்.
ஆனால், இதுகுறித்த கவலையில்லாமலும், அரசியல் புயலையே புழுதிபோல் ஊதித் தள்ளுவது போன்றும் பெண்கள் குத்தாட்டம் போடும் நிகழ்ச்சியை அரங்கேற்றி ஆக்டிவாக உள்ளார் அரசகுமார்.
கவர்ச்சி நடனத்திற்கு ஏற்பாடு
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவிற்கு வரும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக மிகப்பெரிய அளவில் கூடாரம் அமைத்துள்ள அவர், அந்த கூடாரத்தின் வெளியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்களுடன்கூடிய பேனரையும் வைத்து தூள் கிளப்பி உள்ளார்.
வழக்கெல்லாம் ஒரு விஷயமா? ஜாமீனில் உள்ளபோதே கெத்து காட்டிவிட வேண்டும் என்றநோக்கில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதுகூட ஏற்புடையதுதான், ஆனால் மக்களை குஷிப்படுத்துவதற்காக இளம்பெண்கள் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி நடனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதுதான் முகம் சுழிக்க வைத்துள்ளது.
விடுதலை என்றால்...
அதிலும், தனக்கு கணைய பாதிப்பு இருப்பதாகவும், உடல்நிலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அரசகுமாரின் ஏற்பாட்டிலேயே இந்த குத்தாட்டம் தேவையா? என்பதுதான் உடன்பிறப்புகளின் கேள்வியாக உள்ளது. இதுமட்டுமல்லாது, ஜாமீனில் உள்ளபோதே இந்த அரங்கேற்றம் என்றால் நிரந்தர விடுதலை என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்வாரோ? எனவும் கூறுகின்றனர்.