மு.க.ஸ்டாலின், உதயநிதி காட்டமான பதிவு - வன்னி அரசு பதிலடி

பட்டியலின மாணவர்கள் மீது எங்களைவிடவா மற்றவர்களுக்கு அக்கறை இருந்துவிட முடியும் என அமைச்சர் வன்னி அரசு ஒருபக்கம் பதிலடி கொடுக்க, மறுபக்கம் தமிழக அரசு தரப்பிலும் உதவித்தொகை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு
அமைச்சர் வன்னியரசு நியூஸ்தமிழ்24x7
Published on: 

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை சிதைப்பதில் தவெக அரசுக்கு அப்படி என்ன வெறி? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள நிலையில் பில் வரவில்லை, மெயில் வரவில்லை என சோப்ளாங்கி அரசு இழுத்தடிக்காமல் உதவித்தொகையை விடுவிக்க வேண்டும் என உதயநிதியும் காட்டம் தெரிவித்துள்ளார்.

இதற்கு, பட்டியலின மாணவர்கள் மீது எங்களைவிடவா மற்றவர்களுக்கு அக்கறை இருந்துவிட முடியும் என அமைச்சர் வன்னி அரசு ஒருபக்கம் பதிலடி கொடுக்க, மறுபக்கம் தமிழக அரசு தரப்பிலும் உதவித்தொகை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காழ்ப்பு ஏன்?
மு.க.ஸ்டாலின் பதிவுநியூஸ்தமிழ்24x7

த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பட்டியலின மாணவர்களின் கனவு நனவாகி வரும் நிலையில் இந்த திட்டத்தையே தவெக அரசு சிதைத்து வருவதாக தனது சமூகவலைதளபக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இந்தக் கல்வியாண்டில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.

மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு என்ன உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? திமுக அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே எனவும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

வன்மையாக கண்டிக்கிறேன் - உதயநிதி

அதேபோல், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இந்த சோப்ளாங்கி அரசு இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் காட்டமாக பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதித்துறை என்று பெயரை மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். அதனால், வழக்கம்போல பில் வரவில்லை, மெயிலும் வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த டம்மி முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக்கூறி உள்ளார்.

யாருக்கு அக்கறை?
வன்னியரசு பதில்நியூஸ்தமிழ்24x7

எங்களைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை இருக்க முடியும்? - வன்னி அரசு

இதனிடையே, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் வன்னி அரசுவிடம் கேட்டபோது, ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக யாரோ எழுதி கொடுத்ததை வைத்துக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், அம்பேத்கர் அயலக திட்டத்தை முந்தைய அரசை விட சிறப்பாக செயல்படுத்துவதாகவும் கூறினார்.

மேலும், பட்டியலின மாணவர்கள் மீது எங்களைவிட வேறு யாருக்கும் அதிக அக்கறை இருக்க முடியும்? என கேள்வி எழுப்பிய அமைச்சர் வன்னி அரசு, அரசின் மீதான காழ்ப்புணர்ச்சியை திமுக தங்கள் மீது திருப்பிவிடுவது அப்பட்டமாகவே தெரிவதாகவும் குற்றம்சாட்டினார்.

ரூ.30.24 கோடி விடுவிப்பு - அரசு விளக்கம்

நிதி விடுவிப்பு
அரசு விளக்கம்நியூஸ்தமிழ்24x7

இதனிடையே, தமிழக அரசு தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகைத் திட்டம் மூலம் 2026-27 கல்வியாண்டில் இதுவரை 366 மாணவர்களுக்கு உதவித் தொகை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் கல்வி பயிலும் 84 மாணவர்களுக்கு ரூ.30.24 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கான உதவித் தொகை விடுவிப்பில் எந்தவித தாமதமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.