

தவெக ஆட்சியை கலைக்க திமுக காய் நகர்த்த தொடங்கி விட்டதா? என்ற சந்தேகத் தீயை ரகுபதியின் பேட்டி பற்ற வைத்திருக்க, தவெக எப்படி ஆட்சியை தற்காத்துக் கொள்ளப் போகிறது? என்பது பலரது கேள்வி.
ஆட்சி மாற்றம் நிகழும் - மு.க.ஸ்டாலின்
விரைவிலேயே ஆட்சி மாற்றம் நிகழும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி ஒட்டு மொத்த திமுக கூடாரமும் பேசிவருவது தொடர் கதையாகவே மாறி விட்டாலும், முன்னாள் அமைச்சர் ரகுபதியின் சூசக பேட்டி அரசியலில் சூறாவளியை கிளப்பியிருக்கிறது.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, தவெகவில் 60 முதல் 70 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு, அடுத்த வார்த்தையிலேயே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக இணைந்து தனியாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பொடி வைத்து பேசினார்.
தவெகவில் மொத்தமாக இருக்கும் 109 எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேலான எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் வெளியேறினால் ஆட்சி கவிழும் என்ற ரகுபதி, ஆளுநர் ஆட்சி வந்து வேறு யாராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் மீண்டும் பொதுத் தேர்தல் வந்து திமுக வெற்றி பெறும் என மனக் கணக்கு போட்டார்.
நேரு இல்ல திருமண விழாவில்...
இரு நாட்களுக்கு முன்பு கே.என்.நேரு இல்ல திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெகவின் மோசமான ஆட்சி முடிவுக்கு வந்து விரைவிலேயே நல்ல சூழல் அமையும் என இலை மறை காயாக கூறினார். தற்போது தவெகவில் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
அதோடு நிற்காமல் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி திமுகவுக்கு இருப்பதாக கூறியதோடு, மீண்டும் தேர்தல் வந்தால் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.
தவெகவில் எம்.எல்.ஏ. ஆகியிருக்கும் பெரும்பாலானவர்கள் முதன் முறை எம்.எல்.ஏ.க்கள். முதலமைச்சர் விஜய்யின் முகத்திற்காக தான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியில் அமர முடிந்தது என்ற நிலையில், ஆட்சிக்கு வந்து ஆறே மாதத்தில் 70 பேர் வரை அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி சொல்வது சற்று ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆனால், ரகுபதியின் பேச்சை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது போல, தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவெடுக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தகவலை உறுதிப்படுத்தினாரா?
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை தோற்கடித்து தவெக சார்பில் வெற்றி பெற்ற நவில்பட்டு விஜி திமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தவர் என்ற நிலையில், அவர் மூலமாக தவெக எம்.எல்.ஏக்களை மூளைச்சலவை செய்ய முயற்சி நடப்பதாக தகவல் கசிந்தது. நவல்பட்டு விஜி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர் என்ற நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்களை பிரித்தாள திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்பட்டது. இந்த தகவலை உறுதி படுத்தும் வகையில் தான் ரகுபதியின் பேட்டியும் அமைந்திருக்கிறது.
தவெக ஆட்சி அமைப்பதை திமுகவும், அதிமுகவும் சேர்ந்து தடுக்க முயற்சித்ததாக ஆரம்பத்திலேயே கூறப்பட்ட நிலையில், தவெக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக திட்டம் போடுவதாக தகவலும் வெளியானது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்க தவெக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் திமுக இறங்கியிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், ரகுபதியின் பேட்டி திமுகவின் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தவெக ஆட்சி நீடிக்காது, தாக்குப்பிடிக்காது, கலைந்து விடும், கவிழ்ந்துவிடும் என மேடைகளில் சொல்லி வந்த வார்த்தையை திமுக செயல்படுத்த தொடங்கி விட்டதோ? என்ற சந்தேகத்திற்கு வித்திட்டுள்ளது ரகுபதியின் பேட்டி.
அடுத்தது என்ன?
ஏற்கெனவே, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக காவல்துறை மூலம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சதிக்கு பின்னணியிலும் திமுக முக்கிய புள்ளிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
தற்போது, தவெக ஆட்சி கவிழும், விரைவிலேயே திமுக ஆட்சிக்கு வரும் என எழுதி வைத்தது போல ரகுபதி பேசியதையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, விரைவிலேயே தமிழ்நாட்டில் அரசியல் பூகம்பம் வரப் போகிறது என்பதையே காட்டுகிறது. ஆகையால், எம்.எல்.ஏக்களை தவெக எப்படி தக்க வைத்துக் கொள்ளப் போகிறது? ஆட்சியை காப்பாற்ற தவெகவின் அடுத்தகட்ட மூவ் என்ன? என்பதெல்லாம் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
வீடியோவைக் காண...