"அருள் விக்னேஷை கைது செய்ய தேவையில்லை, ஆட்சியர் ஏன் தாமதமாக புகாரளித்தார்?"

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய தேவையில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆட்சியர் ஏன் காலதாமதமாக புகார் அளித்தார் என்பதையும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
"அருள் விக்னேஷை கைது செய்ய தேவையில்லை, ஆட்சியர் ஏன் தாமதமாக புகாரளித்தார்?"
Published on: 

சட்டப்படி நடவடிக்கை

புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது;

என்னைப் பொறுத்தவரை இப்போது ஆட்சியர் முறையாகப் புகார் அளித்துள்ளார். அவர் ஒரு படித்த அதிகாரி. அவரது புகாரைச் சட்டப்படி விசாரித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைக் காவல்துறையும் அரசாங்கமும் எடுக்க வேண்டும்.

அனுபவம் கிடையாது

ஆட்சியர் காலதாமதமாகப் புகார் அளித்தார் என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். இந்தச் செய்தி கசியும்போதே, அரசாங்கமும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் கட்சியும் இதைக் கையில் எடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். சில நேரங்களில் இந்தக் கட்சிக்கு பெரிய அளவில் அனுபவம் கிடையாது. இப்போதுதான் அவர்கள் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.

இதை எப்படி கையாள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது; இதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது தான் புகார்

இதுபோன்று ஏதாவது பிரச்சினை வந்தால், கட்சிக்குள்ளேயே அதைக் கண்டறிந்து சரி செய்திருக்க வேண்டும். இரண்டாவதாக, தலைமைச் செயலாளரும் உள்ளார்ந்த நிர்வாக நடைமுறை வழியாக இதைக் கையாண்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால், இப்போதுதான் முறையான புகார் வந்துள்ளது; அதனால் சட்டப்படி நடவடிக்கைகள் இப்போதுதான் எடுக்க முடியும்.

கைது - உடன்பாடில்லை

அவர்களுடைய கட்சிக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகர் நான் இல்லை. இந்தச் செய்தி கசிந்த போதே இதை அவர்களின் கட்சி முறையாக கையாண்டிருக்க வேண்டும். இப்போது விவகாரம் சட்டரீதியாகச் சென்றுவிட்டதால், கட்சியைத் தாண்டி சட்டரீதியான நடவடிக்கைகளே தொடர வேண்டும்.

எல்லா விவகாரங்களிலும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நமது ஊரில் தொட்டதற்கெல்லாம் கைது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நமது நீதி அமைப்பில் தேவையில்லாமல் கைது நடவடிக்கைகள் நடக்கின்றன.

நீதிமன்றத்தில் தண்டனை

ஒருவர் இன்னொருவருக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்றோ அல்லது சாட்சிகளைக் கலைப்பார் என்றோ நினைத்தால் மட்டுமே கைது செய்ய வேண்டுமே தவிர, அவர் வெளியில் இருப்பதால் அடுத்தவரின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து இல்லை என்று காவல்துறை நினைத்தால் அவரைக் கைது செய்ய வேண்டாம்.

எல்லா வழக்குகளிலும் எல்லாரையும் கைது செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை தேவையில்லாத ஒரு விஷயம். பெரும்பாலான வழக்குகளில் கைது செய்யாமலேயே விசாரணை நடத்தி, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரலாம்.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.

வீடியோவைக் காணலாம்

"அருள் விக்னேஷை கைது செய்ய தேவையில்லை, ஆட்சியர் ஏன் தாமதமாக புகாரளித்தார்?"
கைது அவசியமில்லை - கார்த்தி சிதம்பரம்