

ராகுல், ஸ்டாலின் பிரதர்ஸ்
பிரதர் என அழைப்பது, சந்திப்பின் போது இனிப்பு வாங்கி செல்வது, உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து என சினிமாவில் வரும் அண்ணன் - தம்பி செண்டிமெண்ட் காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு ஒரு காலத்தில் மாறி மாறி அன்பை பொழிந்தவர்கள் தான் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும்.
ஒரே ஒரு தேர்தல் தான் ஒட்டுமொத்தமும் குளோஸ் என்பது போல, 2026 சட்டமன்ற தேர்தல் தேசிய அளவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணியை கலைத்து போட்டதோடு, இந்த இரு தலைவர்களின் சகோதர பிணைப்பையும் நிரந்தரமாக பிரித்தது. ஆனால் திமுக - காங்கிரஸ் இடையிலான மனக்கசப்பு தேர்தலுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பது தான் நிதர்சனம்.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக, காங்கிரசுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அவ்வளவு விரைவாக ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை. 40 தொகுதிகளில் இருந்து இறங்கி வர மாட்டோம் என காங்கிரஸ் அடம்பிடிக்க, 25 தொகுதிகளே கஷ்டம் என திமுக பிடி கொடுக்காததால் இழுபறி தான் நீடித்தது.
இறுதி நிமிடம் வரை நீடித்த இந்த இழுபறியும் தேர்தல் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது தனிக்கதை.
பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் ஒருவழியாக 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள தொகுதி பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனாலும் அதில் முழு திருப்தி அடையாத காங்கிரசார், திமுக போட்டியிட்ட தொகுதிகளில் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தவெக உடன் காங். கூட்டணி
கருத்து வேறுபாடு, மனக்கசப்புகளை எல்லாம் கடந்து இரு கட்சிகளும் ஒன்றாகவே தேர்தலை சந்தித்தன. போராடி பெற்ற 28 இடங்களில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், சொல்லாமல் கொள்ளாமல் திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக உடன் கைகோர்த்தது, ஏற்கனவே துளிர்விட தொடங்கியிருந்த அதிருப்தியை நிரந்தர விரிசலாக மாற்றியது.
ஆட்சி மாற்றம், அமைச்சரவையில் இடம் என அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் நிகழ்ந்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தாய் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக மு.க.ஸ்டாலினை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார் ராகுல் காந்தி.
ஆனால் அவரது அழைப்பை ஏற்க மறுத்ததோடு, ஏற்கனவே ஒப்புக் கொண்ட பணிகளில் பிஸியாக இருப்பதாக கூறி புறக்கணித்திருக்கிறார் ஸ்டாலின். ஆனாலும் சோனியா காந்திக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப தவறவில்லை.
பழைய கணக்கு பின்னணி
ராகுலின் அழைப்பை ஸ்டாலின் ஏற்க மறுத்ததன் பின்னணியில் பழைய கணக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. தொகுதி பங்கீட்டின் போது காங்கிரஸ் நடந்து கொண்ட முறையை கொஞ்சம் கூட விரும்பாத போதும், கூட்டணி உடைந்து விடக் கூடாது என்பதற்காகவே காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை அளிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
ஆனாலும் உடன்பாடு எட்டப்படாத சூழலில், ராகுல் காந்தியை கிட்டத்தட்ட 5 முறை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால் அப்போது ஸ்டாலினின் அழைப்பை ராகுல் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. ராகுலின் அப்போதைய செயல்பாடு காரணமாகவே ஸ்டாலின் தற்போது அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இனி ஒருபோதும் உறவில்லை...
இது ஒரு புறமிருக்க தேர்தல் முடிந்தவுடனேயே காங்கிரசுடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என, வாக்குப்பதிவுக்கு முன்பே அறிவாலய வட்டாரம் முடிவெடுத்ததாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். தேர்தல் நேரத்தில் கூட்டணி முறிந்து விட்டால் எதிர்மறையாக அமைந்து விடும் என்பதற்காகவே மு.க.ஸ்டாலின் பொறுமை காத்ததாகவும் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ, இனி ஒருபோதும் காங்கிரஸின் சங்காத்தமே வேண்டாம் என்ற முடிவுக்கு அறிவாலய தலைமை வந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ராகுலின் அழைப்பை ஸ்டாலின் தவிர்த்ததாக சொல்லப்படும் நிகழ்வும், அந்த முடிவில் திமுக மேலிடம் உறுதியுடன் இருப்பதையே அடிக்கோடிட்டு காட்டுகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
வீடியோவைக் காண...