

எது உண்மை? எது பொய்? என்பது உலகிற்கு தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை எனக்கூறிய கார்த்திகா, எதற்கும் அஞ்சாமல் மைதானத்தில் மட்டுமே தன் மனதை நிலைநிறுத்துவேன் எனவும் கூறி உள்ளார்.
கார்த்திகாவின் தாய் கண்ணீர்
பரிசுத் தொகையையும் பறித்து, தனது மகளையும் பிரித்து தன்னை யாரோ போல் தெருவில் நிற்க வைத்துவிட்டதாக 2 நாட்களுக்கு முன்பு விமான நிலையத்தில் காரை வழிமறித்து கண்ணீர் வடித்திருந்தார் கண்ணகி நகரின் பெருமையான கபடி வீராங்கனை கார்த்திகாவின் தாய். அவர் பேசுவதன் பின்னால் பல சூழ்ச்சிகள் உள்ளதாக விளக்கமளித்த கார்த்திகா, ”தனது தாய்க்கு நன்றி.” என நொந்துபோய் கையெடுத்து கும்பிட்டு உள்ளார்.
கண்ணகி நகருக்கு...
ஒரு முகவரியில் கண்ணகி நகர் என குறிப்பிட்டிருந்தால் முகம் பார்க்காமலேயே அவர்கள் அப்படித்தான் என கண்ணை மூடிக்கொண்டும் சான்றிதழ் கொடுக்கும் எதிர்மறையான பிம்பத்தையே மாற்றியது கார்த்திகா தான்.
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்று தாயகம் திரும்பிய அவரை மேடையேற்றி, மாலை மரியாதை, மகுடம், அடுத்தடுத்து காசோலைகள், விலக முடியாத அளவில் கேமரா வெளிச்சம் என ஒட்டுமொத்த தமிழகமே பாராட்டுமழை பொழிந்து திக்குமுக்காட வைத்தது.
பணம் வந்த பிறகு...
அதேநேரம், ஒரு நகர் மீதான பொதுப்பார்வையை புரட்டிப்போட்ட கார்த்திகாவிற்கு அவரது தாய் தரப்பில் இருந்து வந்த சில எதிர்ப்பு அம்புகளையும் எதிர்க்க வேண்டிய நிலை உருவானது. கார்த்திகா இரவு பகல் பாராமல் பயிற்சி எடுத்துக்கொண்டது முதல் படிப்பை 2ஆவதாக வைத்துவிட்டு பல மைதானங்களில் களம் கண்டதுவரை வராத எதிர்ப்பு, பணம் புரள ஆரம்பித்தபிறகு வந்திருப்பதுதான் பலருக்கும் சந்தேகமே.
பயிற்சியாளர் கைது
2026 ஜூன் மாத இறுதியில் கார்த்திகாவின் தாய் சரண்யா கபடி பயிற்சியாளர் ராஜி மீது புகார் அளித்திருந்தார். தன் மகள் மற்றும் சில கபடி வீராங்கனைகளிடம் ராஜி, பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், ஜாமீன் வழங்கக்ககூடாது என மேல்முறையீடும் செய்ததால் தற்போதுவரை ராஜி சிறையில்தான் இருந்து வருகிறார்.
விமான நிலையத்தில்...
இதற்கு மத்தியில், கடந்த அக்டோபர் 23 முதல் 31 வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய கார்த்திகாவையும், அவரது டீமையும் சூழ்ந்துகொண்ட தாய் சரண்யா, மகள் இருந்த காரை வழிமறித்து அதில் இருந்த அனைவரிடமும் கத்தி பிரச்சினையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகள் மூலம் வந்த பணத்தை விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சோலை ராஜா, மதுரையை சேர்ந்த துரைப்பாண்டி, கபடி அணியில் உள்ள சுஜி உள்ளிட்டோர் ஏமாற்றி வாங்கிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
சொல்ல முடியாத நிலையில்...
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் கண்ணகி நகர் கபடி விளையாட்டு அரங்கில் கார்த்திகா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தந்தை, தங்கை, பாட்டி இவர்கள்தான் தனது மகிழ்ச்சியான குடும்பம், தனிப்பட்ட முறையில் தனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது, அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதால், எதனையும் வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளதாக கூறினார்.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் கண்ணகி நகர் கபடி விளையாட்டு அரங்கில் கார்த்திகா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தந்தை, தங்கை, பாட்டி இவர்கள்தான் தனது மகிழ்ச்சியான குடும்பம், தனிப்பட்ட முறையில் தனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது, அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதால், எதனையும் வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளதாக கூறினார்.
தாய் சரண்யா தங்களைவிட்டு பிரிந்து சென்று 6 ஆண்டுகள் ஆகிறது எனக்கூறிய கார்த்திகா தனது வளர்ச்சிக்காக இத்தனைக்காலமும் பாடுபட்டவர்கள், தான் தங்கம் வெல்ல உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றிக்கடனாக பணத்தை நானே தான் விருப்பப்பட்டு கொடுத்து உள்ளதாகவும், அந்த தொகையும் தன்னைப்போன்று ஏழ்மை பின்னணி கொண்ட விளையாட்டு வீரர்களுக்குதான் பயன்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தாயை தூண்டி விட்டு...
தனது வளர்ச்சி பிடிக்காத சிலர், தனது தாயை தூண்டிவிட்டு குளிர் காய்வதாகவும், போட்டி பொறாமையில் ஆட்டுவிக்கும் அவர்களின் தந்திரங்களை எல்லாமே கண்டுகொள்ளவே போவதில்லை எனவும்கூறிய கார்த்திகா, விளையாட செல்லும்போது வழியனுப்பி வைக்காத தாய் போட்டியை முடித்துவிட்டு வரும்போது மட்டும் ஏன் வர வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
மொத்தத்தில் தனது பெயரை கெடுப்பதே தாயின் நோக்கம், அதற்கான காரணத்தை, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் சொல்ல இயலாது எனவும் எது உண்மை, எது பொய் என்பது விரைவில் வெளியில் வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் கார்த்திகா.
பாலியல் புகார் ஏன்?
இது ஒருபுறமிருக்க கார்த்திகா மற்றும் அவரது தாய் விவகாரத்தில் பலருக்கும் பல கேள்விகள் எழுகிறது. பஹ்ரைன் சென்று தங்கம் வெல்லும்வரை புகார், ரகளை, கண்ணீர் என எதனையும் கையில் எடுக்காத தாய் சரண்யா அதன்பிறகு ஏன் பயிற்சியாளர் ராஜி மீது பாலியல் புகார் கொடுக்க வேண்டும்?
ஒருவேளை மகளுக்கு பாலியல் அத்துமீறல் நடந்திருந்தால் அதனை ஏன் முன்பே வெளியில் கொண்டு வரவில்லை? அதேபோல், மற்ற வீராங்கனைகளோ அல்லது அவர்களின் உறவினர்களோ ஏன் ராஜி மீது பாலியல் புகார் அளிக்கவில்லை?
இதுவரை சரண்யா தான் ராஜி மீது புகார் அளித்திருக்கிறாரே தவிர கார்த்திகாவின் தந்தையோ அல்லது பாட்டியோ புகாரளிக்காதது ஏன்? கார்த்திகாவின் தங்கையே அதே அணியில்தான் உள்ளபோது அவருக்கு இது எதுவும் தெரியாதா? என சந்தேகங்கள் எழுகிறது.
கார்த்திகா சொன்னதுபோல வெளியில் சொல்ல முடியாத அந்த குறிப்பிட்ட வழக்கு முடிவுக்கு வந்தால்தான் இத்தனை கேள்விகளுக்குமான விடையே கிடைக்கும்.