

குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றதாகவும், ஆதாரங்களை மறைத்ததாகவும் எழுந்த புகாரில், 7 காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவர்களுக்கு அதிரடியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதிர வைக்கும் அடுத்த கட்டம்
பங்களா நீச்சல் குளம் அருகே புதைக்கப்பட்ட மர்மத்தை தேடி இறங்கிய ஜேசிபிக்கள், மறுபக்கம் குற்றவாளிகளுக்கு துணைபோனதாக 7 உயர் அதிகாரிகள் மீது பாய்ந்த போக்சோ வழக்கு என, சிறையில் இருக்கும் ஜெம் வீரமணி விவகாரம், தற்போது ஒட்டுமொத்த காவல்துறை வட்டாரத்தையே கதிகலங்க வைத்திருக்கிறது.
ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் வீரமணி மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 8க்கும் மேற்பட்ட சிறுமிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 7 போக்சோ வழக்குகள், தற்கொ*க்கு தூண்டியதாக ஒரு வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் வீரமணி மீது பாய்ந்தன.
இதில், சிக்கி கடந்த ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் வீரமணி. அவரோடு, இந்த கொடூரத்திற்கு உடந்தையாக இருந்த உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், கணேசன், பார்த்திபன், லாசர், பாபு, சக்திவேல், சீனிவாசன் என மொத்த கூட்டமும் அடுத்தடுத்து அள்ளப்பட்டு சிறையில் தள்ளப்பட்டது. இதில், ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
சிறுமியின் வாக்குமூலம், அதிர்ச்சி
வழக்கு இப்படி நகர்ந்து கொண்டிருக்க, நீதிமன்றத்தில் ஆஜரான பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்த வாக்குமூலம்தான் மொத்த ஆட்டத்தையும் மாற்றியது. பங்களா பின்புறம் இருக்கும் நீச்சல் குளத்திற்கு பக்கத்தில் ஏற்கனவே ஒரு சிறுமியை கொன்று புதைத்திருக்கிறேன். நான் கூப்பிடும்போது வரவில்லையென்றால், உன்னையும் அதேபோல கொன்று புதைத்துவிடுவேன் என வீரமணி மிரட்டினார் என்று அந்த சிறுமி கதறியிருக்கிறார். அதோடு, சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து வருவதும், கொண்டு விடுவதும் வீரமணியின் ஓட்டுநர் பாலாதான் என்பதையும் போட்டுடைத்திருக்கிறார்.
புதைக்கப்பட்ட இடத்தில்...
சிறுமியின் இந்த வாக்குமூலத்தை கேட்டதும் அதிர்ந்த போலீஸ், 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் மாயமான வழக்கையும் இதோடு முடிச்சு போட்டு பார்த்தது. உடனடியாக ஓட்டுநர் பாலாவை தட்டி தூக்கி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிந்தன.
தொடர்ந்து, கைதானவர்களிடம் நடத்தப்பட்ட தனித்தனி விசாரணையிலும், வீட்டின் பின்புற தோட்டத்தில் ஒரு சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது என்ற வாக்குமூலம் கிடைக்க, ஆட்டம் சூடுபிடித்தது.
உடனடியாக ஓட்டுநர் பாலாவையே சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து, உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட சொன்னது சிறப்பு புலனாய்வு குழு.
தாசில்தார் அறிவிப்பு
காலை 11.30 மணியளவில் கூடுதல் துணை ஆணையர் தலைமையில் 3 உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 20க்கும் மேற்பட்ட போலீசார், வருவாய்த்துறை தாசில்தார், தடயவியல் நிபுணர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கொண்ட படை ராயப்பேட்டையில் உள்ள வீரமணியின் பங்களாவிற்குள்
இறங்கியது. நீச்சல் குளம், வாழைத்தோப்பு பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் உறும, 100 முதல் 120 அடி நீளத்திற்கும், 12 முதல் 15 அடி ஆழத்திற்கும் 2 பிரமாண்டப் பள்ளங்கள் தோண்டப்பட்டன.
மாலை 6 மணி வரை நீடித்த இந்த திக் திக் தேடுதல் வேட்டையின் முடிவில், வழக்கு தொடர்பான சந்தேகத்திற்கிடமான தடயங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என மயிலாப்பூர் தாசில்தார் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
பள்ளம் தோண்டியும் தடயங்கள் கிடைக்காத நிலையில், மீடியா முன்பு ஆஜரான வீரமணி தரப்பு வழக்கறிஞர் விக்னேஷ், போலீசார் மீது சரமாரி புகார்களை அடுக்கினார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் காலையிலேயே ஜேசிபி இயந்திரத்தோடு வந்து சொத்துகளை சேதப்படுத்தியிருக்கிறார்கள். சோதனையை வீடியோ எடுத்த வீரமணியின் மனைவியின் கையை அதிகாரிகள் சேர்ந்து முறுக்கியதில் மணிக்கட்டில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. காலையில் சோதனையை தொடங்கிவிட்டு, மாலையில்தான் நோட்டீஸ் கொடுக்கிறார்கள் என போர்க்கொடி தூக்கினார்.
பங்களாவில் பள்ளம் தோண்டப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயன்றதாகவும், சிறுமிகளின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் கூறி, கூடுதல் ஆணையர் ராதிகா, துணை ஆணையர்கள் வனிதா, கீதாஞ்சலி உள்ளிட்ட 7 காவல் அதிகாரிகள் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக, ஜெம் வீரமணி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு காவல்துறை அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில், விபசார தடுப்புப் பிரிவு உதவி ஆணையராக இருந்த யாஸ்மினிடம் கடந்த 14ம் தேதி சுமார் 8 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். மீதமுள்ள 6 அதிகாரிகளும் அடுத்தகட்டமாக விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
ஒருபுறம் ஜெம் வீரமணி வழக்கின் மர்ம முடிச்சுகள், மறுபுறம் காவல்துறை அதிகாரிகள் மீதான விசாரணை என இந்த இரு விசாரணைகளும் அடுத்தடுத்து என்னென்ன அதிர்ச்சிகளை வெளிக்கொண்டு வரப்போகின்றன என்பதுதான் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வீடியோவைக் காண...