

நேரு உள்விளையாட்டரங்கில்...
2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசளிக்க வந்திருந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் லேசர் ஒளி வெள்ளத்தில் கண்கவர் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு இசைக்கல்லூரி மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கிட, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வரவேற்புரை ஆற்றினார்.
நடனம் மற்றும் சாகச நிகழ்ச்சி
தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற அவரது நம்பிக்கையூட்டும் டயலாக் உடன் கூடிய பாடல்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி மற்றும் சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் 42 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாடமியையும், சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
சக வீரர்களுக்கு உத்வேகம்
அண்மையில், ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு வீரர்- வீராங்கனைகள் தங்களது அனுபங்களை பகிர்ந்து கொண்டு, சக வீரர்களுக்கு உத்வேகம் அளித்தனர்.
தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையினை வழங்கிய முதலமைச்சர் விஜய், அப்போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
சென்னை மாவட்ட அணிக்கு...
2026 முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், மொத்தம் 118 பதக்கங்களை வென்று 3-ஆம் இடம்பிடித்த கோவை மாவட்ட அணிக்கும், 143 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்த செங்கல்பட்டு மாவட்ட அணிக்கும் முதலமைச்சர் விஜய் கோப்பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, மொத்தம் 319 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை மாவட்ட அணிக்கு முதலமைச்சர் விஜய், வெற்றிக் கோப்பையை வழங்கினார்.