ஆட்சியர் புகார், முதல்வருக்கு தெரியாதா? ஸ்டாலின் கேள்வி

நான்கு மாதங்களுக்கு முன்பே ஆட்சியர் புகார் கொடுத்தது முதல்வருக்கு தெரியாதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆட்சியர் புகார், முதல்வருக்கு தெரியாதா? ஸ்டாலின் கேள்வி
Published on: 

தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?

தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர் தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?

பயம் இருந்திருக்கும்...

போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய்-ன் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த எம்எல்ஏவைக் கைது செய்யத் தெரியவில்லையா?

கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.

வேதனை அளிக்கிறது

மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத் தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.

'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

சிபிஐ விசாரிக்க வேண்டும்

இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால் தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு, இப்படிப்பட்ட எம்எல்ஏவை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி, இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

உடனே கைது செய்ய வேண்டும்

சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

வீடியோவை காணலாம்

ஆட்சியர் புகார், முதல்வருக்கு தெரியாதா? ஸ்டாலின் கேள்வி
கொதித்தெழுந்து மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு