விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு

தமிழகத்தில் 33 சதவிகித அளவிற்கு பயிர் சேதம் ஏற்பட்ட இடங்களில் உடனடி கணக்கெடுப்பிற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தகுதி உள்ள விவசாயிகளுக்கு உரிய விதிமுறைகளின்படி நிவாரணம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு
Published on: 

முதல்வர் விஜய் ஆலோசனை

இதுதொடர்பாக, தமிழக அரசு கூறி இருப்பதாவது;

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் நிலை, அதன் காரணமாக வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைத் துறைகளில் எதிர்வரும் கோடைகாலத்தில் குடிநீர் மற்றும் கால்நடைத் தீவனத் தேவைகளை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடு குறித்து உயர்நிலை ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மழைப்பொழிவு நிலவரம், அணை மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு, நிலத்தடி நீர்மட்டம், வேளாண்மை - தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மழைப்பொழிவு குறைவு

2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் 25ம் நாள் வரை மாநிலத்தில் இயல்பைவிட 20 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்த போதிலும், 22 மாவட்டங்களில் மட்டுமே இயல்பைவிடக் குறைவான மழை பதிவாகியுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 32.9 சதவீதமாகவும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏறத்தாழ 73 சதவீத ஏரிகளில் நீர் இருப்பு 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், வேளாண்மைப் பயிர்களின் சாகுபடி பரப்பு 18.4 சதவீதம் குறைந்து உள்ளது.

மேலும், மழைப்பொழிவு குறைவால் பல மாவட்டங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் கோடைக்காலத்தில் குடிநீர் மற்றும் கால்நடைத் தீவனத் தேவைகளை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டமிட வேண்டியதன் அவசியம் குறித்தும் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

பயிர்ச் சேதங்களுக்கு உரிய நிவாரணம்

33 சதவீதத்திற்கும் அதிகமாகப் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், உடனடியாகப் பயிர்ச்சேதக் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி, உரிய விதிமுறைகளின்படி தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதிசெய்ய, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மற்றும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் இதனை நாள்தோறும் கண்காணித்து, தகுதியுள்ள எந்தவொரு விவசாயியும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு

மழைப்பொழிவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அடங்கிய குழு நேரில் சென்று, அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யவும், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விவசாயிகளின் தேவைகள் மற்றும் உள்ளூர் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, விரிவான அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள நிலைமைகளை விரிவாக மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளுடன் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பருவமழை பாதிப்பு, பயிர்ச்சேதங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் தொடர்பான நிலைமையை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வீடியோவில் காணலாம்

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு
ஆட்சியர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்