

Vintage Press Limited பதிப்பகத்தின் பெயரிலும் 257க்கும் மேற்பட்ட போலி ஆங்கில நூல்கள் கண்டறியப்பட்டுள்ளது. புத்தகக் கொள்முதலில் இத்தனை முறைகேடுகள் நடந்தும், தவறு செய்த ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஆங்கில போலி நூல்கள்
அறிவை வளர்க்க வேண்டிய பிரம்மாண்ட நூலகம், இன்று இந்தியாவின் முதல் ஏஐ ஊழல் என்ற பெரும் சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில், அகல்விளக்கு, பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களின் பெயர்களில் போலியான நூல்கள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது ஏற்கெனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் Vintage Press Limited என்ற பதிப்பகத்தின் பெயரிலும் 257க்கும் மேற்பட்ட ஆங்கில போலி நூல்கள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது, இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ள போலி நூல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தென்காசியில் உள்ள மாவட்ட மத்திய நூலகத்தில், அகல் விளக்கு பதிப்பகத்தின் சுமார் 2 ஆயிரத்து 200 போலிப் புத்தகங்கள் அகற்றப்பட்டன.
1800 நூல்கள் அகற்றம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் இருந்து ஆயிரத்து 800 புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையில் விண்டேஜ் பிரஸ் லிமிடெட் பதிப்பகத்தின் 257 ஆங்கிலப் புத்தகங்களும் போலியானவை என கண்டறியப்பட்டு அவைகளும் அகற்றப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 91 நூலகங்களில் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 125 நூலகங்களில் சுமார் 300 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நூலக அலுவலர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு
ஒருபுறம் போலி புத்தகங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் அதற்கு காரணமான பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் கேள்வி
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மூன்று வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முழுமையான விவரங்களைச் சமர்ப்பிக்க நான்கு நாட்கள் கால அவகாசம் வழங்கினால் அனைத்து தகவல்களையும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து காணொலி வாயிலாக ஆஜரான பொது நூலகத்துறை இயக்குநரிடம் நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நூல் கொள்முதலில் தவறு
அதற்கு, 112 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்களைக் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டதாக நூலகத்துறை இயக்குநர் தெரிவித்தார். கோவை பெரியார் அறிவுலகத்திற்கு மட்டும் அகல்விளக்கு பதிப்பகத்திடமிருந்து 1,700 புத்தகங்களை வாங்கத் திட்டமிட்டு, அதற்காக 17 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே காணொலி வாயிலாக ஆஜரான கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி, "ஒரு பதிப்பகத்திடமிருந்து 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது அதிகம் என்றும், தென்காசி மாவட்டத்தில் மட்டும் 27 லட்சம் ரூபாய்க்கு அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதில் தவறு இருப்பதாக தோன்றுவதாகவும் கூறினார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
’இந்த முறைகேடு தொடர்புடைய ஓர் அதிகாரியை கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?’ என்று நீதிபதிகள் கேள்விகளால் துளைத்த நிலையில், அதற்கு, ”லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது” என நூலகத் துறை இயக்குநர் பதிலளித்தார்.
பிரதமரின், மனதின் குரல் நிகழ்வு தொடர்பான புத்தகத்தை குழு பரிந்துரைத்தது, ஆனால் அந்த புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை என தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பில் விரிவான அறிக்கையை தாக்க செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.