

சென்னையில்...
இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
தமிழகத்தில் உச்ச நீதிமன்ற அமர்வு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 1980ஆம் ஆண்டிலேயே மாநில அரசால் முன்வைக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, டில்லியிலோ அல்லது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ உச்சநீதிமன்ற அமர்வு அமைந்திருக்க வழிவகை செய்கிறது. இந்தக் கோரிக்கையானது, 1979ஆம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாதப் பொருளாகவும் இருந்தது.
பயன் உள்ளதாக இருக்கும்
தென்னிந்தியாவில் உள்ள வழக்கறிஞர்கள், நீதிசார் தீர்வுகளுக்காக டெல்லி வரை செல்ல வேண்டியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய பெருநகரமாக விளங்கும் சென்னையில், உச்சநீதிமன்ற அமர்வை அமைப்பது, அனைத்து தென்மாநிலங்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குழுமமானது, சட்ட அறிவும், வாதத் திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் உச்சநீதிமன்ற அமர்வு, தேவைகளை நிறைவு செய்யும்.
ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றி...
சென்னை உயர்நீதிமன்றம் 1862ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் மிகத் தொன்மையான முன்னுரிமை உயர்நீதிமன்றங்களில் ஒன்றானது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவித் தரத்திற்கு இணையான குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தவறாமல் மாநில அரசு வழங்கும் என உறுதியளித்திருந்த நிலையிலும், 07.08.2007 அன்று உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு இப்பொருண்மை குறித்த தனது முந்தைய தீர்மானங்களிலிருந்து மாறுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என முடிவெடுத்துள்ள நிலையையும், நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்றே அதனை உருவாக்கிய சான்றோர்கள் விரும்பினர் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
நீதி பெறும் வாய்ப்பு
மேலும், பல நாடுகளில் இல்லாத சிறப்பம்சமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32 இயற்றப்பட்டதற்கான முதன்மைக் காரணமும் இதுவே. நாளடைவில், பிரிவு 32-ன் கீழான தீர்வானது, புவியியல் ரீதியாக இந்திய உச்சநீதிமன்றத்திற்கு அருகில் வசிக்கக்கூடியவர்கள் மற்றும் வழக்குச் செலவுகளையும், பயணச் செலவுகளையும் பொருட்டாகக் கருதாதவர்களுக்கு மட்டுமே நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது.
குறிப்பாக, தென்னிந்தியாவில் உள்ள குடிமக்கள் இச்சலுகையைப் பெறும் வாய்ப்பை டெல்லிக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே உள்ள நெடுந்தொலைவு காரணமாகவே இழக்க நேரிடுகிறது.
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 13.07.2016 அன்று பிறப்பித்த உத்தரவில், எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளில், உச்சநீதிமன்ற அமர்வை அமைப்பது என்பதும் ஒன்றாகும். இவைகுறித்து, ஒரு உறுதியான முடிவைப் பெறுவதற்காக அரசியலமைப்பு அமர்வு ஒன்று அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும், அவ்வாறே, இவ்வழக்கு இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உச்சநீதிமன்ற அமர்வை அமைப்பது நமது நாட்டின் உண்மையான கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தும்; 2004, 2006, 2008 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இவை தொடர்பாக அளித்த பரிந்துரைகள்; உச்சநீதிமன்ற நிரந்தர மண்டல அமர்வின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தும் சட்ட ஆணையங்களின் அறிக்கைகள் மற்றும் இத்தகைய அமர்வின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாடு இந்தியாவின் தலைமை நீதிபதியிடமே உள்ளதால், அவை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காது.
பிரதமருக்கு வலியுறுத்தல்
எனவே, தென்னிந்திய மாநிலங்களில், சென்னையின் முக்கியத்துவத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கை மற்றும் இத்தகைய காரணங்களைக் கருத்தில் கொண்டு, சென்னையில் உச்சநீதிமன்ற அமர்வை அமைப்பது குறித்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, சாதகமான முடிவைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்தியப் பிரதமரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.