80 வயதிலும் ஷேக் ஹசீனாவின் சவால் - ஏன் டிசம்பர் 16?

வங்கதேச அரசியலில் மீண்டும் ஒரு பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
80 வயதிலும் ஷேக் ஹசீனாவின் சவால் - ஏன் டிசம்பர் 16?
Published on: 

மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியை இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் 16ஆம் தேதி தாயகம் திரும்பப்போவதாக அறிவித்துள்ளார். வங்கதேசத்தின் வெற்றி நாளான டிசம்பர் 16ஐ அவர் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன?

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை மற்றும் தற்போதைய அரசின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவரது இந்த தாயகம் திரும்பும் பயணம் சாத்தியமா?

நீண்ட கால பிரதமர்

வங்க தேசத்தின் நீண்டகாலப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் டிசம்பர் 16ஆம் தேதி வங்கதேசம் திரும்பப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஹசீனாவின் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே வங்கதேசம் முழுவதும் அரசியல் வன்முறைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. தடையை மீறி அவாமி லீக் தொண்டர்கள் நடத்தி வரும் போராட்டங்களால் கலவரம், தீவைப்பு மற்றும் கைது நடவடிக்கைகள் என அந்நாடு மீண்டும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

வங்கதேசம் உருவான வெற்றி நாள்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிற்குள் கால் வைத்தாலே கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் 80 வயதான ஷேக் ஹசீனா டிசம்பர் 16ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மிகப்பெரிய அரசியல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேச வரலாற்றில் டிசம்பர் 16 என்பது வெறும் தேதி மட்டுமல்ல.

1971ஆம் ஆண்டு இந்திய ராணுவம் மற்றும் முக்தி பாஹினி படைகளிடம் பாகிஸ்தான் சரணடைந்து, வங்கதேசம் என்ற தனி நாடு உருவான வெற்றி நாள்.

தனது தந்தையும், வங்கதேசத்தின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் உருவாக்கிய தேசத்தின் வெற்றி நாளில் தாயகம் திரும்புவதன் மூலம், மக்களின் அனுதாபத்தையும், வரலாற்று உணர்வுகளையும் தனக்குச் சாதகமாக மாற்ற ஹசீனா திட்டமிட்டுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில்...

கடந்த ஆண்டு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டதுடன், முஜிபுர் ரஹ்மானின் இல்லம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களும் சேதப்படுத்தப்பட்டன. தற்போதைய தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாளர் போராட்டங்களால் தடுமாறி வருகிறது.

இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, தனது கட்சியின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், தன்னை ஒரு தியாகியாக முன்னிறுத்தவும் ஷேக் ஹசீனா இந்த இறுதிக்கட்ட முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

வங்கதேச அரசு திட்டவட்டம்

தாயகம் திரும்புவதற்கு வசதியாக, 2024ல் தன்னை இந்தியாவிற்கு அனுப்பியது போலவே, தற்போதும் வங்கதேச அரசு விமானத்தை அனுப்பி வைக்க வேண்டும் என ஹசீனா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், 2024 போராட்டத்தின் போது நடந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹசீனாவிற்குப் பாஸ்போர்ட் வழங்கவோ, விமானம் அனுப்பவோ முடியாது என வங்கதேச அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் அவரைக் கைது செய்து அழைத்து வருவதிலேயே தற்போதைய அரசு உறுதியாக உள்ளது.

ஒருபுறம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி நாளில் ஒரு அரசியல் தலைவராகத் தாயகம் திரும்ப ஷேக் ஹசீனா துடிக்கிறார். மறுபுறம் அவரை ஒரு தப்பியோடிய குற்றவாளியாகக் கருதி விலங்கிடத் தயாராக இருக்கிறது வங்கதேச அரசு.

இந்த அரசியல் சதுரங்கத்தில் ஷேக் ஹசீனாவின் டிசம்பர் 16 பயணம் சாத்தியமாகுமா? அல்லது மர்மமாகவே முடியுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வீடியோவைக் காணலாம்

80 வயதிலும் ஷேக் ஹசீனாவின் சவால் - ஏன் டிசம்பர் 16?
ஷேக் ஹசீனா 80 வயதிலும் ஒரு சவால்