

என்ன நடந்தது?
குர்பத்வந்த் சிங் பன்னுன் (Gurpatwant Singh Pannun) அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'சீக்கியர்களுக்கான நீதி' (Sikhs for Justice – SFJ) அமைப்பின் முக்கிய நிர்வாகி. பஞ்சாபை இந்தியாவிலிருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று இந்த அமைப்பு பிரசாரம் செய்து வருகிறது. இந்த SFJ அமைப்பை இந்திய அரசு தடை செய்துள்ளது. பன்னுனையும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகள், காலிஸ்தான் ஆதரவு பிரசாரம் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டு வருவதாக இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்காவில் குற்றவியல் விசாரணை
ஆனால், பன்னுன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்திய அரசை விமர்சிப்பதும், காலிஸ்தான் கோரிக்கையை முன்வைப்பதும் அமெரிக்கச் சட்டங்களின் கீழ் கருத்துரிமை தொடர்பான விவாதத்தையும் எழுப்புகின்றன.
இந்தப் பின்னணியில்தான் 2023ஆம் ஆண்டு பன்னுனைக் கொ* செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்காவில் ஒரு குற்றவியல் விசாரணை தொடங்கியது.
சதி திட்டம்?
2023ஆம் ஆண்டு நியூயார்க்கில் வசித்து வந்த பன்னுனைக் கொ* செய்ய இந்திய அரசோடு தொடர்புடைய ஒரு நபரின் வழிகாட்டுதலின்பேரில் சதி நடந்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியது. அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகையின்படி, இந்திய அரசின் அமைச்சரவைச் செயலகத்தில் பணியாற்றியதாகக் கூறப்படும் விகாஷ் யாதவ் என்பவர் இந்தச் சதித்திட்டத்தை ஒருங்கிணைத்ததாகக் கூறப்பட்டது.
அவர் நிகில் குப்தா என்பவரை அணுகி, பன்னுனைக் கொ* செய்ய ஆள் ஏற்பாடு செய்யும்படி கேட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அமெரிக்க நீதித்துறை தகவல்
நிகில் குப்தா, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் என்று அமெரிக்க விசாரணை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவர் அணுகிய நபர் உண்மையில் கொ*க்கான கூலிப்படையைச் சேர்ந்தவர் அல்ல; அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவான DEAவின் ரகசிய இன்ஃபார்மர். பன்னுனைக் கொ* செய்வதற்கு 1 லட்சம் டாலர் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும், அதில் 15 ஆயிரம் டாலர் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது.
குற்றத்தை ஒப்புக்கொண்டு...
இந்தச் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2023 ஜூன் 30 அன்று செக் குடியரசில் நிகில் குப்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கியமான திருப்பம் என்னவென்றால், 2026 பிப்ரவரி 13 அன்று நிகில் குப்தா தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். கொ*க்கு ஆள் அமர்த்துதல், அதற்கான சதி, பணமோசடி சதி ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்தது.
சிவில் வழக்கு
இதனிடையே, பன்னுன் 2024 செப்டம்பரில் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்திய அரசாங்கம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராவின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல், முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ், நிகில் குப்தா உள்ளிட்டோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் அடையாளம் குறிப்பிடப்படாத 50 நபர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
உறவில் விரிசல்...
இந்திய அரசின் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் தன்னைக் கொ* செய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகப் பன்னுன் குற்றம் சாட்டுகிறார். இந்தச் சதித்திட்டத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
பன்னுனின் வழக்கறிஞர்கள் தோவலுக்கும் சமந்த் கோயலுக்கும் நீதிமன்ற ஆவணங்களை வழங்குவதற்கு ஏற்கெனவே பலமுறை முயன்றுள்ளனர். 2025 பிப்ரவரியில் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது தோவலிடம் சம்மன் வழங்க முயன்றதாகவும், பாதுகாப்புப் பணியாளர்கள் அதைத் தடுத்ததாகவும் பன்னுனின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சம்மன் வழங்க முயற்சி
இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் மூலமாகவும் ஆவணங்களை வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, சர்வதேச நீதிமன்ற ஆவணங்களை வெளிநாடுகளில் வழங்குவதற்கான நடைமுறையை வகுக்கும் ஹேக் ஒப்பந்தத்தின் (Hague Convention) 19வது பிரிவைப் பயன்படுத்தி இந்திய நீதிமன்றங்கள் மூலமாகவே சம்மன் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று பன்னுன் தரப்பு கோரியது.
நியூயார்க்கில் உள்ள அமெரிக்காவின் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி கேத்தரின் போல்க் ஃபைலா, நவம்பர் 9 அன்று இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். நவம்பர் 20ஆம் தேதி நிகில் குப்தாவுக்கு அறிவிக்கப்படவுள்ள தண்டனை, நவம்பர் 30ஆம் தேதிக்குள் தோவல், கோயல் தொடர்பான சம்மன் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை ஆகியவை அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளாக உள்ளன.
இந்தியா கடும் கண்டனம்
இதனிடையே, அமெரிக்க நீதிமன்றம் இந்தியாவின் உயர் அதிகாரிகளான அஜித் தோவல், சமந்த் கோயல் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பன்னுன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஜோடிக்க ப்பட்டவை, தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை என்றும், இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
மேலும், இந்தியாவில் நீதிமன்ற ஆவணங்களை வழங்குவதற்கான கோரிக்கைகள், இந்தியாவின் பிரத்யேக மத்திய அதிகார அமைப்பான சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
வீடியோவைக் காண...