

முன்னாள் அதிபர் ஒபாமா
சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே தற்போது ஒரே ஒரு பெயர்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அது முன்னாள் அதிபர் ஒபாமாவும், அவர் தயாரித்த Leave the World Behind திரைப்படமும்தான். 2023ல் வெளியான அந்த ஹாலிவுட் சினிமாவுக்கும், 2026 நவம்பரில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் திகில் சம்பவங்களுக்கும் முடிச்சு போட்டு, இணையவாசிகள் கிளப்பியிருக்கும் விவாதம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
என்ன நடந்தது?
கடந்த 13ம் தேதி மதியம் 12.26 மணிக்கு, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரிலுள்ள மிசிசிப்பி ஆற்றில் அட்லாண்டிக் ஆஸ்பால்ட் என்ற பிரம்மாண்ட டேங்கர் கப்பல் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கன் ஹெரிடேஜ் என்ற பயணிகள் சொகுசு கப்பல் மீது அந்த டேங்கர் பயங்கரமாக மோதியதில், பயணிகள் கப்பல் 25 அடி ஆழ தண்ணீரில் ஒருபக்கமாக சரிந்து கவிழ்ந்தது. சுமார் 180 பேர் இருந்த அந்த கப்பலிலிருந்து பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளிக்க, மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு அனைவரையும் உயிருடன் மீட்டனர். 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நவம்பர் 13ம் தேதி மதியம் 3.30 மணிக்கு அமெரிக்காவின் வான்வெளியும் ஸ்தம்பித்தது. அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகமான FAAவின் தகவல் தொடர்பு கட்டமைப்பு திடீரென முடங்கியதால், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு 2வது முறையாக நாடு தழுவிய கிரவுண்ட் ஸ்டாப் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முடங்கியது வான்வெளி
சுமார் 4 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு ஒட்டுமொத்த அமெரிக்க வான்வெளியும் முடங்க, மறுநாள் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவித்தனர்.
இந்த 2 சம்பவங்களின் வீடியோக்களும் இணையத்தில் வெளியான அடுத்த நொடியே, நெட்டிசன்கள் 2023 டிசம்பரில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான Leave the World Behind படத்தின் காட்சிகளை வெட்டி ஒட்டி வைரலாக்க தொடங்கினர்.
காரணம், சாம் எஸ்மெயில் இயக்கத்தில் ஜூலியா ராபர்ட்ஸ், ஈதன் ஹாக் நடித்த அந்த படத்தை தயாரித்தது ஒபாமா, மிஷெல் ஒபாமாவின் ஹையர் கிரவுண்ட் நிறுவனம். அந்த படத்தில், முதலில் தகவல் தொடர்பு துண்டிக்கப்படும், பின்னர் பிரம்மாண்ட டேங்கர் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து கரையில் மோதும், தொடர்ந்து விமானங்கள் வானிலிருந்து விழுந்து நொறுங்கும், இறுதியில் இணையம், செல்போன், மின்சாரம் என அனைத்தும் முடங்கி அமெரிக்காவே இருளில் மூழ்கும்.
தற்செயல் அல்ல...
இதை சுட்டிக்காட்டும் இணையவாசிகள், அமெரிக்காவின் உளவுத்துறை ரகசியங்களை அறிந்த முன்னாள் அதிபர் ஒபாமா, எதிர்காலத்தில் நடக்கப்போகும் சைபர் தாக்குதலைத்தான் சினிமாவாக எடுத்தாரா? என கேள்வி எழுப்பி விவாதத்தை கிளப்பியுள்ளனர்.
பீதியை இன்னும் எகிறவைக்க, GTA 6 வீடியோ கேமையும் இந்த சதித்திட்ட தியரிக்குள் இழுத்துவிட்டார்கள். ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் GTA 6 ரிலீஸ் தேதியாக அறிவித்திருப்பது நவம்பர் 19.
ஆச்சரியம் என்னவென்றால், Leave the World Behind படத்தில் வரும் சிறுவன் Rockstar என எழுதிய டிஷர்ட்டை அணிந்திருப்பான். சரியாக படத்தின் 11வது நிமிடம் 19வது விநாடியில் அந்த சட்டையை கழற்றுவான். இந்த காட்சியை ஸ்லோ மோஷனில் போட்டு காட்டும் வீடியோக்கள், இது வெறும் தற்செயல் அல்ல, ரகசிய குறியீடு என கிலியை கிளப்புகின்றன.
விளக்கம் என்ன?
இதோடு நிற்காமல், அமெரிக்காவில் அடுத்ததாக 90 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது, நாடே இருளில் மூழ்கப்போகிறது என்ற பிளாக்அவுட் வதந்தியும், மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட உலக பணக்காரர்கள் அவசர அவசரமாக கட்டிவரும் நிலத்தடி பதுங்கு குழிகள் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
ஆனால், இந்த சமூக வலைதள புயலுக்கு பின்னால் இருக்கும் உண்மை நிலவரம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், தொழில்நுட்ப வல்லுநர்கள் தரப்பில் தெரிவித்த தகவல்களே வேறு.
டேங்கர் கப்பலின் ஸ்டீயரிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் சுக்கான் வலதுபுறமாகத் திரும்பி லாக் ஆனதே விபத்துக்குக் காரணம் என்றும், இதில் சைபர் தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, எல் டொராடோ மற்றும் அமரில்லோ நகரங்களில் புதிதாகப் பொருத்தப்பட்ட ஜூனிபர் ரூட்டர்கள் அதிகப்படியான டேட்டாவை அனுப்பியதால், பழைய தொலைதொடர்பு கட்டமைப்பு திணறி விமான சேவை முடங்கியதாக FAA விளக்கமளித்துள்ளது.
வீடியோவைக் காணலாம்