நீல அலை  நியூஸ்தமிழ்24x7
BIG STORIES

ஜனநாயகக் கட்சியின் நீல அலை, குடியரசுக் கட்சி கோட்டைகள் சரிவு

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல், அதிபர் டொனால்டு டிரம்புக்கும் குடியரசுக் கட்சிக்கும் மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

Azhagiri Arumugam

ஆளும்கட்சிக்கு இடைக்காலத் தேர்தலில் பின்னடைவு ஏற்படுவது அமெரிக்க அரசியலில் புதிதல்ல. ஆனால், இந்த முறை குடியரசுக் கட்சி இழந்திருக்கும் இடங்களும், ஜனநாயகக் கட்சி வென்றிருக்கும் மாநிலங்களும் அமெரிக்க அரசியலில் புதிய விவாதத்தைத் தொடங்கியிருக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருப்பதுடன், பல மாநிலங்களின் ஆளுநர் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

தேர்தல் முடிவு

2026 நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு எதிராக ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குறைந்தது 18 இடங்களையும், செனட் சபையில் 7 இடங்களையும் கூடுதலாகக் கைப்பற்றி இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி குறைந்தது 231 இடங்களையும், செனட் சபையில் 54 இடங்களையும் பெற்றுள்ளது.

மேலும், ஜார்ஜியா, அயோவா, ஓஹியோ, டெக்சாஸ் உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிக்க மாநிலங்களிலும் ஆளுநர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. டெக்சாஸில் ஜினா ஹினோஜோசா, ஓஹியோவில் ஏமி ஆக்டன் ஆகியோர் வெற்றி பெற்றதுடன், விவேக் ராமசாமி ஆளுநர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இதன் மூலம் டிரம்பின் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி தேர்தலில் வெளிப்பட்டுள்ளதுடன், அவரது பதவிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

டிரம்புக்கு எதிரான வாக்குகள்

பின்னடைவு

இந்தத் தேர்தலை டிரம்ப் தன்னுடைய அரசியல் செல்வாக்குக்கான சோதனையாகவே முன்னிறுத்தினார். குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததுடன், தமக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பதாகக் கருதி தேர்தலை எதிர்கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களையும் கேட்டுக்கொண்டார்.

ஆனால், டிரம்பின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தி வாக்காளர்களிடையே அதிகரித்திருப்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, ஈரானுடனான போர் உள்ளிட்ட விவகாரங்கள் குடியரசுக் கட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கியிருக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் குடியரசுக் கட்சி வசமிருந்த பல இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. டெக்சாஸ், ஓஹியோ, கன்சாஸ், அயோவா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா ஆகிய மாநிலங்களில் கிடைத்த வெற்றிகள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக, குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் தெற்கு கரோலினாவில் ஜனநாயகக் கட்சியின் அன்னி ஆண்ட்ரூஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 1998க்குப் பிறகு அந்த மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி செனட் தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களின் பட்டியல், குடியரசுக் கட்சியின் ஆதரவு தளத்தில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை காட்டுகிறது.

அரசியல் கணக்கு

டிரம்பின் அரசியல் கணக்கைத் தவறாக்கிய லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர்

2024 அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்த இளம் தலைமுறையினர், கருப்பின ஆண்கள் மற்றும் ஹிஸ்பானிக் எனப்படும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினரின் வாக்குகள் இந்த முறை ஜனநாயகக் கட்சியை நோக்கித் திரும்பியிருப்பது முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, புளோரிடாவில் ஹிஸ்பானிக் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் 2024 தேர்தலில் டிரம்ப் பெற்றிருந்த லத்தீன் அமெரிக்க வம்சாவளியினரின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கவில்லை என்பது தெரியவருகிறது. இளம் வாக்காளர்களிடையேயும் இதே மாற்றம் ஏற்பட்டுள்ளது. 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளித்துள்ளதாகத் தேர்தல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொகுதி மறுவரையறையும் கைகொடுக்கவில்லை

தேர்தலுக்கு முன்னதாக, குடியரசுக் கட்சி மேற்கொண்ட தொகுதி மறுவரையறை முயற்சியும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. தங்களுக்குச் சாதகமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைத்து அதிக இடங்களைக் கைப்பற்றலாம் என்று குடியரசுக் கட்சி கணக்கிட்டது.

ஆனால், அந்த முயற்சியால் மறுவரையறை செய்யப்பட்ட பல தொகுதிகளிலேயே ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றிகள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

பின்னடைவு

2028 அதிபர் தேர்தலுக்கான முன்னோட்டமா?

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியிருப்பதால், டிரம்ப் நிர்வாகத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகள் அரசியல் ரீதியாகக் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் குறைந்திருப்பதால், டிரம்பின் கொள்கைகள் மற்றும் நிர்வாக முடிவுகள் மீது நாடாளுமன்றக் கண்காணிப்பும் எதிர்ப்பும் அதிகரிக்கும்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதிபர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இடைக்காலத் தேர்தல், ஆளும் கட்சியின் மீதான மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்கான முக்கியமான அளவுகோலாகக் கருதப்படுகிறது.

2024ல் டிரம்புக்கு வெற்றியைத் தேடித்தந்த வாக்காளர் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், குடியரசுக் கட்சியின் எதிர்கால அரசியல் வியூகத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.