BIG STORIES

OPERATION அன்பில், ரூ.100 கோடி PARTY FUND, அடுத்து சிக்கும் முக்கிய புள்ளி யார்?

திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு லைசென்ஸ் வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நவம்பர் 6ஆம் தேதி வரை காவலில் வைக்க ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன் ஜாமீன் மறுக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே அன்பில் மகேஷை காவல்துறை கைது செய்த நிலையில், அன்பில் மகேஷை சிக்க வைத்த ஊழல் புகார் என்ன? வழக்கு கடந்து வந்த பாதை என்ன? கட்சி நிதி என்ற பெயரில் வாங்கப்பட்ட பணம் யார் கைக்கு சென்றது? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Azhagiri Arumugam

நான்கே மாதங்களில்...

தவெக ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் தள்ளியிருக்கிறது.

தவெக ஆட்சிக்கு வந்ததுமே தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கியதாக அந்த சங்கத்தின் தலைவராக இருந்த திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

ஜூன் மாதம் அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், அப்போதில் இருந்தே லஞ்ச புகாரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரும் அடிபட ஆரம்பித்தது. தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கைது செய்திருக்கிறது.

அன்பில்மகேஷ்

ரூ.10 லட்சம் வரை

பள்ளிக்கல்வித்துறைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக இருந்த போது, புதிதாக தொடங்கப்படும் தனியார் பள்ளிகளுக்கு NOC என்று சொல்லக்கூடிய தடையில்லா சான்றிதழ் வழங்க 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்பட்டது.

தனியார் பள்ளிகளை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற நிலையில், அதற்கும் லஞ்ச வேட்டை நடந்திருக்கிறது. நர்சரி பள்ளிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் லஞ்சம் வாங்கப்பட்டது என பகீர் கிளப்பப் பட்டது.

ஆண்டுக்கு ரூ.400 கோடி

ஒட்டு மொத்தமாக 177 பள்ளிகளிடம் இருந்து கட்டுக்கட்டாக லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது என சொல்லப்பட்ட நிலையில், அடுத்தகட்ட விசாரணை அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நோக்கி நகர்ந்தது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.கிணறு தோண்ட கிளம்பிய பூதம் போல ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை லஞ்சமாக வாங்கியதாக அதிர வைக்கும் தகவல்களும் வெளியாகின.

அரசகுமார்

லஞ்சம் வாங்க தனியறை

லஞ்சம் கொடுக்காத பள்ளி நிர்வாகத்தை அலைக்கழிப்பதோடு, லஞ்சம் வாங்குவதற்கென்றே DPI வளாக கட்டிடத்தில் 2ஆவது மாடியில் தனியாக ஒரு அறையே இயங்கி வந்திருக்கிறது. அரசு அலுவலக கட்டிடத்தில் வைத்து தான் தனியார் பள்ளிகளிடம் இருந்து லஞ்ச பணம் பெறப்பட்டிருக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கட்சி நிர்வாகி, நண்பர், உறவினர் என 3 பேரை வைத்து தான் தனியார் பள்ளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்க வைத்தார் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுமட்டுமல்லாமல், தியாகராய நகரில் குளோபல் 360 என்ற நிறுவனத்தை தொடங்கி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஷூ, பெல்ட், யூனிபார்ம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த அன்பில் மகேஷ் தரப்பு, அந்த நிறுவனத்தில் மட்டும் தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி நிர்பந்தம் செய்ததாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் பார்த்ததாகவும் சொல்லப்பட்டது.

அன்பில் மகேஷ்

முன்ஜாமீன் மனு

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு சோதனை நடத்தியது. சென்னை, திருச்சியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் குற்றப்பிரிவு போலீஸ் கையில் சிக்கிய நிலையில், அடுத்தகட்டமாக அன்பில் மகேஷை கைது செய்ய ஆயத்தமானது போலீஸ். ஆனால், கைதுக்கு பயந்து முன் ஜாமீன் கேட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததால் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

முன் ஜாமீன் மறுப்பு

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன் ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், உடனே கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும் போது முன் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், கட்சி நிதி என்ற பெயரில் பெரிய அளவில் பணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த தொகை யாரை சென்றடைந்தது? என்பதை விசாரிக்க வேண்டும் எனவும், முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படக்கூடும் எனக் கூறியும் மறுத்துவிட்டது.

முன்னாள் அமைச்சர்

வீட்டு வாசலில்...

காலை 11 மணிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே கைதுக்கான அறிகுறி தென்பட தொடங்கியது. திமுக முகாம்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முன் ஜாமீன் மறுக்கப்பட்டதால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என ஆலோசனை நடத்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைந்தகரையிலுள்ள திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆலோசனை முடிந்து வெளியே வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, வில்சன் வீட்டு வாசலில் வைத்தே மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

சட்டரீதியாக எதிர்கொள்வோம்

சிரித்த முகத்துடன் காவல்துறை வாகனத்தில் ஏறி சென்றிருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. சுமார் நான்கைந்து மணி நேர விசாரணைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அன்பில் மகேஷ். கைது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறியதோடு, தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது எனவும், சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்வோம் எனவும் கூறினார்.

அன்பில் மகேஷ்

அடுத்த டார்கெட் யார்?

லஞ்ச புகாரில் சிக்கிய தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசக்குமார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முத்துக்குமார் என்பவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினரான வாலாடி கார்த்தியும் போலீசின் விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் திமுக முன்னாள் அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் தவெக அரசு கைது செய்திருக்கும் நிலையில், அடுத்த டார்கெட் யார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.