காவல் நீட்டிப்பு  நியூஸ்தமிழ்24x7
BIG STORIES

அன்பில் மகேஷ் வழக்கில் புது EVIDENCE, கோர்ட்டில் போலீஸ் தகவல்

அன்பில் மகேஷை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என காவல்துறை கறார் காட்ட, கடைசியில் வழக்கு நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Azhagiri Arumugam

தனியார் பள்ளிகளிடம் இருந்து 400 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக கூறிய காவல்துறை, அன்பில் மகேஷ் வீட்டுக்கு பணத்தை கொண்டு செல்ல புரோக்கராக இருந்த கார் டிரைவர் தலைமறைவாக இருப்பதால் ஜாமீன் வழங்கவே கூடாது என திட்டவட்டமாக வாதிட்டது.

அன்பில் மகேஷ் கைது

அன்பில் மகேஷ் கைது

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிரான 400 கோடி ரூபாய் லஞ்ச வழக்கு விவகாரம், நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, போலீஸ் காவல் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

இதனிடையே, ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு மாற்றம், குற்றச்சாட்டு

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறிய அன்பில் மகேஷ் தரப்பு, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக பொய் சொல்லி ஏமாற்றி 100 கோடி ரூபாய் வசூலித்ததாக அரசகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது வழக்கையே மாற்றி இருப்பதாக குற்றம்சாட்டியது.

ஊழல் வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை இருக்கும் போது, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய குற்றப்பிரிவு ஏன் தலையிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய அன்பில் மகேஷ் தரப்பு, முதலில் 100 கோடி என ஆரம்பித்த வழக்கு தற்போது 400, 600, 800 கோடி என இஷ்டத்திற்கு ஏற்றப்பட்டு கொண்டிருக்கிறது எனவும் வாதிட்டது.

ஜாமீன் வழக்கு

பணம் வாங்கியதாக எப்படி கூற முடியும்?

மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் பெறும் நடைமுறை மூலம் ஊழலுக்கு வழிவகுக்கும் என தனியார் பள்ளிகள் கூறியதால் தான், தலைமை வழக்கறிஞரின் ஆலோசனை பெறப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது எனவும், அரசாணையில் கூடுதல் செயலாளர் தான் கையெழுத்திட்டிருக்கிறார் எனவும், இது அரசு அதிகாரிகள் கூட்டாக எடுத்த முடிவு எனவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பிப்பது தொடர்பான அரசாணையில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதோடு, அப்படி இருக்கும் போது எப்படி பணம் வாங்கிக் கொண்டு சாதகமாக செயல்பட்டதாக கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

லஞ்சம் கொடுத்தவர்களை கைது செய்யவில்லை

பி.டி.அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்தவர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டவர்களை கைது செய்யாதது ஏன்? எனவும் அன்பில் மகேஷ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான அரசாணை பல்வேறு துறை அதிகாரிகளை கடந்து பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சதியில் ஈடுபட்டார்களா? சட்டம் தெரியாமல் நடவடிக்கை எடுத்தார்களா? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கவில்லை எனவும், லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டு சாட்சி அளித்தவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாகவே கருத வேண்டுமே தவிர, அவர்களை எப்படி சாட்சிகளாக சேர்த்தீர்கள்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

கைது செய்யாதது ஏன்?

காவல்துறை மீது புகார்

லஞ்சம் கொடுத்தவர்களுக்கு போலீஸ் சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும், 30 லட்சம், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறிய தனியார் பள்ளிகளிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது? என குற்றப்பிரிவு போலீஸ் ஏன் விசாரிக்கவில்லை? எனவும் வினா எழுப்பிய அன்பில் மகேஷ் தரப்பு, இதுவரை முத்துகுமார் தலைமறைவு என கூறி வந்த போலீஸ், தற்போது முத்துக்குமார் சரணடைந்ததும் மேலும் ஒருவர் தலைமறைவு என சொல்லி மழுப்புகிறார்கள் எனவும் போலீஸ் மீது நீதிபதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

முத்துக்குமாருக்கு அடைக்கலம்

அன்பில் மகேஷ் தரப்பு வாதம் முடிந்ததும், காவல் துறை தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அப்போது, அரசகுமார்,

முத்துகுமாருடன் சேர்ந்து அன்பில் மகேஷ் தான் சங்கத்தை நடத்தினார் எனவும், அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து பணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது எனவும் கூறிய காவல் துறை தரப்பு, ஆரம்பத்தில் லஞ்ச விவகாரத்தில் அன்பில் மகேஷுக்கும் தொடர்பு இருப்பது புகார்தாரருக்கு தெரியாது எனவும் கூறியது.

புலன் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்ற காவல் துறை தரப்பு, அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட அடுத்த 2 நாட்களில் முத்துகுமார் சரண் அடைந்ததை சுட்டிக்காட்டி, முத்துக்குமாருக்கு அடைக்கலம் கொடுத்தது அன்பில் மகேஷ் தான் எனவும் கூறப்பட்டது.

வீடியோ ஆதாரம்

வீடியோ ஆதாரம்

பணத்தை வசூலித்தது முத்துக்குமார் தான் என்ற காவல்துறை தரப்பு, அந்த பணத்தை சரவணன் என்பவர் தான் அன்பில் மகேஷ் வீட்டுக்கு கொண்டு சென்றார் எனவும், அதற்கான வீடியோ ஆதாரமே காவல்துறையிடம் சிக்கியிருக்கிறது எனவும் பகீர் கிளப்பியது. பணத்தை கொண்டு செல்லும் புரோக்கராக செயல்பட்ட சரவணன், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், முத்துக்குமாரை விசாரித்து தான் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு, அன்பில் மகேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது எனவும் அது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டியிருக்கிறது எனவும் காவல்துறை கூறியது.

ஜாமீன் வழங்க கூடாது

முத்துக்குமார் சரணடைந்த பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக கூறிய காவல்துறை தரப்பு, பணத்தை எடுத்துச் சென்ற சரவணன் தலைமறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

புதிய பி.என்.எஸ்., சட்டப்படி 60 நாட்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்ற காவல் துறை தரப்பு, புலன் விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது எனவும், அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கினால் புலன் விசாரணை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நவ.10ம் தேதிக்கு

அன்பில் மகேஷ் தரப்பு வாதம்

காவல்துறை முன் வைத்த வாதங்களை அடுத்து, மீண்டும் அன்பில் மகேஷ் தரப்பு வாதங்களை முன் வைத்தது. அப்போது, சாட்சியம் அளித்த தனியார் பள்ளி நிர்வாகிகள் ரொக்க பணமாக லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டிருக்கும் போது, லஞ்சம் கொடுத்தவர்களுக்கு காவல்துறை நற்சான்று வழங்க முடியாது எனவும், முத்துக்குமாரின் கார் டிரைவர் சரவணன், லஞ்ச பணத்தை முன்னாள் அமைச்சரிடம் கொடுத்த வீடியோ இருப்பதாக காவல்துறை

தரப்பில் கூறப்படும் நிலையில், அப்படி ஒரு வீடியோ இருப்பது உண்மை என்றால் வழக்கு விசாரணை முடியும் வரை ஜாமீன் கேட்க மாட்டோம் எனவும், லஞ்சம் கொடுக்க செல்வது போல அவரே வீடியோ எடுத்து, அவரே யூடியூப்பில் போடுவது எப்படி முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் எனவும், முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கும், அன்பில் மகேஷை ஜாமீனில் விடுவிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

காவல் நீட்டிப்பு

இதையடுத்து, அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு காரணமாக நவம்பர் 10ம் தேதிவரைக்கும் அதாவது மேலும் 5 நாட்களுக்கு சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விசாரணையில், காவல்துறையும், அன்பில் மகேஷும் முன்வாதங்களை வைத்து பார்க்கும் போது, இந்த வழக்கில் இன்னும் பல TWIST AND TURNS இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.