சீமான் கணக்கு  நியூஸ்தமிழ்24x7
BIG STORIES

சீமானின் அம்பை கணக்கு: உதவுமா திமுக?

தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, வேட்பாளர் நான் தான் என அறிவித்துக் கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவின் கிரீன் சிக்னலுக்கு வெற்றிலை பாக்குடன் காத்திருக்கும் நிலையில், அறிவாலய தலைமை என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சீமானை ஆதரிப்பது திமுகவுக்கு பலமா? பலவீனமா? பின்னணியில் இருக்கும் தேர்தல் கணக்கு என்ன?

Azhagiri Arumugam

அம்பாசமுத்திரத்தில்...

கரூர், விராலிமலை, பெருந்துறை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தாம் களமிறங்க இருப்பதாக ஊருக்கு முந்திக் கொண்டு முதல் ஆளாக அறிவித்தார் சீமான். வேட்பாளர் என அறிவித்ததோடு இருக்காமல், அதிமுகவும், திமுகவும் சேர்ந்து தன்னை பொது வேட்பாளராக ஆதரித்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் சீமான். சீமானின் இந்த பேச்சு தான் அம்பாசமுத்திரம் தொகுதியை அனைவரும் உற்றுநோக்க முக்கிய காரணம்.

அதிமுக முடிவு

அதிமுக வியூகம்

ஆனால், அதிமுகவோ அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, முன்னாள் காவல்துறை அதிகாரி வெள்ளதுரையை போட்டியிட வைக்க முடிவு செய்திருப்பதாக தகவலும் வெளியானது. ஆனால், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை ஆதரிக்க போகிறீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத மு.க.ஸ்டாலின், ’தேர்தல் தேதி அறிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம்’ என பதிலளித்தார்.

திமுக வேட்பாளர் யார்?

முதலில், அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக சார்பில் ஓ.பி.எஸ்., மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை போட்டியிட வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த பேட்டிக்கு பிறகு, எங்கு சீமானை திமுக ஆதரித்து விடுமோ என்ற அச்சம் உடன்பிறப்புகளை ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கிறது. ஏனென்றால், இதுநாள் வரையில் திமுகவை எதிர்த்தே அரசியல் செய்து வந்தவர் சீமான்.

குறிப்பாக, காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்ததற்காக சீமான் வைத்த விமர்சனங்களெல்லாம் திமுக தொண்டர்களின் ஆத்திரத்தை தூண்டக்கூடியவை. ’பதவிக்காக பிணத்தின் மீது நாற்காலி போட்டு ஆட்சி செய்தவர் கருணாநிதி,’ என ஈழத்தமிழர் படுகொ*யை சுட்டிக்காட்டி கடுமையாக சாடினார்.

சீமான் எதிர்பார்ப்பு

திமுகவுக்கு எதிராக சீமான்

இதெல்லாம் கூட அரசியல் ரீதியான விமர்சனம் என கடந்து சென்றாலும், கலைஞர் கருணாநிதியை குறி வைத்து அடிக்கடி திமுகவினரை சீண்டிக் கொண்டே இருந்தார் சீமான். 2016 தேர்தலின் போது, கலைஞர்

உடல்நலம் குன்றியிருந்ததை சுட்டிக்காட்டி, ’நடக்க முடியாத நேரத்தில் முதலமைச்சர் பதவி தேவை தானா?’ என கிண்டலடித்தார் சீமான். கடந்த திமுக ஆட்சியில் மெரினா கடலில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், ’பேனா சிலை வைத்தால் நானே வந்து உடைப்பேன்’ என கொந்தளித்தார்.

பாடல் பாடி வெறுப்பு

இதெல்லாம் விட, விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது கலைஞர் கருணாநிதி மீது அவதூறு பரப்பும் வகையில் பாட்டு எழுதி விமர்சித்தது திமுகவினருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு மேடையோடு நிற்காமல் ஒவ்வொரு மேடையிலும் அந்த பாடலை பாடி பாடி திமுகவினரை வெறுப்பேற்றினார் சீமான்.

ஓபிஎஸ் மகன்

இன்னும் முக்கியமாக தந்தை பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சுக்களை கேட்ட திமுகவினர் எவரும் சீமானுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து கனவிலும் யோசிக்கக் கூட மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ’பிராமண கடப்பாறையை கொண்டு திராவிட கோட்டையை உடைப்பேன்,’ என பாஜகவுடன் நெருக்கம் காட்டி திராவிடத்திற்கு எதிராக பேசிய சீமான், ’இது பெரியார் மண் அல்ல, பெரியாரே ஒரு மண் தான்,’ என ஆணவம் காட்டினார்.

அம்பாசமுத்திரத்தில் விட்டுக் கொடுத்தால்...

அரசியலில் எதிராக பேசிக் கொள்வதும், நட்பு பாராட்டிக் கொள்வதும் சர்வ சாதாரணம் தான் என்றாலும், சீமானின் பேச்சுகளில் முக்கால்வாசி தனிமனித தாக்குதல்களும், வெறுப்புமே நிறைந்திருக்கும். ’தந்தை பெரியாரை, கலைஞர் கருணாநிதியை விமர்சித்தார் என்பதை தாண்டி, சீமானை பொது வேட்பாளராக ஆதரிப்பது தனக்கு தானே திமுக குழி தோண்டிக் கொள்வதற்கு சமம்,’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தவெகவுக்கு எதிரான பலமான எதிர்க்கட்சியாக திமுக இருந்து வரும் நிலையில், அந்த இடத்தை அம்பாசமுத்திரத்தில் விட்டுக் கொடுப்பது பலவீனமான முடிவாக தான் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

சீமான் விமர்சனம்

தவெக வெர்சஸ் திமுக என்று விஜய் கொண்டு செல்லும் நெரேட்டிவை திமுகவும் தங்களுக்கு சாதகமாக தான் நினைக்கிறது. அப்படி இருக்கையில், இடைத் தேர்தல் களத்தை விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் கூட இடைத்தேர்தலில் திமுக 2ஆம் இடம் பிடித்திருந்தது என்பதால், வருகிற இடைத் தேர்தல்களிலும் தவெகவுக்கு எதிராக சொந்தமாக வேட்பாளரை களமிறக்குவது தான் சிறந்த முடிவாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஏற்றுக் கொள்வார்களா?

மேலும், அரசியலுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத சீமானை, வெற்றி பெற வைப்பதில் திமுகவுக்கு என்ன லாபம் என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. கடைசியாக போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் கூட நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்.

அதோடு, திமுகவை கடுமையாக எதிர்த்திருக்கும் சீமானுக்கு ஆதரவு கொடுக்க திமுக தலைமை முடிவு செய்தாலும், களத்தில் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா? நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமா? என்பதெல்லாம் பில்லியன் டாலர் கேள்வி. திமுக ஆதரவுடன் சீமான் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியினரே சீமானுக்கு ஓட்டுப் போடுவார்களா? என்பதும் சந்தேகம் தான்.

தவெக vs திமுக

கூட்டணிக்காக...

கூட்டணி அமைத்து போட்டியிடுவது வேறு, பொது வேட்பாளர் என ஆதரவு கொடுப்பது வேறு. ’கூட்டணிக்கு வர முடியாது, ஆதரவு மட்டும் கொடுங்கள்,’ என சீமான் கேட்பதிலும் தர்க்கம் இருப்பதாக தெரியவில்லை. போதாக்குறைக்கு, மக்களவை தேர்தலில் 8 சதவீதமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி, சட்டமன்ற தேர்தலில் 4 சதவீதமாக சுருங்கி விட்டது. இதுவரைக்கும் கூட்டணியே வேண்டாம் என முறுக்கிக் கொண்டு இருந்த சீமான், தற்போது திமுக, அதிமுகவின் ஆதரவு கிடைக்குமா? கிடைக்காதா? என மதில் மேல் பூனை போல மாறியிருக்கிறார்.

கோட்டைக்கு போவாரா?

கடலூர், திருவொற்றியூர், காரைக்குடி என இதற்கு முன்பு போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோற்றுப் போயிருந்தாலும், சீமான் இந்தளவுக்கு முகம் வாடி கவலைப்பட்டது கிடையாது. ஆனால், விஜய்யின் வெற்றி ஏற்படுத்திய காயம், சீமானை அம்பாசமுத்திரம் இடைத் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறது. கோட்டையின் வாசலுக்கு செல்ல வேண்டும் என்ற சீமானின் கனவை அம்பாசமுத்திரம் தொகுதி திமுக மூலம் நிறைவேற்றிக் கொடுக்குமா? அல்லது ஆசை காட்டி மோசம் செய்யுமா? என்பது போக போக தான் தெரியும்.

கனவு நனவாகுமா?