சினிமா

நோயுடன் போராடி முகமலரச் சிரித்த நம்பிக்கை நட்சத்திரம்

புற்றுநோயுடன் போராடி முகமலரச் சிரித்த பலரின் நம்பிக்கை நட்சத்திரம், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன் காலமானார். அவரது கடைசி வீடியோ வைரலாகி வருகிறது.

Azhagiri Arumugam

நெட்டிசன்கள் கண்ணீர்...

சமூக வலைதளங்களில் தனது வசீகரப் புன்னகையாலும், வாழ்வின் எத்தகைய துயரங்களையும் புன்னகையோடு எதிர்கொள்ளும் அசாத்திய தன்னம்பிக்கையாலும் லட்சக்கணக்கானோரின் இதயங்களைக் கவர்ந்த பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், ஊக்கமளிக்கும் பேச்சாளருமான ராஜஸ்ரீ ஜெய்சன் புற்றுநோய்த் தாக்கத்தால் மரணமடைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தாலும், தன் வலிகளை ஒருபோதும் வெளிக்காட்டாமல் எப்போதுமே பாசிட்டிவிட்டியைப் பரப்பி வந்த இவரின் மறைவுச் செய்தி, உறவினர்களை மட்டுமல்லாமல் இவரைத் தன் சொந்த சகோதரியாக, தோழியாகப் பார்த்த கோடிக்கணக்கான நெட்டிசன்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ச்சியாக வீடியோ

வெறும் 36 வயதே ஆன ராஜஸ்ரீ ஜெய்சன், பட்டிமன்ற மேடைகளில் தனது கம்பீரமான குரலாலும், நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் ரசிகர்களை ஈர்த்து வந்தார். தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவரது வாழ்க்கையில், கடந்த 2022ம் ஆண்டுதான் பேரிடியாக இவரைப் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

அதுவும் நோய் முற்றிய நான்காவது கட்டத்தில்தான் அது தெரியவந்தது. இதைக் கேட்ட மாத்திரத்தில் எத்தகையோரும் நிலைகுலைந்து தான் போவார்கள். ஆனால், ராஜஸ்ரீ மனம் தளரவில்லை. சிகிச்சையின் பக்கவிளைவுகளால் தன் அழகிய கூந்தலை இழந்து, உடல் மெலிந்துபோன நிலையிலும், சோர்வை உதறிவிட்டு இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாக மோட்டிவேஷனல் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இறுதியாக அந்த வீடியோவில்...

வாழ்வில் சோர்ந்துபோன இளைஞர்களுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிவிடும் வார்த்தைகளையும், பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் கருத்துக்களையும் இடைவிடாமல் பகிர்ந்து வந்தவர்.

வாய் திறந்தால் பேசிக்கொண்டே இருக்கும் என்னால் இப்போது பேச முடியவில்லை. என் குழந்தைகள் அம்மா, உன்னால் பழையபடியும் இயல்பாகப் பேச முடியவில்லையே என்று கேட்கும்போது என் நெஞ்சம் உடைகிறது என்று அவர் தனது இறுதி நாள்களுக்கு முன்பு கண்ணீருடன் பகிர்ந்துகொண்ட அந்த வேதனைப் பதிவு அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

தான் படும் வேதனைகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகமாகவே வலம் வந்த அவர், புற்றுநோய் சிகிச்சையின் பாதிப்பால் குரலையும் இழந்து தவித்த தருணம் பார்ப்போரின் இதயங்களை நொறுக்கியது.

ஆனாலும், இறுதி மூச்சு வரை தன்னம்பிக்கையை இழக்காமல் போராடிய ராஜஸ்ரீயின் உயிர் தற்போது சிகிச்சை பலனின்றி பிரிந்துள்ளது.

விடைபெற்றார் தன்னம்பிக்கை நாயகி

எத்தனை நாள்கள் தான் இப்படி நடிப்பது, எனக்குள்ளும் வலி இருக்கிறது என்று அவர் கடைசி காலகட்டத்தில் மனம் உடைந்தபோது கூட, இந்த உலகத்திற்கு நம்பிக்கையையும் நேர்மறைச் சிந்தனையையும் மட்டுமே பரிசாக அளித்துவிட்டு விடைபெற்றுள்ளார் ராஜஸ்ரீ ஜெய்சன்.

புன்னகையால் உலகை வென்ற அந்தப் பாசமுள்ள தாயின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரது குழந்தைகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வோம். ஆத்மா சாந்தியடையட்டும்...

வீடியோவைக் காண...