நியூஸ்தமிழ்24x7
சினிமா

வில்லன் ஆனந்தராஜ், காமெடி பீஸாக மாற்றிய ஏ.ஐ.

90களில் சினிமா பார்ப்பவர்களை கோபத்தில் கொப்பளிக்க வைத்த வில்லன் நடிகரான ஆனந்த ராஜின் மிரட்டல் காட்சிகள் எல்லாம் தற்போது சமூகவலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் காமெடி காட்சிகளாக வலம் வருவது பலரையும் சிரிப்பில் ஆழ்த்தி உள்ளது.

Azhagiri Arumugam

தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது ஆனந்தராஜே பார்த்தாலும் ’அடப்பாவிகளா, என்ன செய்து வைத்துள்ளீர்கள்?’ என நீரை கொப்பளிக்கதான் செய்வார் என்பதுபோல் வீடியோக்கள் உள்ளன.

நடிகர் ஆனந்தராஜ்

ஒருகாலத்துல எவ்வளவு பெரிய வில்லன் தெரியுமா?

1998ஆம் ஆண்டு வெளியான சிம்மராசி திரைப்படத்தில் மருதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் சாதிவெறி பிடித்த கிராமத்து பண்ணையாராக நடித்திருப்பார் ஆனந்த ராஜ். அதில் முகம் பார்க்கும் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து தானே உமிழ்ந்து "என்ற பாக்குற தோத்துக்கிட்டே இருக்கியே டா..." எனக்கூறுவார் ஆனந்தராஜ்.

நெற்றியில் பெரிய பொட்டு, தோள்பகுதிவரை வளர்ந்து கிடக்கும் சுருட்டை முடி, கண்நிறைய பழிவாங்கும் எண்ணம் என இந்த காட்சியை இப்போது பார்த்தாலும் இவரெல்லாம் மனுஷனா? இரக்கமென்றால் என்னவென்றே தெரியாதா? என கொந்தளிப்பவர்கள் உண்டு.

அந்த அளவுக்கு ஒரிஜினல் வில்லனிச கிராமத்து பண்ணையாராகவே வாழ்ந்திருப்பார் ஆனந்தராஜ்.

அப்படிப்பட்ட கேரக்டரையே டம்மியாக மாற்றும் அளவுக்கு ஏஐ வீடியோக்கள் இன்ஸ்டாவை ஆக்கிரமித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

ஏஐ வீடியோக்கள்

ஏஐ மூலம் காமெடி

எரிச்சலூட்டும் மருதநாயகம் கதாபாத்திரமும், அவரது டயலாக்கும் தற்போது சோஷியல் மீடியாக்களில் ஏஐ மூலம் காமெடி வீடியோக்களாக வலம் வருவதை பார்க்கும் வலைதளவாசிகள் ஒருகாலத்துல அவரு எவ்வளவு பெரிய வில்லன் தெரியுமா? ஒற்றை பார்வையால் 90ஸ் கிட்ஸ்களை ஓடவிட்ட அவரை எப்படி மாற்றி வைத்துள்ளீர்கள் தெரியுமா? என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதேபோல், ஆனந்தராஜ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுவது போன்றும், அப்போது திரைப்படத்தில் வரும் "அடங்கொப்பன் தாமிரபரணியில தலைமுழுக" என்ற டயலாக்கை பயன்படுத்தியும் பரவி வரும் ஏஐ வீடியோக்களும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

ஆனந்தராஜ் மட்டுமல்ல...

வில்லன் ஆனந்தராஜ் மட்டுமல்லாது சினிமாக்களில் 90ஸ் கிட்ஸ்களின் ஆத்திரத்தோடு விளையாடிய வில்லன் நடிகர்களான பொன்னம்பலம், மன்சூர் அலிகான் ஆகியோரையும் பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாடி உள்ளனர் வலைதளவாசிகள்.

அதிலும், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் தனது உடல்பாவனையால் வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்த மன்சூர் அலிகானையும் காமெடி பீஸாகவே மாற்றி வைத்துள்ளனர்.

ஏஐ கிண்டல்

சிரிக்காமல் இருக்க முடியாது

இந்த வீடியோக்களை பார்த்து அவர்களே சிரிக்காமல் கடந்து செல்ல முடியாது. அதிலும், ஆனந்தராஜ் கட்டாயம் சிரிக்காமல் இருக்கமாட்டார். காரணம், வில்லனாக இருந்து காமெடியனாக உருவெடுத்திருப்பவர்தான் ஆனந்தராஜ்.

நானும் ரவுடிதான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் அவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பார். அதேபோல், 80'ஸ் பில்டப் படத்தில் மஞ்சக்கிளி என்ற கேரக்டரிலும், ஜாக்பாட் திரைப்படத்தில் மானஸ்தன், மானஸ்தி என்ற இரட்டை கதாபாத்திரத்திலும் லேடி கெட்டபில் நடித்து அசத்தி இருந்தார்.

டாப் வில்லனாக இருந்து டிப்டாப் காமெடியனாக மாறிய ஆனந்தராஜ் நிஜத்தில் மிகவும் மென்மையான, நேர்மையான மற்றும் குழந்தை மனம் கொண்டவர் என பல நேர்காணல்களில் சக திரையுலகினர் கூறி உள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பம்

அப்படிப்பட்ட குழந்தை மனதுக்கு சொந்தக்காரரான ஆனந்தராஜ் இந்த ஏஐ வீடியோக்களையும் ரசிக்கதானே செய்ய முடியும்?

வில்லன் நடிகர்கள், ஹீரோக்கள், ஹீரோயின்கள் ஆகியோரை ஏஐ வீடியோக்களால் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி வைரலாக்கி வரும் சமூகவலைதளவாசிகள் அடுத்து யாரை என்ன செய்ய காத்திருக்கிறார்களோ?