பாலாஜி முருகதாஸ்  நியூஸ்தமிழ்24x7
சினிமா

யார் புகார் கொடுத்தது? பிக்பாஸ் பிரபலம் கேள்வி - "இதோ ஆதாரம், வீடியோ"

"பிக்பாஸ்" பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் தீபாவளியன்று நள்ளிரவில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்ட விவாகரம் அடுத்தடுத்து பேசுபொருளுக்கு வழிவகுத்துள்ளது.

Azhagiri Arumugam

’மூன்று பூனைகள், 1 நாயை பார்க்கத் தான் ஆய்வு செய்தார்களா?’ என முதலமைச்சரிடமே பாலாஜி முருகதாஸ் கேள்வி எழுப்ப, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றித் தான் ஆய்வு செய்தோம் என காவல்துறை விளக்கமளிக்க, அப்பட்டமான பொய் என பிக்பாஸ் பிரபலம் சிசிடிவி காட்சி வெளியிட வழக்கு, அடுத்தக்கட்டத்தை எட்டி உள்ளது.

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் பிரபலம்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-4 மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார் பாலாஜி முருதாஸ். மனதில் தோன்றுவதை சற்றும் யோசிக்காமல் பளிச்சென முகத்திற்கு நேராக பேசுவது, எந்த காரணத்திற்காகவும் பின்வாங்காமல் யாராக இருந்தாலும் சண்டை போடுவது, சிலநேரங்களில் அடக்க முடியாத கோபத்தால் மரியாதைக் குறைவாக பேசுவது, மைக்கை தூக்கிப்போட்டு உடைப்பது என இவர்தான் அந்த சீசனையே சர்ச்சைக்கு பஞ்சமின்றி பரபரப்பாக இழுத்துச் சென்றார்.

இதுபோன்ற அவரது சில நடத்தைகளால் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வெற்றி மேடைவரை வந்து அந்த சீசனில் ரன்னர் அப் ஆனார் பாலாஜி முருகதாஸ். அதன்பிறகு, பெரியதிரையில் கால் வைக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதேபோல், தனியார் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

பிக்பாஸ் ரன்னர்

தீபாவளி நாளன்று...

இந்நிலையில் தான், பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீபாவளியன்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு செய்ய வந்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பாலாஜி முருகதாஸ், "I AM A CLEAN PERSON" எனக் கூறியதோடு வீடியோ எடுக்க வேண்டாம் என காவலர்களிடம் கூறினார்.

ஆனால், வீடியோ எடுப்பதை அதிகாரிகள் நிறுத்தாததால் தனது செல்போனில் காவலர்களை வீடியோ எடுத்த பாலாஜி முருகதாஸ், ’வீட்டுக்குள்போய் சோதனை செய்து கொள்ளுங்கள், நான் ரத்தப்பரிசோதனை செய்து கொள்வதற்குகூட தயார்,’ எனவும் கூறினார்.

சரமாரி கேள்வி எழுப்பிய பாலாஜி

முறையான தேடுதல் பிடிவாரண்ட் இல்லாமல் சோதனை நடத்தப்பட்டதற்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்த பாலாஜி முருகதாஸ், நான் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான், என் மீது யார் புகார் அளித்தது? எதற்காக புகார் அளித்தார்? என முதலமைச்சர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், ஆதாரம் இல்லாமல் வெறும் தொலைபேசி அழைப்பின்பேரில் வந்து 15 காவலர்கள் சோதனை மேற்கொண்டதில் 3 பூனைகளையும், ஒரு நாயை மட்டும் தான் கண்டுபிடித்துள்ளார்கள், அதனால் எந்த அடிப்படையில் அவர்கள் சோதனை செய்ய வந்தார்கள்?

வீட்டில் சோதனை

நீதிமன்றத்தில் சந்திப்போம்

’காவல்துறையின் இந்த நடவடிக்கை வெட்கக்கேடானது, கண்டிப்பாக எனக்கு விளக்கம் தேவை,’ என்று பதிவிட்டுள்ளார். இதுமட்டுமல்லாது, ’காவல்துறை மேற்கொண்ட சோதனையால் வீட்டின் உரிமையாளர் காலி செய்யச் சொல்கிறார், இதற்கு யார் பொறுப்பேற்பது? காவல்துறை மன்னிப்பு கேட்கும்வரை இதனை விடமாட்டேன், நீதிமன்றத்தில் சந்திப்போம்,’ எனவும் காட்டமாக பதிவிட்டிருந்தார்.

பாலாஜி கேள்வி

காவல்துறை விளக்கம்

இதனிடையே, பாலாஜி முருகதாஸ் வீட்டில் சோதனை செய்தது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. திருவேற்காடு பிரெஸ்டீஜ் வின்ட்சர் பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப்பொருள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே சோதனை நடத்தப்பட்டதாகவும் ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் என மொத்தம் 4 பேர் மட்டுமே இந்தச் சோதனையில் ஈடுபட்டதாகவும், குடியிருப்புவாசிகளிடம் போலீசார் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோதனை தொடர்பான தேவையான நடைமுறைப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விளக்கம்

பாலாஜி மறுப்பு

இதனை முற்றிலும் மறுத்த பாலாஜி முருகதாஸ், ’காவல்துறை சொல்வது அப்பட்டமான பொய்,’ எனக் கூறியுள்ளதோடு தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். அதில், ’4 காவலர்கள் தான் வந்துள்ளார்களா? மற்றவர்கள் யார்?’ எனக் கேட்டுள்ள பாலாஜி, ’காவல்துறையின் பொய் புரட்டை இந்த சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் வெளிச்சம்போட்டு காட்டும்,’ எனவும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே பேசுபொருளாக இருந்த இந்த விவாகாரம் தற்போது சட்டரீதியாகவும் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது.

எழும் கேள்விகள்...

இதனிடையே, பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக யார் புகார் அளித்தது? தீபாவளியன்று இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டது ஏன்? அதே குடியிருப்பில் உள்ளவர்கள்தான் புகார் அளித்தார்களா? அல்லது வெளிநபர்களா?

பாலாஜி பதிவு

அவரது சினிமா வளர்ச்சியை டேமேஜ் செய்வதற்காக புகார் அளித்துள்ளார்களா? அல்லது உண்மையிலேயே அவர் போதைப்பொருள்தான் பதுக்கி வைத்திருந்தாரா? என பல கேள்விகள் எழும் நிலையில் முழுமையான விசாரணை முடிந்தால்தான் இந்த விவகாரத்தில் முடிவே தெரியும்.