ஏழை, எளிய மக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட நில மோசடியால், சுமார் மூவாயிரம் குடும்பங்கள் தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கை சேமிப்பும் கேள்விக்குறியாகி நிர்கதிக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் விளாசலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய கமிட்டி அமைக்க முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு.
ரூ.4,000 கோடி மதிப்புள்ள...
செங்கல்பட்டு மாவட்டம் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ளது தாழம்பூர். இங்குள்ள சுமார் 600 ஏக்கர் நிலத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 16 கல்வி நிறுவனங்களும், சில ஐடி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஆனால் அந்த 600 ஏக்கர் நிலத்துக்கும் பட்டாவே இல்லை என்பதும், அது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, யாராலும் உரிமை கோரப்படாத அனாதீன நிலம் என்பது தான் அதிர்ச்சிக்குரிய தகவலே.
இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 4 ஆயிரம் கோடி என்பது தான் கூடுதல் அதிர்ச்சி தரும் தகவல்.
வேலியே பயிரை மேய்ந்த கதை
அதிகாரிகள் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு 600 ஏக்கர் அனாதீன நிலத்துக்கு சட்டவிரோதமாக பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. முறைகேடாக பட்டா பெற்ற தனிநபர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்றி விட, மூன்று நான்கு கைகள் மாறி தான் ஏழை எளிய மக்களின் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
சில அதிகாரிகளின் சுயநலத்தால் தமிழ்நாடு அரசுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதோடு, வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அதனை தனிநபர்களுக்கு தாரை வார்த்திருப்பது தான் மிகப்பெரும் அவலம்.
பட்டா இல்லாத வீடு
வாயைக் கட்டி வயிற்றை கட்டி கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் நிலம் வாங்கி, சீட்டு போட்டும் கடன் வாங்கியும் வீடு கட்டி குடியேறிய மக்கள், பெரும்பாடு கட்டிய வீட்டில் நிம்மதியாக கண்ணயரக் கூட முடியாமல் தவித்து வருகின்றனர். முறையான பட்டா இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்துடனும், அடிப்படை வசதிகளின்றியும் வாழ்ந்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் அதிரடி
இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு திடீரென தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, 30 அல்லது 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிலத்துக்கு உரிமை கோர முடியாது என காட்டமாக தெரிவித்ததோடு, அப்பாவி குடிமக்களின் பணத்தையும், உரிமையையும் அரசு மதிக்க வேண்டும் எனவும் அறுவுறுத்தியது.
மேலும், தாழம்பூர் மக்களுக்குப் பட்டா வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
முதல்வர் விஜய் தலைமையில்...
இதையடுத்து கடந்த 29ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அனாதீன நில விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. சம்மந்தப்பட்ட நிலத்தில் என்னென்ன குடியிருப்புகள் உள்ளன?, வீடுகளுக்கு பட்டா வழங்கலாமா?, கல்வி நிறுவனங்களுக்கு 30 முதல் 60 ஆண்டுகளுக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கலாமா? என்பவை குறித்து இந்தக் குழு ஆராயும் எனவும், குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் எனவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் தங்களுக்கு தமிழ்நாடு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் தாழம்பூர் பகுதி மக்கள், அதே சமயம் அனாதீன நிலத்தை முறைகேடாக அபகரித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்தவர்கள் மீதும், சட்டத்திற்கு புறம்பாக அந்த நிலத்துக்கு பட்டா கொடுத்த அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.