நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவுக்கு, கடைசி நேரத்தில் என்ன ஆனது? 72 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்காதது ஏன்? எம்.ஜி.எம்., மருத்துவமனையில் நடந்தது என்ன?
திமுகவில் வி.எஸ்.பாபு
நோயின் பிடியில் இருந்து மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட எம்.எல்.ஏ., விஎஸ் பாபு, அவரது ஆதரவாளர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.
கொளத்தூர் எம்.எல்.ஏ., விஎஸ் பாபுவுக்கு அறிமுகமே தேவையில்லை தான். விஎஸ் பாபுவின் தாய்க்கழகம் திமுக தான். திமுகவில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தளபதியாக கொளத்தூர் தொகுதியில் வலம் வந்தவர் தான் வி.எஸ்.பாபு. மு.க.ஸ்டாலினின் கண் அசைவுக்கு கொளத்தூர் தொகுதியை கட்டுக்குள் வைத்திருந்த விஎஸ் பாபு, கருத்து வேறுபாடு காரணமாக திமுகவை விட்டு வெளியேறினார்.
மு.க.ஸ்டாலினின் தளபதி
2006 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆன வி.எஸ்.பாபுவை, சென்னை திமுகவில் புரசை வி.எஸ்.பாபு என சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ். பாபு, கலைஞர் கருணாநிதியுடனும் நெருக்கம் காட்டினார்.
ஸ்டாலினின் இளமை கால அரசியல் எண்ட்ரீ தொடங்கி பல ஆண்டுகளாக நகமும், சதையுமாக கூடவே இருந்தார். 2011 தேர்தலில் முதன்முதலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றிக்கு, வி.எஸ்.பாபுவின் களப்பணியும் காரணமாக இருந்தது.
சேகர்பாபு வருகையால்...
ஒரு கட்டத்தில் சேகர்பாபு அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்ததும் வி.எஸ்.பாபுவுக்கான முக்கியத்துவம் குறைய தொடங்கியது. காலப்போக்கில் திமுகவில் இருந்து வி.எஸ்.பாபு வெளியேற்றப்பட்டார். 2016 காலகட்டத்தில் அதிமுகவில் இணைந்த வி.எஸ்.பாபுவுக்கு வட சென்னை வட மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்தாலும் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. திடீரென வி.எஸ்.பாபுவிடம் இருந்து மாவட்ட செயலாளர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி பறிக்கவே, அமமுகவில் இணைந்தார்.
தவெக வருகையால் ஜாக்பாட்
சில காலம் அரசியல் வாடையே அடிக்காமல் இருந்த விஎஸ் பாபுவுக்கு, தவெக மூலம் மீண்டும் ஜாக்பாட் அடித்தது. தவெகவில் இணைத்துக் கொண்ட விஎஸ்.பாபுவுக்கு கொளத்தூர் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து, அவரது தளபதியாக அறியப்பட்ட வி.எஸ்.பாபுவை களமிறக்கியது தவெக.
யாருமே எதிர்பார்க்காத வகையில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார் வி.எஸ்.பாபு. இந்த வெற்றி வி.எஸ்.பாபுவுக்குப் பெரும் வெளிச்சத்தையும், பொறுப்பையும் ஒருசேரக் கொடுத்தது.
முதல்வரை வென்ற வி.எஸ்.பாபு
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, முதல்வரான மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ்.பாபுவின் வெற்றிதான் தமிழகம் முழுவதும் பேசுபொருளானது. தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயன்ட் கில்லர் என்ற அடையாளத்தைப் பெற்றுத் தந்தது கொளத்தூர் வெற்றி.
கொளத்தூர் ராஜாவாக இருந்த மு.க.ஸ்டாலினை தோற்கடித்து எம்.எல்.ஏ., ஆன வி.எஸ்.பாபுவுக்கு, பதவியை அனுபவிக்க பாக்கியமில்லாமல் போனது தான் சோகமே.
2 மாத கால மர்மம்
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கையும் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கு பிறகும், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சீக்கிரமே உடல்நலன் தேறி விடுவார் என மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியானது.
செப்டம்பர் 22ம் தேதி வரை வி.எஸ்.பாபுவின் உடல்நலன் குறித்து அடிக்கடி அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.எம்., மருத்துவமனை, அதற்கு பிறகு எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. சுமார் 2 மாத காலம் வி.எஸ்.பாபுவுக்கு என்ன ஆனது? அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தது.
மருத்துவமனை அறிக்கை, அதிர்ச்சி
எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபுவுக்கு என்ன ஆனது? என அரசிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் கூட தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 2.24 மணியளவில் வி.எஸ்.பாபு காலமானதாக
எம்.ஜி.எம்., மருத்துவமனை அறிவித்தது. நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணித்து விட்டதாக கூறியிருக்கிறது எம்.ஜி.எம்., மருத்துவமனை.
தலைவர்கள் இரங்கல், அஞ்சலி
வி.எஸ்.பாபு மறைவுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தவெக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பனையூர் அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
வி.எஸ்.பாபுவின் மறைவை அடுத்து, முதலமைச்சர் விஜய், வெள்ளிக்கிழமைக்கு திட்டமிட்டிருந்த திருச்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., ஆனதும் அவருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, சேகர்பாபுவுக்கு போட்டியாக அவர் வகித்து வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. வி.எஸ்.பாபுவும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என ஆசையோடு எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய்விட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் நலம் விசாரித்ததோடு, விரைவிலேயே நல்ல பொறுப்பு கொடுப்பதாக உறுதி அளித்ததாக சொல்லப்பட்டது. அதற்குள், வி.எஸ்.பாபுவின் உடல் நிலை ஒத்துழைக்காமல் போய் விட்டது. எம்.எல்.ஏ., விஎஸ்.பாபு மறைவு காரணமாக கொளத்தூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் சூழலும் உருவாகியுள்ளது.
வீடியோவைக் காண...