அமைச்சர்கள் ஆனந்த், மரியவில்சன் உள்ளிட்டோரும் சடலத்தை சுமக்க தோள் கொடுத்து துக்கத்தில் பங்கேற்ற நிலையில் வி.எஸ்.பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டு அவரது ஆன்மா காற்றில் கரைந்தது.
ஒரு முதலமைச்சரே சடலத்தை தோளில் சுமந்து வந்தும் காலணி இல்லாமலேயே இறுதி ஊர்வலத்தில் சோகத்தை சுமந்தபடியே நடந்து சென்றதும் துக்கத்திலும் ஒரு நெகிழ்ச்சி தான்.
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு
2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தவெக எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்ததோ, அதேபோல்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் என்ற கோட்டையையே அசால்ட்டாக அசைத்து வி.எஸ்.பாபுவும் உற்றுநோக்க வைத்தார்.
அதுவும் எந்த கட்சியால் அரசியலுக்குள் நுழைந்து, நாளடைவில் அங்கேயே வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதன்பிறகு ஒரே அடியாக ஓரங்கட்டிய அந்த கட்சிக்கு எதிராகவே களம்கண்டு வெற்றி காண்பதெல்லாம் சாதாரணமா? அதுவும் அப்போதைய முதலமைச்சரையே வீழ்த்துவதெல்லாம் அத்தனை எளிதா?
ஆனால், தவெகவில் இணைந்தபிறகு அது வி.எஸ்.பாபுவுக்கு சாத்தியமானது. ஸ்டாலினை தோற்கடித்து எம்எல்ஏ ஆன வி.எஸ்.பாபு அந்த வெற்றிக்குறியை தனது வித்தியாச சைகையால் செய்து காட்டி சமூகவலைதளங்களில் வைரலாகவும் ஆனார்.
நான்கு மாதங்களில்...
இப்படி, நட்சத்திர தொகுதியில் தனது நகர்வின் மூலம் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட வி.எஸ்.பாபு கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்ற 4 மாதங்களிலேயே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, எம்எஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவுக்கு செயற்கை சுவாசக் கருவியும் பொருத்தி மருத்துவர்கள் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும், காலன் கருணை காட்டாததால் நவம்பர் 19 பிற்பகல் 2.24 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. வி.எஸ்.பாபு மறைவுக்கு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
துக்கத்தில் துணை நிற்கிறோம்
இடப்பற்றாக்குறை காரணமாக பெரம்பூரில் உள்ள வி.எஸ்.பாபுவின் வீட்டின் அருகேயுள்ள விளையாட்டு திடலில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வி.எஸ்.பாபு உயிரோடு இருந்தபோதே நேரில் வந்து நலம் விசாரித்திருந்தார் முதலமைச்சர் விஜய். இந்நிலையில் வி.எஸ்.பாபு உயிரிழந்தபின்னும் முதலமைச்சர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார். அது பெயருக்கானது அல்ல, துக்கத்தில் துணை நிற்கிறோம் என்பதையே காட்டும்விதமாகவே இருந்தது.
இறுதி ஊர்வலத்திற்காகத் தயாராக நின்றிருந்த வாகனத்தில் வி.எஸ்.பாபுவின் உடலை ஏற்றுவதற்காக, அவரது உறவினர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தானே முன்வந்து உடலைத் தோளில் சுமந்து சென்றார்.
இவ்வாறு அவர் உடலைச் சுமந்து சென்ற நிகழ்வு, அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அந்த சோகத்திலும் நெகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.
அதேபோல், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, மரியவில்சன், அருண் ராஜ், வெங்கட்ரமணன் உள்ளிடோரும் தோள் கொடுத்து உடலை சுமந்தது அரசியலை தாண்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தியது.
இதனை தொடர்ந்து, ஊர்தியின் பின்னும் காலணிகள் இன்றி மயானம் வரை முதலமைச்சர் விஜய் நடந்தே செல்ல, அமைச்சர்களும் சோகத்துடன் நடந்து சென்றனர்.
இதையடுத்து, திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில் உள்ள தாங்கல் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.