காரை நிறுத்திய முதல்வர்  நியூஸ்தமிழ்24x7
கோயம்புத்தூர்

நீதி கேட்டு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு

கோவையில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், உரிய நீதி கிடைக்கக் கோரி அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தனது வாகனத்தை நிறுத்தி அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் உறுதியளித்துள்ளார்.

Azhagiri Arumugam

குழந்தை இல்லாததால்...

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த முகமது ஆசிக் என்பவரின் மனைவி தஹமீனா. 24 வயதான இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், சிகிச்சைக்காக கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சாய்பாபா காலனியில் உள்ள கொங்கு மருத்துவமனையை அணுகியுள்ளார்.

அப்போது, கர்ப்பப்பையில் சிறிய சதை வளர்ச்சி இருப்பதாகவும், அதனை லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், காலையில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு மாலையிலேயே வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கோவை பெண்

மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்

மருத்துவரின் அறிவுரையை நம்பி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தஹமீனாவுக்கு, அறுவை சிகிச்சையின்போது அதிக அளவு மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் அவர் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தஹமீனா உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

சிகிச்சை முடிந்த பின்பும் தஹமீனாவை பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றும், சிகிச்சை குறித்து கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் உறவினர் பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

காவல்துறையில் புகார், நடவடிக்கையில்லை

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மயக்க நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் நேரத்தில், தஹமீனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், முதலமைச்சர் விஜய் பெருந்துறை வருவதை அறிந்த குடும்பத்தினர், அவரிடம் புகார் அளிக்க முயற்சித்துள்ளனர்.

கவனித்த முதல்வர்

காரை நிறுத்தி மனுவை பெற்ற முதல்வர் விஜய்

இதன்படி, அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கோவைக்கு சென்று கொண்டிருந்த முதலமைச்சர் விஜய், சாலையோரத்தில் பதாகைகளுடன் நின்றிருந்த உறவினர்களைக் கவனித்து தனது வாகனத்தை நிறுத்தினார்.

தொடர்ந்து, உறவினர்களிடம் இருந்த பதாகைகளைப் பார்வையிட்டதுடன், அவர்கள் அளித்த கோரிக்கை மனுவையும் கனிவுடன் பெற்றுக்கொண்டார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அந்த மனுவில், தஹமீனாவின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அரசு சார்பில் முறையான பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

முதல்வர் உறுதி