பெருந்துறை தொகுதி தவெகவுக்கும் சவாலாக இருக்க கூடும் என உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்திருக்க, கள நிலவரம் எப்படி இருக்கிறது?
களத்தில் தவெக
காலியாக இருக்கும் திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான
இடைத் தேர்தல் விரைவிலேயே நடைபெற இருக்கிறது. ஜனவரியில் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், பெருந்துறை தொகுதியில் தற்போதே களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.
அதற்கு காரணம், உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட். பெருந்துறை தொகுதி தவெகவுக்கு சவாலாக இருக்கக் கூடும் என உளவுத்துறை கணிக்க, கால்களில் சக்கரத்தை கட்டிக் கொண்டு வேலை செய்ய தொடங்கியிருக்கிறது தவெக.
தவெக வேட்பாளராக...
2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெகவில் இணைந்த ஜெயக்குமார் தான் மீண்டும் தவெக சார்பில் போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அண்மையில் பெருந்துறைக்கு விசிட் அடித்த முதலமைச்சர் விஜய் கூட, ஜெயக்குமார் தோளில் கை போட்டு ரோட் ஷோ நடத்தினார்.
வேட்பாளர் யார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக கள வேலைகளும் வேகமெடுத்து வருகிறது.
2021, 2026ல் ஜெயக்குமார் வெற்றி
சட்டமன்ற பொது தேர்தலின் போது, பெருந்துறை தொகுதியில் தவெக 59 ஆயிரத்து 483 வாக்குகளுடன் மூன்றாம் இடம் தான் பிடித்தது என்ற நிலையில், தற்போதும் போட்டி கடுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தாராபுரம் தொகுதியை போல பெருந்துறையும் கவுண்டர் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக பட்டியலின மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
2021, 2026 என இரு தேர்தல்களிலும் பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார் தான் வெற்றி பெற்றார் என்ற நிலையில், வேட்பாளர் பலத்துடன் முதலமைச்சர் விஜய்யின் செல்வாக்கும் சேர்ந்து வெற்றிக்கு உதவும் என யோசிக்கிறது தவெக.
பெருந்துறை திமுக வேட்பாளர் யார்?
ஒரு பக்கம் தவெக தீவிரமாக கள வேலைகளில் ஈடுபட்டு வர, இன்னொரு பக்கம் திமுக, அதிமுகவில் குழப்பங்கள் தான் கும்மியடிக்கின்றன. பெருந்துறை தொகுதியில்ஒரு முறை கூட திமுகவின் உதய சூரியன் சின்னம் வெற்றி பெற்றது கிடையாது. ஒரே ஒரு முறை 1996 சட்டமன்ற தேர்தலில் மட்டும் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
இதனால், வருகிற இடைத் தேர்தலில் அறிவாலயத்தின் கவனம் பெருந்துறை பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுகவும் பெருந்துறை தொகுதியில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் தான் இருந்து வருகிறது.
பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக்கூறப்பட்டாலும், தாராபுரம், மதுராந்தகம் போல இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கவே கூடுதல் வாய்ப்பு என சொல்கிறார்கள். அந்த வகையில், நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என அரசல், புரசலாக பேசிக் கொள்ளப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு அறிவாலயம் வந்த திவ்யா சத்யராஜ், விரைவிலேயே நல்ல செய்தி வரும் என சூசகமாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக வேட்பாளர் யார்?
ஆனால், அதிமுகவின் நிலை தான் பரிதாபமாக இருக்கிறது. ஏற்கனவே, பெருந்துறை தொகுதிகளில் கோலோச்சி வந்தவர்கள் தற்போது தவெகவில் இணைந்து மீண்டும் போட்டியிடும் நிலையில், 2ஆம் கட்ட நிர்வாகிகள் கட்சி பதவியே போதுமானது என கழன்று கொள்கிறார்களாம்.
தேர்தலில் போட்டியிட யாருமே ஆர்வம் காட்டாததால் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என அதிமுக தலைமை குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறதாம். போதாக்குறைக்கு, தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டதை மனதில் வைத்துக் கொண்டு நிர்வாகிகள் பின் வாங்குவதிலேயே குறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட்டு பணத்தை செலவு செய்து தோற்றுப் போவதற்கு போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதே நல்லது என நினைக்கிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள். அதே நேரத்தில் வேட்பாளரை களமிறக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால், தனக்கு நெருக்கமானவர்களை தேர்தலில் நிற்க வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார் என்கின்றனர்.
வீடியோவைக் காண...