’ஆசைக்கு இணங்காவிட்டால் எப்ஐஆர் உன் மீதே பாயும், எந்த மூலையில் பதுங்கினாலும் நினைத்ததை அடையாமல் விடமாட்டேன்,’ என பெண்ணுக்கு கொ* மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது பொய் புகார் என டிஎஸ்பி பட்டும்படாமல் தன்தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
நிலப்பிரச்சனையால் தாக்குதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பட்டியலின பெண் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்களுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான சண்டையில், 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து ஜெராக்ஸ் கடை வைத்துள்ள பெண்ணை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
இதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி போலீசார் நேரில் வந்து புகார் பெற்றதோடு வாக்குமூலமும் வாங்கி உள்ளனர். ஆனால் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
டி.எஸ்.பி.யை சந்தித்த போது...
ஆனால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஹரிச்சந்திரன் என்ற காவலர் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேருக்கு நெருங்கிய உறவினர் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை என தெரிகிறது. அதன்பிறகு விழுப்புரம் டிஐஜியிடம் சென்று அந்த பெண் புகார் அளித்தார். பின்னர், டிஐஜி-யின் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசனிடம் புகாரளிக்க சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.
தனது மகன் மற்றும் வழக்கறிஞருடன் சென்ற பெண் 2 மணிநேரம் காத்திருந்துதான் கலையரசனையே சந்திக்க முடிந்தது. நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் பொறுமைகாத்த அந்த பெண்ணுக்கு அடுத்து பேரதிர்ச்சியே காத்திருக்கும் என அவர் துளியும் எதிர்பார்க்கவில்லை.
வழக்கை திசை திருப்பி...
அந்த பெண்ணின் வழக்கறிஞரை முதலில் டிஎஸ்பி வெளியே அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகு அவரது மகனையும் மிரட்டி அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தனியாக விசாரணை நடத்தியதாக தெரிகிறது. நிலப்பிரச்சினை தொடர்பான சண்டையில் தகாத வார்த்தைகளால் நீங்கள்தானே அதிகமாக திட்டுகிறீர்கள் என பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் இருந்த வீடியோவையே சுட்டிக்காடிய டிஎஸ்பி, அப்படி பார்த்தால் எப்ஐஆர் உங்கள் மீதுதானே போட வேண்டும் என வழக்கை திசைதிருப்பியதாக கூறப்படுகிறது.
கை வைத்த அதிகாரி
’அவர்கள் தாக்கியதால்தானே நான் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டேன்’ என அந்த பெண் கூற, தகாத வார்த்தைகளால் திட்டுவது நீங்கள்தான், உங்கள் மீது எப்ஐஆர் பதிவாகாமல் இருக்க தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் எனக்கூறியதோடு தவறான நோக்கத்தில் கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த பெண் கையை எடுத்துவிட்டபோது, உனக்கு வயது 40 உன் கணவருக்கு வயது 55, இருவருக்கும் எப்படி பொருத்தமாக இருக்கும் என தகாத முறையில் பேசியதாகவும் தெரிகிறது.
நடவடிக்கை இல்லை
இறுதியாக 20 நிமிடம் நேரம் தருகிறேன், யோசித்துச் சொல் என டிஎஸ்பி கூறியதாகவும், அதற்கு முடியாது என அந்த பெண் மறுத்ததால் தற்போதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அடுத்து, டிஜிபி அலுவலகம், சிஎம் செல், தலைமை செயலகம், தேசிய மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையம் என நீதி கிடைப்பதற்கான வழிகள் எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் புகார் அனுப்பி உள்ளார் அந்த பெண். ஆனாலும், பெயருக்குக்கூட சிறு நடவடிக்கை இல்லை என தெரிகிறது.
என்ன சொல்கிறார் டிஎஸ்பி?
இதுகுறித்து நியூஸ் தமிழ் செய்தியாளர், டிஎஸ்பி கலையரசனிடம் விளக்கம் கேட்டபோது, அது பொய் புகார், அந்த பெண்தான் ஆபாச வார்த்தைகளில் பேசி உள்ளார், அதனால் புகாரை குளோஸ் செய்துவிட்டோம் என லாஜிக்கே இல்லாமல் பேசியதோடு இணைப்பை துண்டிப்பதிலேயே குறியாக இருந்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் இறங்கி விசாரணை செய்தால் மட்டுமே மொத்த உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நீதி கிடைக்கும்.