பாலியல் புகார் அளித்த பெண் ஆட்சியர் உட்பட 84 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கும் காவல்துறை, கடைசியாக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை கைது செய்து 5 மணி நேரத்திற்கும் மேலாக துருவிதுருவி கேள்விகளை முன் வைத்து விசாரணை நடத்தியது.
பல மாதங்கள் கழித்து, நீதிமன்றம் தலையிட்ட பின்னர் FIR பதிவு செய்த போலீஸ், வழக்குப்பதிவு செய்து 3 நாட்கள் கழித்து ஒரு வழியாக கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை கைது செய்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் நீதிமன்ற தலையீடுக்கு பிறகு சூடுபிடித்திருக்கிறது. கடந்த 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரின் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு, எம்.எல்.ஏ., அருள் விக்னேஷுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
பணியிடத்தில் பாலியல் தொந்தரவு அளித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட, மறுநாளே போலீஸ் விரிவான விசாரணையில் இறங்கியது.
முதலில், எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை விசாரணைக்கு வர சொல்லி வீட்டுக்கே சென்று சம்மன் வழங்கியது காவல்துறை.
இதனிடையே, விசாரணை அதிகாரி திருப்பூர் எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. முதலில் பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதோடு, மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நீண்டது. அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷின் நடத்தை எப்படி இருந்தது? வேறு யாரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திய காவல்துறை, ஆட்சியருக்கான பாதுகாவலர், பி.ஆர்.ஓ., ஆகியோரிடம் கேள்விகளை முன்வைத்து வாக்குமூலம் பெற்றது.
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர், நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் நேரில் சென்று வியாழக்கிழமையன்று வாக்குமூலமும் அளித்திருந்தார்.
வீட்டில் எம்எல்ஏ கைது
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக மொத்தமாக 84 பேரிடம் துருவி துருவி விசாரணை நடத்திய போலீஸ், கடைசியாக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை கைது செய்தது.
முதலில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட போலீசார் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு சுமார் 50 மீட்டர் தூரத்தில் பேரிகார்டு போட்டு எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை, எம்.எல்.ஏ.,வின் வீட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனையடுத்து, விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் வந்து, எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை வீடு புகுந்து கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
எம்எல்ஏவுக்கு மருத்துவ பரிசோதனை
கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை, தியாகதுருகம் சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்ற போலீசார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனை நுழைவு வாயில் பூட்டப்பட்டு, 45 நிமிடங்கள் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்து, நள்ளிரவு 1 மணியளவில் காவல்துறையின் வாகனம் நீதிமன்றம் நோக்கி சென்றது. நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவிதத்தை தவிர்க்க சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, தங்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்ய, போலீசார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ன் பொறுப்பு நீதிபதி பானுமதி முன்னிலையில் அருள் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை டிசம்பர் 11ம் தேதி வரை கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் மாவட்ட ஆட்சியரின் பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.