மாணவிக்கு தொல்லை நியூஸ்தமிழ்24x7
கன்னியாகுமரி

தனியார் பள்ளி தாளாளர் செய்த அக்கிரமம், கதறும் கல்லூரி மாணவி

கவுன்சிலிங் என்ற பெயரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி தாளாளர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த மாணவியின் முன்னாள் கணவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Azhagiri Arumugam

வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை இருவரும் கைது செய்யப்படாத நிலையில், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி கண்ணீர் மல்ககோரிக்கை விடுத்துள்ளார்.

இளம்பெண்ணுக்கு

இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், கொட்டாரம் பகுதியை சேர்ந்த பெனானி ஜெபசிலின் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த இளம்பெண், உறவினர்களின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில், அவர்களே திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

ஆனால், இளம்பெண்ணுக்கு திருமண வாழ்க்கை ஒருமாதம்கூட நீடிக்கவில்லை. கணவர் தொடர்ந்து தன்னை சித்ரவதை செய்ததாக கூறி, அவரிடமிருந்து பிரிந்த இளம்பெண், 2024ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார்.

கவுன்சிலிங் என்ற பெயரில்...

தற்போது, நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் இளம்பெண்ணுக்கு, முன்னாள் கணவர் பெனானி ஜெபசிலின் மூலமாகவே புதிய பிரச்னை தொடங்கியிருகிறது. அதாவது, இளம்பெண்ணின் செல்போன் எண்ணை நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளரான அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஜெபசிங்கிடம், முன்னாள் கணவர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, ஜெபசிங் அடையாளம் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து இளம்பெண்ணை தொடர்புகொண்டுள்ளார். அந்த அழைப்பை எடுத்து பேசிய மாணவியிடம், தான் கவுன்சிலிங் வழங்கும் நபர் என அறிமுகப்படுத்தி கொள்ளவே, அதனை நம்பி மாணவியும் அவரிடம் பேசியுள்ளார்.

முன்னாள் கணவர்

உடலைத் தொட்டால்...

இதையடுத்து, கவுன்சிலிங் வழங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி, மாணவியிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பெற்றிருக்கிறார். ஆனால், கவுன்சிலிங் என்ற பெயரில் தொடங்கிய உரையாடல், நாளடைவில் பாலியல் ரீதியான தொல்லையாக மாறியதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார். கவுன்சிலிங் நேரத்தில் உடலை தொட்டால் அதனை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜெபசிங் கூறியதாக மாணவி தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஜெபசிங்கின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார். ஆனாலும், வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கிறார் ஜெபசிங்.

அதேபோல், தனது முன்னாள் கணவர் பெனானி ஜெபசிலினும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக இளம்பெண் தெரிவித்துள்ளார். இதனால், இருவரும் தனக்கு எதிராக செயல்படுவதாக கருதிய மாணவி, தன்னிடம் இருந்த செல்போன் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து காவல்துறையை நாடியுள்ளார்.

பள்ளி தாளாளர்

கைது செய்யப்படாதது ஏன்?

உள்ளூர் காவல் நிலையம் தொடங்கி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வரை பலமுறை நேரில் சந்தித்து புகாரளித்தும், ஆரம்பத்தில் தனது புகாரை அலட்சியப்படுத்தியதாக கூறிய மாணவி, தொடர்ந்து பலமுறை முறையிட்ட பிறகே, தனது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வேதனையோடு தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் பள்ளி தாளாளர் ஜெபசிங் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெனானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இருவரையும் போலீசார் தற்போது வரை கைது செய்யப்படாதது ஏன்? என மாணவி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நடவடிக்கை எடுக்க தயக்கமா?

மேலும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பின்னால் முக்கிய பிரமுகர்கள் இருப்பதால், காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா? என்ற சந்தேகமும் தனக்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, இருவராலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் தனக்கு காவல்துறையே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இளம்பெண் புகார்

கவுன்சிலிங் என்ற பெயரில் அறிமுகம். முன்னாள் கணவர் மூலமாக செல்போன் எண் கைமாற்றம். தொடர்ந்து பாலியல் தொல்லை புகார். என அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், வழக்கில் தொடர்புடைய இருவரையும் கைது செய்யக்கோரி மாணவி விடுத்துள்ள கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.