மதுரை

மலை உச்சியில் தீபம், CRPF கட்டுப்பாட்டில் தி.குன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சி கல் தூணில், இன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Azhagiri Arumugam

மலை உச்சியில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு எப்படி கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கல்தூணில் கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்திருக்கும் கல் தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அன்றைய தினம் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. மலை உச்சியில் தீபம் ஏற்ற சொல்லி உத்தரவு போட்ட நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் விசாரணைக்கு வந்தன.

மதுரை ஆட்சியர் விளக்க அறிக்கை

அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவின் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, கார்த்திகை தீபத்தன்று உச்சநீதிமன்ற உத்தரவுபடி மலை உச்சியில் தீபம் ஏற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது எனவும், ஆனால், அறங்காவலர் குழுவில் இருந்து யாரும் ஒத்துழைப்பு கொடுக்காததால் வழக்கமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆட்சியரின் விளக்கத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது வேதனை அளிப்பதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற தருணங்களில் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம் எனவும்கூறினர்.

ஆட்சியர் மீது குற்றச்சாட்டு

இன்னொரு பக்கம், மதுரை மாவட்ட ஆட்சியர் மீது மனுதாரர் தரப்பில் சரமாரியாக குற்றம் சாட்டப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமையை ஆட்சியர் புறக்கணித்து விட்டார் எனவும், தீபம் ஏற்றுவது தொடர்பாக அறங்காவலர்களுடன் உரிய ஆலோசனை நடத்தவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அறங்காவலர் குழுவுக்கும், தீபம் ஏற்றுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தீபம் ஏற்றாததை நியாயப்படுத்தவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது எனவும் வாதிடப்பட்டது.

மேலும், ஆய்வுக்கு சென்ற தங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டிய இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய படையை பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் எனவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

நீதிபதிகள் கடும் கண்டனம்

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவதில்லை என அறங்காவலர்கள் குழு திட்டவட்டமாக முடிவெடித்தது கண்டனத்திற்குரியது என்றனர்.

மேலும், அதிகாரிகள் உதவியுடன் நீதிமன்ற உத்தரவை அறங்காவலர் குழு மீறியிருக்கிறது எனவும்,நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியக் கூடாது என வேண்டுமென்றே முடிவு செய்தது போல இருக்கிறது எனவும்நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கோவில் மரபு என்ற காரணத்தைக் காட்டி தீபம் ஏற்ற மறுத்ததோடு மட்டுமல்லாமல், கோவில் மரபை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை என குற்றம்சாட்டும் தொனியில் அறங்காவலர் குழுவின் அறிக்கை இருப்பதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தீபம் ஏற்ற உத்தரவு

அதோடு, நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமையன்று உச்சிபிள்ளையார் கோவிலில் ஏற்றப்படும் தீபத்தைக் கொண்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்திருக்கும் கல் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், தர்ஹாவில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் பக்தர்கள் விளக்கு ஏற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பாரதி தலைமையில் குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொழுகை நடத்த தடையில்லை

தீபம் ஏற்றும் நடவடிக்கையின் போது கோயில் மற்றும் தர்காவின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு சிஆர்பிஎஃப்-க்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மலை முழுவதையும் சி.ஆர்.பி.எப்., கட்டுப்பாட்டில் ஒப்படைத்திருக்கிறது. தர்ஹாவைப் பாதுகாக்கவும், அங்கு வருகை தரும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்தத் தடையும் அல்லது தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் சி.ஆர்.பி.எஃப்-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தர்கா மற்றும் கோவில் பகுதியை வேறுபடுத்தும் விதமாக அந்த பகுதியில் வேலி அமைக்கலாம் என உச்ச நீதிமன்ற யோசனை தெரிவித்துள்ளது.

13 பேருக்கு நோட்டீஸ்

இதனிடையே, அனைத்து பக்தர்களையும் அனுமதிக்காமல் கோயில் நிர்வாகக் குழுவினர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை மட்டுமே விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறியது தொடர்பாக, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலைமைச் செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மதுரை ஆட்சியர் நிஷாந்த், மதுரை மாவட்ட எஸ்.பி., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், செயலாளர், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் தொடங்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிச.15ல் தலைமைச்செயலாளர் ஆஜராக உத்தரவு

மேலும், மலை உச்சியில் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அது தொடர்பான ஆவணங்கள் மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல் விபரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்வதோடு அடுத்த விசாரணை டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் எனவும், அன்றைய தினம் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு இடை நீக்கம்

நோட்டீஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அடுத்த விசாரணையின் போது நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தேவஸ்தான நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதால், அறங்காவலர் குழுவை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அறங்காவலர் குழுவிடம் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றம், கோவிலின் பாரம்பரியம், மத சடங்குகள் மற்றும் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும், தேவைப்பட்டால் கூடுதல் உத்தரவுகளுக்காக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

வீடியோவில் காணலாம்