மூர்த்தியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் சல்லடைபோட்டு சலித்த நிலையில் கனிமவள கொள்ளைக்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
கனிம வள முறைகேடு
மதுரை மாவட்டம், சத்திரவெள்ளாளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் சரளைக் கற்கள் மற்றும் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், அனுமதி பெறாத நிலங்களிலும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாகக் தெரிகிறது.
இதுதொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குவாரி குத்தகைதாரர் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிம வளங்களை வெட்டி எடுத்ததுடன், அனுமதி பெறாத நிலங்களிலிருந்தும் கனிம வளங்களை எடுத்துள்ளது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அரசுக்கு முதல் புகாரில் ரூ.2.32 கோடி, மற்றொரு புகாரில் ரூ.3.07 கோடி என மொத்தம் ரூ.5.39 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட விதம், அதற்கான அனுமதிகள், குவாரி தொடர்பான ஆவணங்கள் மற்றும் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பு உள்ளிட்டவைகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியிடம்...
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரை அய்யர் பங்களா பகுதியில் உள்ள எழில் நகர், ரோஜா வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் காவல்துறையினர் காலை 6 மணிமுதலே அதிரடி சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத குவாரி தொடர்பான ஆவணங்கள், முக்கிய ஆதாரங்கள் மற்றும் பொருட்கள் ஏதேனும் சிக்குமா? என்றநோக்கில் 4 மணிநேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்துள்ளது.
உறவினர் வீடுகளில் ரெய்டு
இதில், எந்த ஆதாரமும் சிக்கவில்லை என கூறப்படும் நிலையில் மூர்த்தியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் சோனையில் ஈடுபட்டனர். பாலமேடு பகுதியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ் வீடு, அலங்காநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் பொன்ராம் வீடு, பூவந்தி பகுதியில் உள்ள மூர்த்தியின் மைத்துனர் ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
இதனிடையே, சோதனையின்போது மூர்த்தியின் வீட்டின் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல், சோதனை நடைபெற்ற விவரத்தை அறிந்து திமுகவினரும் அவருடைய வீட்டின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே அதிகாரிகளின் சோதனை குறித்து பேசிய மூர்த்தி, சத்திர வெள்ளாளபட்டியில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தில் கல் குவாரி நடத்துவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்பேரில் ராஜாமணி, ஆனந்தராஜ் ஆகிய இருவருக்கும் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் அந்த நிலத்தில் எதிர்பார்த்த தரமான கற்கள் கிடைக்காததால், ஆனந்தராஜ் கடந்த 2021ஆம் ஆண்டிலேயே பணியை கைவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், ராஜாமணியும் எதிர்பார்த்த பலன் இல்லாததால் அடுத்த சிலமாதங்களிலேயே கைவிட்டதாக கூறிய மூர்த்தி, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கு அருகே உள்ள பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக கல் எடுக்கப்பட்டதாகக்கூறி தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கும் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் கூறினார்.
சட்டப்போராட்டம் - மூர்த்தி தகவல்
மேலும், அருகிலுள்ள நிலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் கல் எடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்ற விளக்கத்தை ஏற்கெனவே வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்துள்ளதாகவும், அதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகி, நிலத்தை முறையாக அளவீடு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் கூறிய மூர்த்தி, தான் சட்டவிரோதமாக மண் அல்லது ஜல்லி எடுத்ததில்லை என்றும் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் வாயிலாகவே தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறினார்.
வீடியோவில் காண...