விளையாட்டாக தொடங்கிய சம்பவம் உயிரிழப்பில் முடிந்த நிலையில், அதனை மறைக்க முயன்றதாக கூறப்படும் தாயின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 25ஆம் தேதியன்று விளையாட சென்ற சிறுவன் முத்துவேலுக்கு என்ன நடந்தது?
விளையாடப் போன சிறுவன்
மதுரை மாவட்டம், தனியமங்கலத்தை சேர்ந்த பெரியகருப்பன் - சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த 25ஆம் தேதி காலை 11 மணியளவில், வீட்டின் அருகேயுள்ள அடைக்கலம் காத்த அம்மன் கோயில் பகுதிக்கு விளையாட சென்றுள்ளான். ஆனால், மாலை 4 மணியை கடந்தும் சிறுவன் வீடு திரும்பாததால், பதறிப்போன பெற்றோர், உறவினர்கள் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடியும், கிடைக்காததால், கீழவளவு காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக 5 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இரவு முழுவதும் தேடியும் சிறுவனை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
சடலமாக மீட்பு
இதற்கு இடையே, திங்கள்கிழமை காலை 10.45 மணியளவில், சிறுவனின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தனியமங்கலம் ராஜங்கம் பகுதியில், ஆளில்லாத ஒரு பாழடைந்த வீட்டில் சிறுவன் முத்துவேல் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் படையினர் தீவிரமாக தடயங்களை சேகரித்தனர். சிறுவனின் உடல் கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில் அதிர்ச்சி
இதையடுத்து, அந்த பாழடைந்த வீட்டை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த சந்தியா என்ற 32 வயது பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர், தங்கள் பாணியில் துருவி துருவி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
விளையாட்டு வினையானது
சம்பவத்தன்று காலை கோயில் அருகே முத்துவேலும், சந்தியாவின் 10 வயது மகனும் ஒன்றாக விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, அந்த 10 வயது சிறுவன் விளையாட்டாக முத்துவேலின் கழுத்தில் கயிற்றை இறுக்கியுள்ளான். இதில், மூச்சுத்திணறிய முத்துவேல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோது மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளான்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கோயில் சுவரில் வாய் பலமாக மோதியதில், முத்துவேலின் முன்பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. அதன்பின்னர், காயமடைந்த முத்துவேல் அந்த 10 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளான்.
அப்போது, அந்த சிறுவனின் தாய் சந்தியா முன்னிலையிலேயே முத்துவேல் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
மகனைக் காப்பாற்ற...
தனது மகனின் செயலே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என்பதை அறிந்த சந்தியா, பதற்றமடைந்திருக்கிறார். தனது மகனை காப்பாற்ற வேண்டும், இந்த விஷயத்தை வெளியே தெரியாமல் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முத்துவேலின் சடலத்தை தூக்கி சென்று 200 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்துள்ளார். அதோடு, சம்பவம் தொடர்பான ஆதாரங்களையும் அழிக்க முயன்றது விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.
தாய் கைது
இந்த சம்பவம் தொடர்பாக, 10 வயது சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள நிலையில், குற்றத்தை மறைத்து, ஆதாரங்களை அழிக்க முயன்ற தாய் சந்தியாவை கைது செய்துள்ளனர்.
விளையாட்டாக தொடங்கிய ஒரு சம்பவம், ஒரு சிறுவனின் உயிரை பறித்து, மற்றொரு சிறுவனின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது, தனியமங்கலம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.