ஓட்டுநர் மரணம் தற்கொ*யல்ல திட்டமிட்ட கொ*யென பாலகிருஷ்ணன் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நிலையில் சிபிசிஐடி விசாரணையில் தங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லாததால் சிபிஐ விசாரிக்க வேண்டுமென உடலை பெறாமல் போராடி வருகின்றனர்.
மரணத்தில் சந்தேகம்
மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட கண்டெய்னர் லாரி ஓட்டுநர், அதிகாலையில் காவல் நிலைய கழிவறையிலேயே தூக்கில் தொங்கிய சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தேனி மாவட்டம் டி.அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநரான பாலகிருஷ்ணன் கடந்த 2ஆம் தேதி தேவாரம் பகுதியிலிருந்து மதுரைக்கு ஏலக்காய் லோடை லாரியில் ஏற்றிச்சென்ற போது தீவிபத்து நிகழ்ந்தது.
இந்நிலையில் சுமார் 10 நாட்கள் கழித்து அது தொடர்பான வழக்கை விசாரிக்க செக்காணூரணி காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட போது தான் இந்த மரணம் நேர்ந்துள்ளது. புகார்தாரர் பாலகிருஷ்ணனை இரவு முழுக்க காவல்நிலையத்தில் தங்க வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பி வரும் அவரது உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உடலை பெறாமல் விடாப்பிடியாக இருக்கின்றனர்.
போலீசாருடன் மோதல், தள்ளுமுள்ளு
இதனிடையே செக்கானூரணி காவல்நிலைய ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் பழனிவேல் ராஜன் மற்றும் பெண் காவலர் கலைச்செல்வி ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி கையில் எடுத்துள்ளது.
அதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூன்று காவலர்களும் நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீதி கிடைக்காமல் கூராய்வு முடிந்த பாலகிருஷ்ணனின் உடலை வாங்கப் போவதில்லை என, மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் போராடிய நிலையில் சாலையை மறித்தும் அமர்ந்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்ததால் களேபரமானது.
சிசிடிவி காட்சி வெளியீடு
இதனிடையே குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த ராஜா, செக்கானூரணி காவல் நிலையத்திற்கு இரண்டாவது நாளாக சென்று கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தினார். மேலும், பாலகிருஷ்ணன் உறவினர்கள் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களையும் மாஜிஸ்திரேட் ஆனந்த ராஜா விசாரணை நடத்தி விவரங்களை பதிவு செய்து கொண்டார்.
இதனையடுத்து லாரியில் ஏலக்காய் லோடு ஏற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளும், கடந்த 12ஆம் தேதி விசாரணைக்காக பாலகிருஷ்ணன் வரவழைக்கப்பட்ட போது அவர் உடல் சோர்வு காரணமாக காவல்நிலையம் அருகே படுத்துறங்கிய காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மனைவி, மகன், சகோதரர் கேள்வி
இதனிடையே, எரிந்த ஏலக்காய் மூட்டைகளுடன் கடலை மூட்டைகளும் கலந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், விபத்து காப்பீட்டிற்காக திட்டமிட்டு இவ்விபத்தை ஏற்படுத்திருக்கலாம் எனவும் அவரது மனைவி சுதா சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
இது தற்கொ*யே இல்லை எனவும் 6 அடி கழிவறையில் உயரமாக இருக்கும் தனது சகோதரனால் எவ்வாறு தூக்கிட்டு தற்கொ* செய்ய முடியுமென பாலகிருஷ்ணனின் சகோதரர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார்.
4 மணிநேரமாக போலீசார் டார்ச்சர் செய்து தாக்குதல் நடத்தியதோடு மட்டுமில்லாமல், கயிற்றால் தனது தந்தையின் கழுத்தை இறுக்கி கொ* செய்திருப்பதாகவும், அவரது மகன் பகீர் குற்றச்சாட்டுகளை கூறினார்.
சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் சிபிஐ விசாரணை கேட்டு உறவினர்கள், பாலகிருஷ்ணனின் உடலை பெறாமல் காவல்துறைக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். மேலும் அவ்வழக்கு தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும் உறவினர்கள் உறுதியாக நிற்பது செக்கானூரணியை பரபரப்பு களமாக்கியுள்ளது.
வீடியோவைக் காண...