உச்சநீதிமன்றம் உத்தரவு நியூஸ்தமிழ்24x7
மதுரை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்ன?

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் பல்வேறு நிபந்தனைகளுடன் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Azhagiri Arumugam

பல தடைகள், சட்டப்போராட்டம், அனல் பறக்கும் விவாதங்கள் என பல படிநிலைகளை கொண்ட இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் தீபம் ஏற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்ன? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன?

திருப்பரங்குன்றம் முதல் படை வீடு

முதல் படை வீடு திருப்பரங்குன்றத்தில்...

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது நிலத்தை அளவிடும் கல் தூண், இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்திலும் இதனை பார்க்கலாம் என்ற வாதம் இன்று, நேற்று நடப்பதல்ல 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் முடிவுக்கு வராத தொடர் வாதமாகும்.

மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே பேசுபொருளாக இருந்து வருகிறது.

தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு

இந்நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தனிநீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. அதனால் இந்த விவகாரம் நீதிமன்றப் போராட்டமாக உருவெடுத்தது.

தொடரும் வாதங்கள்

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட, அதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்ததுடன், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தீபத்தூணில் ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட நேரம் மட்டும் தீபம் ஏற்றுவதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேபோல், மலையில் உள்ள குறிப்பிட்ட தூண் தீபத்தூண் அல்ல, அது எல்லையைக் குறிக்கும் அளவீட்டுக் கல் தூண் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில்தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், தீபம் ஏற்றுவது தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மதுரை அமர்வு உத்தரவு

உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், இந்த அனுமதி இடைக்கால ஏற்பாடாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், வழக்கின் இறுதி முடிவாக இதைக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், கோவில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்றும் இடத்திற்குச் செல்ல வேண்டும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தீபம் ஏற்றும் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்ல அனுமதி கிடையாது, தீபம் ஏற்றும் நிகழ்வின்போது எந்தவிதமான முழக்கங்களும் எழுப்பக்கூடாது, அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதற்கு அனுமதி இல்லை, தீபம் ஏற்றும் நிகழ்வு எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெறத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அரசுக்கு அறிவுறுத்தல்

இதனிடையே, தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தீபம் ஏற்றும் நிகழ்வின்போது சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள நீதிமன்றம் தேவை ஏற்பட்டால் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதன்மூலம் கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும் என்பதை எதிர்பார்க்கலாம்.

சட்டப் போராட்டம், பல தடைகள், அனல் பறக்கும் வாதங்கள் என பல படிநிலைகளை கடந்து வெளியாகி உள்ள இந்த உத்தரவு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

அரசுக்கு அறிவுறுத்தல்

வீடியோவைக் காண...