கல் தூணில் தீபம் ஏற்ற தேவஸ்தானம் குழு அமைத்துப் பெயர்களைப் பரிந்துரைக்காததால் தான் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆட்சியர், தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கும் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறி உள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
இதுதொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், நவம்பர் 22ஆம் தேதி இரவு 7.28 மணிக்கே திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானத்துக்கும், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலருக்கும் 2 கடிதங்கள் அனுப்பியதாகவும், தீபம் ஏற்றும் பணியை தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும் கடிதத்தில் அறிவுறுத்தி இருந்தோம்.
அறங்காவலர் குழு தீர்மானம்
நவம்பர் 24 இரவு 7.32 மணிக்கு கோவில் நிர்வாகத்தின் செய்திக் குறிப்பு கிடைக்கப்பெற்றதும் செயல் அலுவலரை தொடர்பு கொண்டதாகவும், அன்று இரவு 8.30 மணியளவில் கோவில் செயல் அலுவலர் அறிக்கை ஒன்றை வழங்கியதாகவும், அதில் அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி இந்த ஆண்டும் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றவும், கோவிலின் பாரம்பரிய வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் கவனத்திற்கு...
இந்தத் தீர்மானத்தின்படிதான் மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. காலங்காலமாகப் பின்பற்றப்படும் மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அறங்காவலர் குழு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
வரலாற்றுத் தொடர்ச்சிக்கான ஆவணங்கள், ஆகம ஆதாரங்கள் மற்றும் கோவில் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆண்டும் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றவும், கோவிலின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது.
தொடர் முயற்சிகள்
தீபம் ஏற்றுவதற்கான நபர்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்ற உத்தரவு தேவஸ்தானத்துக்கு வழங்கியிருந்தது. இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களின் நடவடிக்கைக் குறிப்புகள், நவம்பர் 22ல் அனுப்பப்பட்ட கடிதங்கள், நவம்பர் 23ல் நடந்த கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளைத் தெரிவித்தது மற்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் கோவில் கண்காணிப்பாளர் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் எனத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுமட்டுமல்லாது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் செயலாளர் தலையிட வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனாலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மாறாக, வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. கல் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை நல்லெண்ணத்துடன் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக கூறியுள்ள மாவட்ட ஆட்சியர், நீதிமன்றத்தின் எந்த அறிவுறுத்தலையும் நான் வேண்டுமென்றோ அல்லது திட்டமிட்டோ மீறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மிக உயர்ந்த மரியாதை அளிப்பதாகவும், நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒவ்வொரு அறிவுறுத்தலையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளை ஆதார ஆவணங்களுடன் கூடுதல் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்வதாகக் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, முதல்கட்ட அறிக்கையை நீதிமன்றப் பதிவில் எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வீடியோவைக் காணலாம்