தினமும் கெட்டப்பை மாற்றிய இளைஞர் தலையில் அணிந்திருந்த தொப்பியை மாற்றாமல் இருந்ததால் சிக்கியது எப்படி? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மதுரையில் பேரதிர்ச்சி
கடந்த 12ம் தேதி அதிகாலை, மதுரையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லர்ஸின் கிளையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வைர நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தையும் போலீசார் ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகை கடையில் கட்டுமான பணி நிறைவடையாமல் அரைகுறையாக இருந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன் கட்டடத்தின் சாரத்தில் ஏறி, லிப்ட் வழியாக சென்று மூன்றாவது மாடியில் இருந்த தங்கத்தை பார்த்து, பார்த்து எடுத்து சென்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
அதிலும் குறிப்பாக ஸ்டோன் இல்லாத தங்க நகைகள், 916 ஹால்மார்க் நகைகளை மட்டுமே எடுத்து சென்றதோடு, சைரன் அடிக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டகத்துக்குள் இருந்த தங்க நகைகளின் பக்கமே கொள்ளையன் செல்லவில்லை என சொல்லப்படுகிறது.
தினந்தோறும் வந்த இளைஞர்
இதனிடையே நகைக் கடையில் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் நெருங்கியதாக கூறப்படும் நிலையில், யார்? என்பதை எப்படி கண்டு பிடித்தனர்? என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலீசார் நகை கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சல்லடை போட்டு ஆய்வு செய்த போது இளைஞர் ஒருவர் நாள்தோறும் பல்வேறு கெட்டப்பில் வந்து நோட்டமிட்டது தெரியவந்தது.
கடையில் நகை வாங்குவது போல் சென்று பல முறை நோட்டமிட்டதை உறுதி செய்த போலீசார், தலையில் தொப்பி மற்றும் கையில் கட்டுடன் சென்று நோட்டமிட்டதை உன்னிப்பாக கண்காணித்து யார்? என்பது குறித்து விசாரித்த போது பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த 5ஆம் தேதி கொள்ளை முயற்சிக்காக Trail பார்த்ததும் விசாரணையில் அம்பலமான நிலையில், அவர் அணிந்திருந்த தொப்பியை மட்டும் மாற்றாமல் அப்படியே வந்ததால் போலீசாரின் வலையில் வசமாக சிக்கியதாக கூறப்படுகிறது.
நகை கடையில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் இடங்களை துல்லியமாக தெரிந்து கொண்ட அந்த இளைஞன், நாள்தோறும் வாடிக்கையாளராக சென்று தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை தேடித்தேடி கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. முன்பே தேர்வு செய்ததால் தான் ஸ்டோன் வைத்த நகைகளை மட்டும் எடுக்காமல் அப்படியே விட்டு விட்டு மற்ற நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
ஆயிரம் கேமராக்கள் ஆய்வு
நகைகளை கொள்ளையடித்த பின் கட்டடத்தின் பின்பகுதியில் உள்ள சாரத்தின் வழியாக வெளியேறிய அந்த நபர், பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நகை கடையில் இருந்து பழங்காநத்தம் பகுதியில் உள்ள வீட்டிற்கு செல்லாமல் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்தது சுமார் ஆயிரம் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது வெளிச்சத்திற்கு வந்தது.
தடயங்கள் சிக்கின
தகவல் கிடைத்த உடனே வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் பெற்றோரிடம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டதோடு, வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது கொள்ளையடித்த நகைகளை முதலில் வீட்டிற்கு எடுத்து சென்ற அந்த இளைஞன், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதும் அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில் அவனது வீட்டில் இருந்து லேப்டாப், ஹார்டிஸ்க் மற்றும் சில தடயங்களை எடுத்து சென்றனர்.
வீட்டில் இருந்து தப்பிச்சென்ற அந்த இளைஞர் எங்கே சென்றார்? கொள்ளையடித்த நகைகளை எங்கே உள்ளன? என்பது குறித்து போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்திய நிலையில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் நண்பர்களுடன் அடிக்கடி சுற்றுலா சென்றது தெரிய வந்ததோடு, அதில் பயன்படுத்திய பைக்கில் கூட நம்பர் பிளேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.