அத்துமீறல் நியூஸ்தமிழ்24x7
மயிலாடுதுறை

மாணவர்களிடம் புகுந்த சாதிவெறி, ஆசிரியர் கொடூரத் தாக்குதல்

மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில், தலைமை ஆசிரியர் கண் முன்னே ஆசிரியர் ஒருவர் மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Azhagiri Arumugam

காயமுற்ற ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அறிவுக்கண் திறக்கும் ஆசானை வெறிகொண்டு தாக்கும் அளவுக்கு மாணவர்களின் கோவத்திற்கு காரணம் என்ன?

மாணவர்கள் வன்முறை

உயிரியல் ஆசிரியர்...

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவில் உள்ள எலந்தங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சதீஷ் என்பவர், கடந்த ஆறு வருடங்களாக உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவர்களின் ஒழுக்கத்தில் கெடுபிடி காட்டும் இவர், நண்பன் திரைப்படத்தில் வரும் வைரஸ் வாத்தியாராக மாணவர்களிடம் வலம் வருவதாக கூறப்படுகிறது.

சாதி ரீதியாக வாக்குவாதம்

ஆசிரியர் சதீஷுக்கும், அப்பள்ளியில் படிக்கும் அவரது சமூகத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஆதேஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதி ரீதியாக வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று வகுப்பறையில் ஆசிரியர் சதீஷுக்கும், மாணவன் ஆதேஷுக்கும் சாதி ரீதியாக தொடங்கிய மோதல், மதிய உணவு இடைவேளையில் வம்பாக மாறியுள்ளது.

சிங்கப்பெண் படை வருகை

சரமாரி தாக்குதல்

வகுப்பறையில் இருந்த மாணவர்களின் கேலிப் பேச்சால் மனமுடைந்த ஆசிரியர் சதீஷ், தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது, பின் தொடர்ந்து மாணவன் ஆதேஷும், அவருக்கு ஆதரவாக ஒருசில மாணவர்களும் தலைமை ஆசிரியர் அறை நோக்கி வந்தனர்.

அதனை, ஆசிரியர் சதீஷ் தமது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோது, சட்டென்று பாய்ந்த மாணவர் கூட்டம், தலைமை ஆசிரியர் கண் முன்னாலேயே ஆசிரியர் சதீஷை சரமாரியாக தாக்கியுள்ளது.

அடித்து நொறுக்கி வெறியாட்டம்

ஆத்திரம் அடங்காத மாணவர்கள் கூட்டம், ஆசிரியர் சதீஷின் வாகனம் மற்றும் சக பெண் ஆசிரியரின் பைக்குகள் என கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கி வெறியாட்டம் ஆடியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள், மாணவர்களை அமரவைத்து அறிவுரை கூறியதுடன், வழக்கு கேஸு என சிக்கினால், எதிர்காலம் பாழாகிவிடும் என எச்சரித்துள்ளனர்.

வாகனங்கள் சேதம்

அதிர்ச்சி சம்பவம்

இதற்கிடையில், மாணவர்களின் தாக்குதலால் காயமுற்ற ஆசிரியர் சதீஷ், கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ காட்சிகள், இன்றைய கல்விச் சூழல் எங்கே செல்கிறது என்ற பெரும் கேள்வியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வைரல்

வீடியோவைக் காண...