தூத்துக்குடி கிரைம் நியூஸ்தமிழ்24x7
ராமநாதபுரம்

பெண்களிடம் அத்துமீறினாரா? இளைஞர் உயிரிழப்பில் அதிர்ச்சி

ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, கை-கால்களை கயிறால் கட்டிப்போட்டு சிலர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.

Azhagiri Arumugam

இல்லாத பழியைபோட்டு அநியாயமாக கொ* செய்துவிட்டதாக இளைஞரின் உறவினர் கண்ணீர் வடித்தபடியே வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் கொ*வெறி தாக்குதல் நடத்தியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை-கால்களை கட்டிப்போட்டு பலர் சேர்ந்து அடித்த அடியில் குத்துயிரும் குலையுயிருமாக கிடந்த இளைஞர் உயிரிழக்க, ’தவறே செய்திருந்தாலும் அடித்துக் கொல்ல என்ன அதிகாரம் உள்ளது?’ என்பதே உறவினர்களின் கண்ணீர் குரல்.

ரிஸ்வான் ஆசிக் ரஹ்மான்

என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் லத்திப். இவரது 25 வயது மகன் ரிஸ்வான் ஆசிக் ரஹ்மான் அங்குள்ள ”500 பிளாட்” என்ற பகுதிக்கு சென்றதாகவும், ஆண்கள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த 45 வயதான பௌசியா, 42 வயதான அனிஷ் பாத்திமா, 40 வயதான செய்யது அலி பாத்திமா ஆகிய 3 பேரும் சேர்ந்து இளைஞரை தாக்கியதாகவும், பதிலுக்கு அந்த இளைஞரும் தாக்கியதாகவும், அதில் அனிஷ் பாத்திமாவின் 2 பற்கள் உடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஒன்று கூடி தாக்குதல்

இதையடுத்து, அவர்கள் கத்தி கூச்சல் போட்டதாகவும், சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ரிஸ்வானை சுற்றி வளைத்துப் பிடித்து, கை-கால்களை கட்டிப்போட்டு கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாது இளைஞரின் தலையில் ஆக்ரோஷமாக அடித்ததாகவும் தெரிகிறது.

தலையில் இருந்து ரத்தம் வடிய வடிய கிடந்த இளைஞரை அவர்கள் விடாமல் அடிக்க மயக்க நிலைக்கே சென்றார் ரிஸ்வான். அதன்பிறகுதான், அவர்கள் காவல்துறையினருக்கே தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆக்ரோஷ தாக்குதல்

உயிரிழந்த இளைஞர்

இதையடுத்து, அங்கு வந்த போலீசார் இளைஞரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறியதால் சிகிச்சையில் பலன் இல்லாமல் இளைஞர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட 3 பெண்கள், இளைஞரை தாக்கிய நபர்கள் என கீழக்கரை போலீசார் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோவில் அதிர்ச்சி

இதனிடையே, ரிஸ்வானின் அண்ணன் கண்ணீர் சிந்தியபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது தம்பி மீது தவறான முத்திரையை குத்தி, அநியாயமாக கொ* செய்துவிட்டார்கள் எனவும் போன் செய்து அந்த பெண்களே தான் வரவழைத்து இப்படி செய்துவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

தவறே செய்திருந்தாலும் காவல்துறையில் ஒப்படைப்பது தானே சரி, கை-கால்களை கட்டிப்போட்டும், மூளையில் இருந்து ரத்தம் கொட்டும் அளவுக்கும் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? பிள்ளையை இழந்து நிற்கும் தங்களுக்கு யார் பதில் சொல்வது? என வீடியோவில் கேள்வி எழுப்பி உள்ள ரிஸ்வானின் அண்ணன், கொ*க்கு காரணமான அத்தனைபேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ரிஸ்வானின் சகோதரர்

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இளைஞர்களின் உறவினர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதால் தாக்கியவர்கள் தரப்பில் உள்ளவர்களையும் தீர விசாரிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அதேநேரம், ஒரேநேரத்தில் இளைஞர் எப்படி 3 பேரின் வீடுகளுக்குள் செல்ல முடியும்? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.