நேர்மையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை பழி வாங்குவதற்காகவே, ரேஷன் அரிசிக் கடத்தல் கும்பலுடன் இணைந்து திட்டமிட்டு இந்த வழக்கு புனையப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலர்கள் கைது
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சேலம் சிவில் சப்ளைஸ் C.I.D. பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் ராஜலட்சுமி ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க 15 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்றதாக கூறி, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ரேசன் அரிசி கடத்தல்காரரான சக்திவேல் என்பவர் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஆடியோ உரையாடல்கள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் கைது நடவடிக்கையையே கேள்விக்குறியாக்கி உள்ளன.
கடத்தல் கும்பலுடன் தொடர்பு
சேலம் சிவில் சப்ளைஸ் C.I.D. பிரிவில் முன்பு ஆய்வாளராக பணியாற்றிய சங்கீதா மற்றும் அவரது ஓட்டுநர் புயல்ராஜன் ஆகியோர், ரேஷன் அரிசிக் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததை அடுத்து, கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றத்திற்கு மூல காரணம், சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவுக்கு புதிதாக வந்த சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் ராமகிருஷ்ணன் தான் என எண்ணிய ஆய்வாளர் சங்கீதா மற்றும் அவரது கார் ஓட்டுநரான புயல்ராஜன் சேர்ந்து, பழிவாங்க திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகமே, லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் கைது நடவடிக்கை என அம்பலமாகியுள்ளது.
ரேசன் அரிசி கடத்தல், கைது
இதற்கிடையில், சேலம் சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் ராமராஜன், உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் இணைந்து, சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரை ஆயிரத்து 200 கிலோ ரேசன் அரிசியை கடத்தியதாக கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி கைது செய்தனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, சக்திவேலுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, ஜாமினில் வெளியேவந்த சக்திவேலை கையில் எடுத்த பிரபல அரிசிக் கடத்தல் மன்னனான திருச்செங்கோடை சேர்ந்த வீரமணி, ஆய்வாளர் சங்கீதா, காவலர் புயல்ராஜன் ஆகியோர் ஒன்று சேர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தங்களது சதி திட்டத்தை நிறைவேற்றியது, வீரமணியின் கார் ஓட்டுநரான கவுதம் என்பவர், புயல்ராஜனுடன் பேசிய ஆடியோ ஆதாரங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சதி திட்டம் அரங்கேற்றம்
மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னரும், காவலர் புயல்ராஜன் ஆய்வாளர் சங்கீதாவுக்காக, தமது GPay கணக்கில் ரேசன் அரிசி கடத்தல் கும்பலிடமிருந்து பணம் பெற்றதாகவும், ஆத்தூர் சக்திவேலிடம் இருந்து 10 ஆயிரத்து 700 ரூபாய் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியவந்ததும், அதனை கண்டித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராதாகிருஷ்ணனை பழிதீர்க்கவே, ஆய்வாளர் சங்கீதா மற்றும் காவலர் புயல்ராஜன், ரேசன் அரிசி கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து சதிதிட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில், தாமும் சிக்கிக் கொள்வோம் என அஞ்சிய வீரமணியின் கார் ஓட்டுநரான கவுதம், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக எழுத்தர் பிரவீன்குமார் என்பவருடன் பேசிய ஆடியோவும் வெளியாகி, இந்த சதியில் சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கும் கூட்டுச்சதி இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
நேர்மையான அதிகாரிகளை பழி வாங்க...
மொத்தத்தில், காவல்துறையில் நேர்மையாக செயல்பட்ட சில அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்தில், அத்துறையில் உள்ள ஊழல் பேர்வழிகள், ரேசன் அரிசி கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து இருப்பதும், அதற்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் உள்ள சில காக்கிகளும் உடந்தையாக இருப்பது சேலம் மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிராக களமாடும் தவெக அரசு, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, காவல்துறையில் உள்ள ஊழல் பெருச்சாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.
வீடியோவில் பார்க்க...