சொந்த கட்சி நிர்வாகியை தற்கொ*க்கு தூண்டும் அளவுக்கு ராஜபிரகாஷின் ஆட்டம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்க, தலைமையின் மௌனம் தென்காசி தவெகவினரை மேலும் மேலும் காயப்படுத்தி வருகிறது.
தென்காசி தவெகவில்...
தென்காசி தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் மீதான புகார்கள் கணக்கே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அரசு பணிக்கு லஞ்சம், கட்சி பதவிக்கு பணம் வசூல் என எல்லா பக்கமும் வசூல் வேட்டை நடத்தி வரும் மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் குறித்து கட்சியினர் ஒவ்வொருவரும் பொது வெளியிலேயே ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் ராஜபிரகாஷ் ஆடும் ஆட்டம், பாரம்பரியமாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பயணித்து வரும் தவெகவினரின் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியிருக்கிறதாம்.
தொடரும் குற்றச்சாட்டுகள்
திமுகவில் இருந்து தவெகவில் இணைந்து தென்காசியில் போட்டியிட்ட ராஜபிரகாஷ், தேர்தலுக்கு ஓட்டு கேட்க கூட செல்லாமல் திமுகவுடன் டீலிங் பேசி வேலை செய்யாமல் இருந்தது தொடங்கி பணம் வாங்கிக் கொண்டு பதவி போடுவது, சாதி பார்த்து பதவி போடுவது என குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ராஜபிரகாஷ் குறித்து நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் பேசிய ஊத்துமலை ஒன்றிய செயலாளர் வேல்ராஜ் என்பவர், இனிமேலும் ராஜபிரகாஷ் மாவட்ட செயலாளராக நீடித்தால், உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை என மனமுடைந்து பேசினார்.
ஒன்றிய செயலாளர் வேல்ராஜுக்கு, மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்வில் வைத்து தலைமையே அடையாள அட்டை வழங்கி பொறுப்பு கொடுத்த நிலையில், பதவியை தக்க வைக்க வேண்டும் என்றால் 5 லட்சம் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுத்ததால் கட்சி தலைமையின் ஒப்புதல் இல்லாமலேயே ஊத்துமலையில் கூட்டம் நடத்தி, திமுக பின்னணி கொண்ட அருண்குமார் என்பவருக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
பொங்கி எழுந்த நிர்வாகி
ஒன்றிய செயலாளர்கள் ஏற்பாடு செய்யும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள மறுக்கும் மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ், கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு கலெக்சன் பார்க்கும் வேலையிலேயே குறியாக இருப்பதாக வேதனையை கொட்டி தீர்த்தார்.
அதோடு மட்டுமல்லாமல், இரு சமூக நிர்வாகிகள் இடையே சண்டையை மூட்டி விட்டு சாதி மோதலாக மாற்றும் வேலையிலும் ராஜபிரகாஷ் ஈடுபட்டு வருவதாக கூறிய ஒன்றிய செயலாளர், எப்படியாவது தலைமை கவனத்திற்கு கொண்டு சென்று ராஜபிரகாஷை மாற்றாமல் விட மாட்டோம் என ஆணித்தரமாக கூறினார். அதோடு, உள்ளாட்சித் தேர்தலுக்கும் மாவட்ட செயலாளராக ராஜபிரகாஷ் நீடித்தால், எழுதி வைத்து விட்டு உயிரைமாய்த்துக் கொள்வேன் என பொங்கி எழுந்தார்.
தலைமை கண்டுகொள்ளவில்லை
சொந்த கட்சி நிர்வாகி தற்கொ* குறித்து யோசிக்கும் அளவுக்கு மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் குடைச்சல் கொடுத்திருப்பது தென்காசி தவெகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. ராஜபிரகாஷ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நியூஸ் தமிழிலேயே பல செய்தித் தொகுப்புகள் வெளியாகி விட்டது. ஆனாலும் தவெக தலைமை கண்டு கொண்டது போல தெரியவில்லை. குறைந்தபட்சம் ராஜபிரகாஷை அழைத்து வார்னிங் கூட கொடுக்கவில்லை.
கட்சி நிர்வாகிகள் குமுறலில் ஆழ்ந்து கிடக்க, தலைமையோ மயான அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. தவறு செய்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்பது தவெக தலைமை உணர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அப்படி இல்லை என்றால், ராஜபிரகாஷ் மாதிரியான சில நிர்வாகிகளின் எல்லை மீறிய செயலால் மொத்த கட்சிக்கும் அவப்பெயர் தானாக வந்து சேரும்.
வீடியோவில் காணலாம்