திருப்பத்துார்

டேபிளில் DRINKS, சில்க் பாடலுக்கு டான்ஸ், பார்ட்டி MODEல் தவெக மாவட்ட செயலாளர்

வாணியம்பாடி தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமார் தனது நண்பர்களுடன் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி மதுபாட்டில்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

Azhagiri Arumugam

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால்தான் கட்சியில் பதவி என பெண்களிடம் ஆபாசமாக பேசி நவீன்குமார் தனிமையில் இருந்ததாக ஏற்கெனவே ஆடியோ வெளியாகி இருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் குழுக்களில் வலம் வரும் வீடியோவை கட்சி தலைமை கண்டுகொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில்...

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தவெக கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளவர்தான் நவீன்குமார். B.Tech படித்து முடித்துள்ள இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.

இதன் பலனாக, 2025ஆம் ஆண்டு வெளியான தவெகவின் மாவட்ட பொறுப்பாளர் பட்டியலில் நவீன் குமாரின் பெயர் இடம்பிடித்தது. அதன்பிறகு, மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பு, பளபளவென வெள்ளை ஆடை என பவுசாக வலம் வர ஆரம்பித்தார் நவீன்குமார். ஆனால், அந்த பவுசை வைத்து கொண்டுதான் பல சேட்டைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி ஆடியோவும், வீடியோவும் வலம் வருகிறது.

வெளியான ஆடியோ

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், திருப்பத்தூர் தவெக மாவட்டச் செயலாளராக இருந்த முனிசாமி மீது கட்சிப் பதவிகள் மற்றும் நியமனங்களுக்குப் பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு ஆடியோ, வீடியோ ஆதாரங்களும் வெளியாகின. அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், அவர் வெறும் அம்பு மட்டுமே எய்தியவரே நவீன்குமார்தான், கட்சிப்பதவிகள் மற்றும் நியமனங்களுக்காக அட்டைபோன்று பலரிடம் பணத்தை உறிஞ்சிவிட்டு முழுபூசணிக்காயையே சோற்றில் மறைத்து விட்டதாகவும், பழி முனிசாமி மீது மட்டுமே விழுந்துள்ளது எனவும் அந்தநேரத்திலேயே புகார் எழுந்தது.

மிரட்டலுக்கு பயந்து...

இதனிடையே, கடந்த 21ஆம் தேதி அட்வகேட் அலிம் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவீன்குமார் பற்றிய ஒரு ஆடியோ வெளியானது. தவெக மாவட்ட செயலாளர் பதவி ஆசைகாட்டி பல பெண்களிடம் ஆபாசமாக பேசி தனிமையில் இருந்துள்ளதாகவும், நகர மற்றும் ஒன்றிய பொறுப்புகளுக்கு பெரிய தொகையை வசூலிப்பதாகவும் அந்த ஆடியோவில் பேசும் ஒரு ஆண், நவீன்குமாரின் மிரட்டலுக்கு பயந்து பலர் ஆதாரம் இருந்தும் வெளியில் சொல்ல அச்சப்படுவதாகவும் கூறி உள்ளார்.

அதே ஆடியோவில் 2 பெண்களும் பேசி உள்ளனர். மேகலாவும், நவீன்குமாரும் சேர்ந்து செய்யும் லூட்டிதான் மொத்த தொகுதிக்கும் தெரியுமே எனக்கூறும் ஒரு பெண், அட்ஜெஸ்மென்ட் என்ற வார்த்தையால்தான் கட்சியில் புதிதாக பெண்கள் சேர்வதில்லை எனவும் ஏற்கெனவே இருந்த பெண்களும் விலகிவிட்டதாவும் கூறுகிறார்.

அதிலும், கட்சியில் பொறுப்பு வேண்டும் என கேட்ட ஒரு பெண்ணிடம் மேகலா என்ற பெண் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் கிடைக்கும், தனக்கே அப்படித் தான் கிடைத்தது எனக்கூறியதாக ஆடியோவில் பேசும் பெண், அப்படி ஒரு பதவியே வேண்டாம் என பொறுப்பு கேட்ட பெண் சென்றுவிட்டதாகவும் கூறுகிறார்.

வெளியானது வீடியா

இந்த ஆடியோ ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது வாட்ஸ்அப் குழுக்களிலும் நவீன்குமாரின் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் இயங்கி வரும் கடையில் இரவுநேரத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்திருக்கும் நவீன்குமார் மேஜையின் நடுவில் மதுபாட்டிலை வைத்துக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது, அவரது தனிப்பட்ட விஷயம் எனக்கூறி எளிதில் கடந்துவிட முடியாது எனக்கூறும் பொதுமக்கள் பொறுப்புள்ள பதவியில் உள்ள நவீன்குமார் அதன் பொறுப்பையே மறந்துவிட்டு இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நவீன்குமார் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் கட்சித்தலைமை அதனை கவனித்தால் தான் தொகுதியில் கட்சி அடுத்தகட்டத்திற்கு செல்லும் இல்லாவிட்டால் குறுகிய வட்டத்திற்குள்ளேயே நின்றுவிடும் எனவும் உள்ளூரில் உள்ள தவெகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.