தங்கம் வென்ற சிங்கம் என ஊரே கொண்டாடிய கபடி வீரரின் குடும்பம், கடந்த ஆட்சியாளர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பி, இருந்த பழைய வீட்டையும் இடித்துவிட்டு, இன்று ஒண்டுவதற்கு கூட சொந்த கூரையின்றி வாடகை வீட்டு வாசலில் நிற்கதியாய் நிற்கிறது.
திருவாரூர் கபடி வீரர்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் அபினேஷ். இவரது, தாய் தனலட்சுமி, தந்தை மோகன்தாஸ். அபினேஷுக்கு அபிநயா, அஜிதா என 2 தங்கைகள் உள்ளனர். சிறுவயதிலேயே மோகன்தாஸ் விபத்தில் பலியான பிறகு, குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தன் தோளில் சுமக்க தொடங்கினார் தனலட்சுமி.
பள்ளியில் சமையலராக பணியாற்றி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் 3 பிள்ளைகளையும் படிக்க வைத்து, மகனின் கபடி கனவுக்கும் உயிர் கொடுத்தவர் தனலட்சுமி. வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தாலும், ஆடுகளத்தில் புயலென சுழன்ற அபினேஷ், மாவட்ட, மாநில போட்டிகளில் பதக்கங்களை குவித்தார்.
இதன் உச்சமாக, கடந்த ஆண்டு பக்ரைனில் நடைபெற்ற 3வது யூத் ஆசியன் கபடி போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கி, தங்க பதக்கத்தை தட்டி தூக்கி தேசத்திற்கே பெருமை சேர்த்தார்.
அவரது இந்த வெற்றியை கொண்டாடிய வடுவூர் கிராம மக்கள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்
வீடு கட்டித் தருமா அரசு?
அபினேஷின் இந்த இமாலய வெற்றியை அறிந்த அப்போதைய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அவரது வீட்டுக்கே நேரில் சென்று பாராட்டினார். அப்போது, இடிந்து விழும் நிலையில் இருந்த அந்த ஏழை குடும்பத்தின் வீட்டை பார்த்த அமைச்சர், அரசு சார்பில் புதிய வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாக சொல்கிறார் அபினேஷின் தாய் தனலட்சுமி.
அமைச்சரின் வார்த்தையை வேத வாக்காக நம்பியது அந்த அப்பாவி குடும்பம். அரசாங்கம் புதிய வீடு கட்ட போகிறது என்ற நம்பிக்கையில், பல ஆண்டுகளாக தாங்கள் குடியிருந்த பழைய வீட்டையும் இடித்து தள்ளிவிட்டு, அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருக்கிறார்கள்.
ஆனால், வாக்குறுதி கொடுத்து மாதங்கள் பல உருண்டோடிவிட்டன. இடிக்கப்பட்ட வீட்டின் இடத்தில் ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதிகாரிகளின் மெத்தன போக்காலும், ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், சொந்த இடமிருந்தும், அதில் வசிக்க முடியாமல் வாடகை வீட்டில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தங்க பதக்க வீரரின் குடும்பம்.
வேதனையின் உச்சம்
ஒருபக்கம் வீட்டு வாடகை, மறுபக்கம் பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்பத்தின் அன்றாட தேவைகள் என பொருளாதார சுமை தனலட்சுமியை வாட்டி வதைக்கிறது.
இந்தியாவுக்காக தங்கம் வென்ற அபினேஷ், தற்போது சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரது 2 தங்கைகளும் தஞ்சை, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
கணவரை இழந்த பிறகும் மனம் தளராமல் 3 பிள்ளைகளையும் வளர்த்து, அவர்களில் ஒருவரை சர்வதேச அளவில் இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வைத்த அந்த தாய்க்கு, இன்று தனது குடும்பத்துடன் நிம்மதியாக வசிக்க ஒரு சொந்த வீடு இல்லாத நிலைதான் வேதனையின் உச்சம்.
தவெக அரசு முன் வருமா?
கடந்த திமுக ஆட்சி காலத்தில் அளிக்கப்பட்டதாக கூறப்படும் வீடு கட்டி தரும் வாக்குறுதி வெறும் அறிவிப்பாகவே முடிந்துவிட கூடாது என்பதுதான் அந்த குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அபினேஷின் குடும்பத்திற்கு விரைவில், சொந்த வீடு கட்டி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் தனலட்சுமி வேதனையோடு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மேடைகளில் பாராட்டப்பட்ட தங்க பதக்க வீரனின் குடும்பத்துக்கு, சொந்த வீட்டை அமைத்து கொடுக்க அரசு முன்வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வீடியோவைக் காணலாம்