பாதிரியாரின் பாலியல் லீலைகளால் இருதரப்பை சேர்ந்தவர்கள் மாறி மாறி ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் சூழல் உருவானது, தூத்துக்குடியை பதற்றத்தில் ஆழ்த்தியது.
எட்டு ஆண்டு கால காதல்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னோக், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 8 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள செல்வமாதா ஆலயத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமணத்தின் ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தபோது, ஜூன் மாதம் இன்னோக் கப்பல் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நவம்பர் 20ம் தேதி மனைவிக்கு பிடித்த அனைத்தையும் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால், மனைவி அவரிடம்முன்பு மாதிரி பேசவில்லை என கூறப்படுகிறது.
பாதிரியாருடன் தகாத உறவு
இதனால் அவர் மனைவி மீது சந்தேகமடைந்து மனைவியை நோட்டமிட ஆரம்பித்துள்ளார். கணவன் உறங்கிய பிறகு ஃபோன் பேசுவது, அடிக்கடி வாட்ஸ்அப்பை பார்ப்பது என மனைவி செல்போனில் மூழ்கிக் கிடந்ததை கண்காணித்த கணவருக்கு மனைவி மீது சந்தேகம் இன்னும் அதிகமாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மனைவி தனது செல்போனை வீட்டில் வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது மனைவியின் செல்போனை பார்த்த கணவருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. அதே பகுதியை சேர்ந்த பாதிரியாருடன் மனைவி கொஞ்சிக் குலாவி பேசி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன், மனைவியை சரமாரியாக தாக்கி இதுகுறித்து கேட்டுள்ளார். மனைவியும் இதனை ஒத்துக்கொள்ள கணவன் என்ன செய்வதென்று தெரியாமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினார்.
பாதிரியாருடன் மல்லுக்கட்டு
அதன்பிறகு, மது அருந்திய கணவன் தனது செல்போனை வீட்டில் வைத்துவிட்டு மனைவியின் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். கணவனின் செல்போனில் ஆட்டோமேட்டிக் ஆடியோ ரெக்கார்ட் இருப்பதை அறியாத மனைவி, ஃபாதர் ஷிவாகருக்கு போன் செய்து வீட்டில் நடந்த களேபரத்தை ஒப்பித்துள்ளார்.
இந்த ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுகுறித்து இன்னோக் தனது நண்பர்களிடம் கூறி அழுது புலம்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்களான பிரேம், ஜெயக்குமார் உள்ளிட்ட 5 பேர் நேராக பாதிரியாரின் பங்களாவிற்கு சென்று பாதிரியாரை அவதூறாக பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு இன்னோக் பாதிரியார் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் தகாத உறவு பிரச்னை என்பதால் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களை திரும்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிரியார் மிரட்டப்பட்ட விஷயத்தை அறிந்த அவரது ஆதரவாளர்கள் நேராக இன்னோக்கின் வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தினர். இதனால் அந்த இடமே களேபரமாக காட்சியளித்தது.
இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.