தேடுதல் வேட்டை தீவிரம்
செஞ்சி அருகே மாயமான சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் ஒருபக்கம் திணறிக் கொண்டிருக்க, காணாமல்போன சிறுமியை பற்றி தகவல் அளித்த பெண், ’ஏன்டா தகவல் சொன்னோம்,’ என்று மறுபுறம் புலம்பி தள்ளும் நிலைக்கு சென்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் மாயமான சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி கடந்த 25 நாட்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், இந்தத் தேடுதல் வேட்டை பல்வேறு கட்டங்களில் விரிவடைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில்...
கடலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாயமான சிறுமியை பார்த்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, அப்பகுதிகளை நோக்கி தமது விசாரணை கரங்களை நீட்டியுள்ளனர் சிபிசிஐடி போலீஸார்.
நாமக்கல் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளரான பவானி என்பவர், கடந்த மாதம் 23ஆம் தேதியன்று, சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில் அருகே சுமார் 35 மற்றும் 55 வயது மதிக்கத்தக்க இரு நபர்களுடன் மாயமான செஞ்சி சிறுமி இருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
தமது மகளின் செல்போனில் செஞ்சி சிறுமியின் புகைப்படத்தைப் பார்த்த உடனேயே, அது மாயமான சிறுமிதான் என்பதை உறுதி செய்து அவசர உதவி எண் 100க்கு தகவல் சொன்னதாக கூறியுள்ளார் பவானி.
சொன்னது குற்றமா?
இந்தத் தகவலின் அடிப்படையில், உள்ளூர் போலீசார் தொடங்கி, விழுப்புரம் மற்றும் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வரை சத்துணவு அமைப்பாளர் பவானியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீசாரின் தொடர் விசாரணையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார் அவர்.
மனிதாபிமான அடிப்படையில் தகவல் சொன்ன தம்மைப் பற்றி தேவையில்லாமல் தம்முடன் பணியாற்றும் அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், கல்வித்துறை அலுவலர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தியதாக ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் பவானி.
மொத்தத்தில், ’ஏன்டா நாம தகவல் சொன்னோம்,’ என்ற மனநிலைக்கு சென்றுள்ள அந்த சத்துணவு அமைப்பாளர், விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்த விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.