குற்றத்தை ஒப்புக் கொண்டால் ஆளுக்கு 2 லட்சம் ரூபாய் தருகிறோம் என குறுக்கு வழியில் சிபிசிஐடி டீல் பேசியதாக கூறப்படுவது, போலீஸ் மீதான நம்பிக்கையை சுக்குநூறாக்கியிருக்கிறது.
செஞ்சி சிறுமிக்கு என்ன ஆனது? என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வரும் காவல்துறை, சம்பந்தமே இல்லாத இளைஞர்களை பிடித்து அடித்து டார்ச்சர் செய்ய தொடங்கியிருப்பது அதிர்ச்சியை கிளப்புகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி மாயமாகி, 47 நாட்கள் ஆகிவிட்டது. முதலில் உள்ளூர் போலீசார் வழக்கை விசாரித்த நிலையில் பின்னர் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என ஆலம்பூண்டி கிராமமே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
சுமார் 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய காவல்துறை, விவசாய கிணறுகள், செங்கல் சூளைகள், காப்புக்காடு, வனப்பகுதி என எல்லா இடங்களிலும் சல்லடை போட்டு சலித்து தேடி பார்த்தது.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள், லாரி ஓட்டுநர்கள் என எல்லா கோணங்களிலும் விசாரணை நீண்டது. மோப்ப நாய், தடயவியல் துறை நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தியும் சிறுமிக்கு என்ன நடந்தது? என சின்ன துப்பு கூட போலீசுக்கு சிக்கவில்லை. சிறுமியின் குடும்பத்தினரிடமே பல கோணங்களில் பல முறை விசாரணை நடத்தப்பட்டு விட்டது.
ஆனாலும், எந்த திசையில் விசாரணையை முன்னெடுத்தாலும் போலீசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கும் கிணற்றில் போட்ட கல் போல அதே இடத்தில் தான் நிற்கிறது.
இந்த நிலையில், செஞ்சி சிறுமி வழக்கை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி இளைஞர்கள் 3 பேரை போலீஸ் டார்ச்சர் செய்வதாக எஸ்.பி., அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும் மனித உரிமைகள் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ரேனு, ராஜ்குமார், கமல்ராஜ் ஆகிய 3 இளைஞர்களையும் காவல் நிலையம் வரவைத்து ஆளுக்கு 2 லட்சம் தருகிறோம் என சொல்லி சிபிசிஐடி போலீஸ் டீல் பேசியிருக்கிறது.
அதோடு நிற்காமல் இளைஞர்களை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கைகளை கட்டி முட்டி போட வைத்து ஆடைகளை களைய சொல்லி அடித்து ஆசனவாயில் லத்தியை விட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் கூறியது திடுக்கிட வைத்தது.
போலீசார் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை சொன்னாலும் ஏற்காமல், வாய்க்கு வந்த ஆபாச வார்த்தையெல்லாம் வைத்து அசிங்கம், அசிங்கமாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது சிபிசிஐடி போலீஸ். தாகத்திற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் சித்ரவதை செய்த சிபிசிஐடி, பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவேன் என மிரட்டி பணிய முயற்சி செய்திருக்கிறது.
செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லி உடல் ரீதியிலும், மன ரீதியிலும் சிபிசிஐடி கொடுக்கும் டார்ச்சரால் பாதிக்கப்பட்ட கமல்ராஜ் என்ற இளைஞரின் குடும்பமே கண்ணீரில் ஆழ்ந்துள்ளது.
சிறுமிக்கு என்ன நடந்தது? என கண்டுபிடிக்க முடியாத சிபிசிஐடி, எப்படியாவது வழக்கை முடிக்க மட்டும் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக எந்த தவறும் செய்யாதவர்களை பிடித்து அடித்து உதைத்து குற்றத்தை ஒப்புக் கொள்ளசொல்லி நிர்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சிபிசிஐடி மீது விமர்சனம் எழுந்திருக்க, அந்த விமர்சன கறையை துடைக்க குறுக்கு வழியில் வழக்கை முடிக்க பார்ப்பது அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது.
இதனிடையே, சிறுமியின் தாய் பவானி மற்றும் எதிர்வீட்டு பெண் மஞ்சுளா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸ் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறுமியின் தாய் பவானியிடம் விசாரணை நடத்தினர்.
சிறுமியின் உறவினர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் 8 செல்போன்கள் சிபிசிஐடி போலீசார் வசம் ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலமாவது வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.