விழுப்புரம்

செஞ்சி சிறுமி மாயம், மூதாட்டி வாக்குமூலம், வீரியம் குறையாமல் விசாரணை

பிறந்த நாள் கொண்டாடிய மறுநாளே காணாமல்போன 7 வயது சிறுமி குறித்து 18 நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், சம்பவத்தன்று அதிகாலையில் தன் வீட்டுக்கதவை யாரோ 3 முறை தட்டியதாக மூதாட்டி ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Azhagiri Arumugam

சிபிசிஐடி தொடர் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி மாயமாகி 18 நாட்கள் ஆகிவிட்டது. பிறந்த நாள் கொண்டாடிய மறுநாளே காணாமல்போன சிறுமியை ஊரில் தேடாத இடமில்லை. விசாரிக்காத ஆட்களும் இல்லை. ஆனாலும், இதுவரை சிறிய துப்புக்கூட சிக்கவில்லை.

10 நாட்கள் காவல்துறை கையில் இருந்து கடந்த 8 நாட்களாக சிபிசிஐடி கையில் வழக்கு இருக்கும் நிலையில் வீடு வீடாக சென்று விசாரணை செய்து வரும் அதிகாரிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் மூலை முடுக்குகளைகூட சாதாராணமாக விடாமல் ஆராய்ந்துதான் வருகின்றனர்.

பெங்களூரு மாண்டியா பகுதியைச் சேர்ந்த ரேணு என்ற நபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆலம்பூண்டிக்கு வந்து தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். அவரிடம் மட்டுமே 4 முறை விசாரணை நடந்துள்ளது.

7 வயது சிறுமி

சிறுமியின் அழுகை சத்தம்

கரும்பு வெட்டுதல், போர் போடும் பணிகளை செய்துவரும் ரேணு, சிறுமி காணாமல்போன அன்றே காடுகரை, வயல்வெளி ஆகிய பகுதிகளில் உறவினர்களோடு சேர்ந்து ஒண்ணு மண்ணாய் தேடிய தன்னையே விசாரணை என்றபெயரில் பாடாய்படுத்துவதாக புலம்யிதாக சொல்லப்படுகிறது. மேலும், விசாரணையால் தன்னால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை எனவும்கூறிய ரேணு, காணாமல்போன அன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு சிறுமியின் அழுகை சத்தம் கேட்டதோடு, நாய் குரைக்கும் சத்தம் கேட்டதாக வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

விசாரணை வளையத்தில்...

இதனிடையே, மேல்மலையனூர் கிராமத்தில் பணியாற்றும் மகாராஷ்ரா மாநிலத்தை சேர்ந்த 5 வடமாநில தொழிலாளர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதேபோல், பெங்களூருவில் வீட்டுவேலை செய்துவரும் சிறுமியின் தந்தையின் உறவினரிடமும் விசாரணை நடந்துள்ளது.

ஒருவேளை சிறுமியை கடத்தி சென்று விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் சகோதரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த தினேஷ் மற்றும் அவரது தம்பி கார்த்திக், தாய் அஞ்சலை, தந்தை ராமன் ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது.

அதிலும், திடீரென சம்மந்தமே வேண்டாம் என அவர்கள் கூறியதாக சொல்லப்படுவதால் விசாரணை இன்னும் வலுத்துள்ளது.

சிறுமி மாயம்

இறுதிக்கட்ட விசாரணையில்...

சிறுமியின் தாயிடம் மட்டுமே 7 முறை விசாரணை செய்த அதிகாரிகள் சிறுமியின் தந்தை, சிறுமியின் சகோதரி படித்துவரும் தனியார் நர்சிங் கல்லூரியிலும் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரை மற்றும் அவரது நண்பர் ஆல்பர்ட் என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது.

இப்படி, வளைத்து வளைத்து விசாரணை செய்த அதிகாரிகள் இறுதிக்கட்ட விசாரணையில் உள்ளதாகவும், விரைவில் சிறுமி குறித்த தகவலை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூதாட்டி வாக்குமூலம்

இது ஒருபுறமிருக்க, சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள மணிமேகலை என்ற மூதாட்டியின் வாக்குமூலமும் விசாரணையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தனது மூத்த மகன் குமரேசன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், வாரத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்லும் அவர், சிறுமி காணாமல்போன அன்றும் வந்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு மீண்டும் ஊருக்கு கிளம்பியதாக கூறினார் மூதாட்டி.

குமரேசன் கிளம்பிய சிலநிமிடத்திலேயே தன்வீட்டுக்கதவை 3 முறை யாரோ தட்டியதாகவும், அச்சத்தில் நான் திறக்கவே இல்லை எனவும் கூறிய மூதாட்டி, விடிந்த பிறகுதான் சிறுமி காணாமல்போன விவரமே தெரிந்ததாகவும், தற்போது வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மூதாட்டி வாக்குமூலம்

குமரேசன் கல், மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து விவசாயத்தை பார்த்துவிட்டு செல்வதாகவும் கூறப்படும் நிலையில் அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சிறுமி காணாமல் போனதில் இருந்து ஊரில் உள்ள மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ள நிலையில் சிறுமியை விரைவில் கண்டுபிடித்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.