செஞ்சி சிறுமி மாயம்  நியூஸ்தமிழ்24x7
விழுப்புரம்

என்ன செய்கிறது சிபிசிஐடி? செஞ்சி சிறுமி எங்கு தான் உள்ளார்?

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் விசாரணைக்கும் பஞ்சமில்லை, தேடுதலுக்கும் குறைவில்லை, அப்படி இருந்தும் 3 வாரங்களாக எந்த துப்புமே கிடைக்காதது காவல்துறை மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் மீதான நம்பிக்கையையே எடைபோட்டு பார்த்துள்ளது. தீபாவளிக்கு முன்பு சிறுமியை கண்டுபிடித்து ஆலம்பூண்டி மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சில் பாலை வார்ப்பார்களா? என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Azhagiri Arumugam

எந்த தடயமும் இல்லையா?

ஒரு குற்றத்தைச் எவ்வளவு திட்டமிட்டு, எத்தனை நேர்த்தியாக செய்திருந்தாலும், இயற்கையின் விதிகளின்படி ஒரு சிறிய அணு அளவிலான தடயத்தையாவது குற்றவாளி விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்பது தான் குற்றவியல் விசாரணையின் மிக முக்கியமான ஒரு விதியாகவே பார்க்கப்படுகிறது.

அது, தலைமுடி, கைரேகை, காலடித் தடம், துணியின் இழை, ரத்தம், உமிழ்நீர் இப்படி ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

ஆனால், செஞ்சி சிறுமியின் வழக்கில் எந்த தடயமும் சிக்காதது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தடய அறிவியல் அறிஞர் எட்மண்ட் லோக்கார்ட் Edmond Locard-ன் தத்துவத்தையே அசைத்துப் பார்ப்பது போன்றுதான் உள்ளது.

சிபிசிஐடி விசாரணை

காவல்துறையால் முடியாதா?

விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் 3 வாரங்கள் கடந்துவிட்டது. பிறந்த நாள் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமியை காவல்துறையும், சிபிசிஐடி அதிகாரிகளும் தேடித்தேடி ஓய்ந்ததுதான் மிச்சம். எந்த ஒரு துப்பும் கிடைத்தபாடில்லை.

தூங்கி கொண்டிருந்த சிறுமியை விடிந்தும் விடியாமலும் யாரோ ஒருவர் கடத்திச் சென்றதாகவே இருந்தாலும், அப்படி அதிகாரிகள் கையில் பிடிபடாத அளவுக்கு அந்த கடத்தல்காரன் அசாத்திய திறமை கொண்டவனா? அப்படி ஒரு கடத்தல்காரனை காவல்துறையால் பிடிக்க முடியாதா? என்ற கேள்விதான் எழுகிறது.

கிராமமே சோகத்தில்...

ஒட்டுமொத்த தமிழகமே தீபாவளியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது மகளுக்கு மங்களகரமான மஞ்சள் நிறத்தில் புத்தாடையை வாங்கி வைத்தபடி ஹேமலதாவின் தாய் பவானியும் கண்ணீருடன் காத்துக் கொண்டுதான் இருக்கிறார். அதேபோல், கோவில்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்களை போட்டு பார்த்து தனது மகள் வருவாரா? வரமாட்டாரா? என அறிந்து தன் மனதுக்கு ஆன்மீக வழியிலும் சிறு ஆறுதலை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்.

பெற்ற தாய் ஒருபக்கம் இப்படி தவித்துக் கொண்டிருக்க, நமக்கென்ன தீபாவளி என அந்த கிராமமே சோகத்தில்தான் மூழ்கி கிடக்கிறது.

தொடர் விசாரணை

ஒருவரை விடாமல்...

சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சிறுமியின் சகோதரிக்கு பேசி முடிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார், சிறுமியின் சகோதரி படித்துவரும் நர்சிங் கல்லூரி, தங்கி இருந்து பணியாற்றிவரும் வடமாநிலத்தவர்கள், சந்தேகத்திற்கிடமான ரவுடிகள், அவர்களின் நண்பர்கள், சம்பவம் நடந்த அன்று சாலையில் கடந்து சென்ற வாகனங்கள், ஒரு சாமியார், ஆடு மேய்க்கும் நபர்கள், போக்சோ உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என ஒருவரை விடாமல் விசாரணை செய்த அதிகாரிகள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை உள்ளூர் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் காட்டியும் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

விசாரணை வளையத்தில்...

அதேபோல் ஆலம்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான நடுப்பட்டு, ரெட்டிபாளையம், சிக்காமேடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 13 நேஷனல் பெர்மிட் லாரி ஓட்டுநர்களும் விசாரணை வளையத்தில்தான் உள்ளனர்.

இத்தனை விசாரணை, இடைவிடாத தேடுதல் நடந்தும் சிறு தடயம்கூட சிக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமே. சிறுமிக்கு ஏதேனும் அசம்பாவிதமே நடந்திருந்தாலும் அதுகுறித்த தகவலாவது வெளியில் வந்திருக்க வேண்டும், அதுவும் இல்லை.

சிறுமி எங்கே?

நம்பிக்கையை இழக்கிறதா? அதிகாரிகளுக்கு தோல்வியா?

அதேபோல், வெளி மாநிலங்களுக்கு கடத்தியே செல்லப்பட்டிருந்தாலும் 23 நாட்கள் ஆகியும் எந்த ஒரு சிசிடிவி காட்சிகளும் காட்டிக் கொடுக்காதா? என்ற கேள்வியும் எழுகிறது. காவல்துறைக்கு மட்டுமல்ல சிபிசிஐடி அதிகாரிகளுக்கும் சவாலான சிறுமி வழக்கில் இனியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றால் இதனை அதிகாரிகளின் தோல்வி என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

இதுமட்டுமல்லாது, இனிமேலும் மக்கள் எப்படி காவல்துறை மற்றும் சிபிசிஐடி அதிகாரிகளை நம்புவார்கள் என்ற கேள்வியுமே எழுகிறது. இதனை எல்லாம் கருத்தில்கொண்டு சிறுமி வழக்கை அதிகாரிகள் கையாண்டால் தான் வழக்கும் அடுத்தகட்டத்தை எட்டும், மக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்.